இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வாட்ஸப்பில் வினித்தின் மெஸேஜ். பெட்டியோ நூறாவது பிரதியை வெளியிட்டு விட்டது பற்றி. நேற்று இரவு வரை கூட இந்த விஷயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாமலேயே இது வெளிவந்த காரணத்தை வினித் தன் குறிப்பில் விளக்கியிருக்கிறார். இன்னொரு விஷயம், வினித்தின் மெஸேஜ் வந்த நேரம் காலை ஐந்தரை. ஆனால் மெஸேஜில் குட்மார்னிங் என்பதற்குப் பதிலாக குட் நைட் என்று இருந்தது.
இந்த நாவல் என்.எஃப்.டி.யில் வெளிவருவதற்காக பல நண்பர்கள் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, வடிவமைப்பாளர், வினித், சீனி. இவர்களுக்கு நான் நன்றி சொல்வதை விட இந்த நூலின் என்.எஃப்.டி. விற்பனை மூலம் நீங்கள்தான் நன்றி சொல்ல முடியும்.
ஏன் என்.எஃப்.டி. என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன். தமிழ் சமூகம் தன் எழுத்தாளர்களை மிகப் பெரிய அளவில் கௌரவப்படுத்திக் கொண்டிருப்பதால் நானும் என் பங்குக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்த்து என் சமூகத்தை கௌரவப்படுத்த முயற்சி செய்ததன் விளைவே இந்த என்.எஃப்.டி. மூலமான விற்பனை. நாவலின் விலைப்பட்டியல் கீழே:
முதல் பிரதி 2 லட்சம் ரூபாய்
2ஆவது பிரதியிலிருந்து 9ஆவது பிரதி வரை 10000 ரூ.
பத்தாவது பிரதி ஒரு லட்சம் ரூபாய்.
11ஆவது பிரதியிலிருந்து 24ஆவது பிரதி வரை 10000 ரூ.
25ஆவது பிரதி – ஒரு லட்சம் ரூபாய்
26இலிருந்து 49 வரை 10000 ரூ.
50ஆவது பிரதி – ஒரு லட்சம் ரூபாய்.
51இலிருந்து 74 வரை 10000 ரூ.
75ஆவது பிரதி – ஒரு லட்சம் ரூபாய்.
76இலிருந்து 90 வரை – 10000 ரூ.
91 முதல் 99 வரை – ஒரு லட்சம் ரூபாய்.
100ஆவது பிரதி – 5,00,000 ரூபாய்.
நாவல் வெளிவருவதற்கு முன்பே முதல் பிரதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது நூறாவது பிரதியை மட்டும் வெளியிடுகிறோம். யு.எஸ். டாலரில் 6218. ரூபாயில் சுமாராக ஐந்து லட்சம் வரும். டாலர் என்பதால் ரூபாயில் கணக்குப் போட்டால் அன்றைன்றைக்கு விலை கொஞ்சம் முன்னே பின்னே போகும். லிங்க் தருகிறேன். வாங்க விரும்பும் நண்பர்கள் அதன் உள்ளே சென்று ஒரு வாலட் உருவாக்க வேண்டும். எல்லா படிகளையும் அதுவே இட்டுச் செல்லும். சந்தேகம் ஏற்பட்டால் வினித்தைத் தொடர்பு கொள்ளுங்கள். வினித்தின் தொலைபேசி எண்: +91 8438481241
நீங்கள் கொடுக்கும் இந்தப் பணம் என்னுடைய தென்னமெரிக்கப் பயணத்துக்கு உதவும் என்பதை மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
என்னுடைய ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு நாவல். பெட்டியோ என்ற இந்த நாவல் என்னுடைய சமீபத்திய இலங்கைப் பயணத்தின் விளைவு. இலங்கையில் நடந்த போர் பற்றி அதில் பங்கேற்ற சிலரின் அனுபவங்கள் நாவலில் உண்டு. அந்தப் போர் தங்கள் வாழ்வை என்ன செய்தது என்று சொல்லும் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரின் அனுபவங்களும் நாவலில் உண்டு. கூடவே காதலும் காமமும்.
நாவல் வாங்குவதற்கான லிங்க்:
https://tinyurl.com/petiyo100thCopy
பெட்டியோ பற்றி வினித் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது:
அதிரடி-சரவெடி-NFT (இலக்கிய தசரா)
“The premise of my work is brutal, but it does become gentler. ” – Pierre Guyotat
இந்த வாக்கியத்தை மனதில் கொண்டு மேற்படி செல்லவும். ஆதரவு x எதிர்ப்பு, நல்லது x கெட்டது இவை அனைத்தையும் தாண்டி இலங்கைக்கு செல்வதென்பது ஒவ்வொரு தமிழனுக்குமான கனவு. ஆனால் தமிழ் நிலத்தில் ஆயிரமாண்டு கால சாபம் ஒன்று இருக்கிறதல்லவா? குறிப்பாக மூன்றாம் உலக நாட்டில் என்ன கனவு வேண்டிக்கிடக்கிறது என்று கேட்பதுதானே நியாயம்? விருந்தோம்பல் தமிழர் பண்பு. சரி, எப்போதுமே எதார்த்தம் குரூரமாகத்தானே இருக்கும்? ஒரு எழுத்தாளரை – அதுவும் தமிழை பாரதிக்கு பிறகு புதுப்பித்த கலைஞனை நோகடித்தால் என்னவாகும்? (துருக்கியாக இருந்தால் நோபல் கிடைக்கும், இங்கிலாந்தாக இருந்தால் Peace prize கிடைக்கும்). தமிழில் அங்கிங்கெங்கானாதபடி ஒரு நாவலாக வரும். அதன் பெயர்தான் பெட்டியோ. நாவல் முழுவதுமே இடி, மின்னல், புயல், மழை, வெள்ளம்தான்.
சாருவின் அத்யநந்த வட்டத்தில் இருப்பதன் பலன் அவரின் எந்தவொரு ஆக்கத்தையும் உடனுக்குடன் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பு. அப்படி செவ்வனே வாசித்ததுதான் பெட்டியோ. சமீபமாக சாரு எழுதிக் கொண்டிருக்கும் புனைவுகள் ஆட்டோபிக்ஷ்ன் வகையைச் சார்ந்தவை. ராஸலீலாவிலிருந்தே ஆட்டோபிக்ஷ்னின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. அடுத்து ஏதாவது உண்டா என்று 2k kidsஇன் ஆர்வத்துடன் பார்க்கையில் ஹைட்ரஜன் குண்டாக வெளிவருகிறது பெட்டியோ. (குண்டு – இலங்கை, அவ்வுளவுதான். எனக்கு ஒன்றும் தெரியாது).
இது வேற ஆட்டம். இதற்குத் தாங்குமா இந்த ஜெனக்கூட்டம்? அதனால்தான் அதிரடியாக NFTயில் சாரு வருகிறார். அட்டகாசமான வடிவத்தில் ரத்தமும் சதையுமாக வருகிறது பெட்டியோ. சங்கத் தமிழ் முதல் பாப்லோ நெருதா வரை. இது நாவலா? மானுடவியல் ஆவணமா? கவிதைகள் நிரம்பிய பனுவலா? செய்திகளின் கோர்வையா? எழுத்தாளரின் வாக்குமூலமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குத்திக் கிழிக்கும் சாதிமத வெறியாட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமா? இது நாவலா? தெரியவில்லை.
சாரு வெள்ளந்தியானவர். உபர், ஓலா மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கும் சாருவுக்கும் நடக்கும் சம்பாஷனைகளை நினைவில் கொள்ளுங்கள். 1500 ரூபாய் அனுப்பச் சொன்னால் 15000 ரூபாய் அனுப்புபவர். அப்போது 15000 ரூபாய் என்றால்? இதற்கு மேல் சரிவராது. இவையெல்லாம் அன்றாட வாழ்வில். எழுத்து என்று வந்துவிட்டால் அசுரனாக மாறி நம் எண்ணங்களை அடித்து நொறுக்குகிறார். இல்லையென்றால் இந்த வைதீக கோஷ்டிகள் இந்நேரம் மூட்டை கட்டி இவரை நாகூருக்கு அல்லவா அனுப்பியிருப்பார்கள்?
இது வேற மாதிரிங்க. அவ்வளவுதான். இந்த சந்தோஷத்தைப் பொறுக்க மனமின்றி சாருவின் அனுமதியின்றி அராத்துவின் ஆலோசனையோடு தமிழின் முதல் நாவலான பெட்டியோவின் 100வது காப்பியை NFT வழியாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் எழுத்தாளர்களில் சாருவின் வாசகப்பரப்புதான் பெரியது. மற்றவர்களைப் போல் படாடோபம் செய்வதும் தலைவருக்குப் பிடிக்காது. ஸ்லீப்பர் செல்களாக உலகெங்கிலும் உள்ள வாசகர்கள், சாரு எழுவதற்கு முன்பே கூட ஆர்வத்தில் வாங்கிவிடவும் 2023% வாய்ப்பு உள்ளது. 100வது காப்பியை வாங்குவதற்கு லிங்க் முதல் கமெண்டில்.
வினித் குமார்
15/10/2023