சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி
சாரு பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழ்ச் சூழலில் நிலவும் அமைதியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டைப் பகைத்துக்கொண்டுவிடக் கூடாது. ஒருவர் இலக்கிய மடங்களோடு நெருக்கமாகவோ தொடர்பிலோ தூரத்து உறவாகவோ, குறைந்தபட்சம் பகைத்துக்கொள்ளாமலோ இருந்தாக வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த ஆதரவும் ஒருவருக்குக் கிடைக்காது. மேலும் அந்த தனிநபர் கடைசி வரை போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். சாரு விஷயத்தில் மட்டும் அல்ல. நானும் கண்டுகொண்ட விஷயம் இது. இந்த மடங்கள் இலக்கியத்துக்கு எவ்வளவு பங்காற்றியிருந்தாலும் இவை ஏகாதிபத்தியமாக உருவெடுத்துவிட்டால் சூழலுக்குப் பெருங்கேடு. எந்த மடத்துடனும் ஆதிபத்தியத்துடனும் நம்மை முழுக்க இணைத்துக்கொண்டுவிட்டோம் என்றால் நம் ஆளுமையின் மீது நாம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அர்த்தம். அதற்காகத் தனியாகவே செயல்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் கூறியவாறு அகலாது அணுகாது தீக்காய வேண்டும். அப்போதுதான் யாரையும் விமர்சிக்கவோ பாராட்டவோ நமக்கு தார்மீகம் ஏற்படுகிறது. இன்று சாரு நாளைக்கு யார் வேண்டுமானாலும். சொல்லப்போனால் சாருவுக்காக இல்லை: என்னைப் போன்றவர்களுக்காகவும் கூட அஞ்சியே நான் இன்று சாருவுக்கு ஆதரவு தருகிறேன். தமிழ் இலக்கிய உலகில் நிலவும் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்றால் அனைவருக்கும் அதிகாரப் பரவலாக்கம் நிகழ வேண்டும். அதற்கு எல்லா எழுத்தாளர்களும் எல்லா பதிப்பாளர்களும் பாடுபட வேண்டும். அவர் ஆக்கிரமிப்பு செய்கிறார்; இவர் முட்டுக்கட்டை போடுகிறார் என்று சில பதிப்பாளர்கள் என்னிடம் புலம்பியதுண்டு. ஆனால் வெளியே அவர்களால் சொல்ல முடியாது. அவர்களைக் குறைகூறவில்லை. அந்த அளவுக்கு ஒருசிலரிடம் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு குவிந்திருக்கிறது. காலம் நிச்சயம் மாறும். ஆனால் தானாய் மாறாது. சாருவை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; அவர் எழுத்தை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நாம் குரல்கொடுத்தே ஆக வேண்டும்.
– ஆசைத்தம்பி