மிக மும்முரமாக உல்லாசம், உல்லாசம் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நாவல் ரொப்பங்கி இரவுகள் நாவலைப் போல் அதிக ஆய்வுகளைக் கோரவில்லை. ரொப்பங்கி இரவுகளுக்காக நான் மிகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. படிக்க வேண்டிய நாவல்கள் மலை போல் குவிந்துள்ளன. இத்தனைக்கும் ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொரு நாவலைத்தான் படிக்கிறேன். எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமானால் ஆயுள் போதாது. ரியூ முராகாமியை மட்டும் முழுமையாகப் படித்து விட்டேன். அவருடைய படங்கள் இன்னும் ஒன்றிரண்டு பாக்கி இருக்கின்றன. ஆனால் உல்லாசம் அப்படி இல்லை.
இருபது பேரைக் கொண்ட கலைஞர்கள் மத்தியில் பதினைந்து நாட்கள் வாழ்ந்தேன். நியாண்டர்தால் மனிதனைப் போல் வாழ்ந்தேன் என்று சொல்லலாம். காடு மலை அருவி நதி என்று திரிந்தோம். பல சமயங்களில் ஆடையற்றிருந்தோம். ஒருத்தரும் நம்ப மாட்டார்கள் என்பதால் எல்லாமே ஒளிப்பதிவு செய்யப்பட்டன. இந்த இருபது பேரில் ஒரு பத்து பேர் உள்வட்டம். அத்தனை பேரும் அனார்க்கிஸ்டுகள். ஆனால் யாரையும் தொந்தரவு செய்யாதவர்கள். கலை மூலமாகத் தவிர வேறு எந்த வகையிலும் சமூக ஒழுங்குக்குப் பாதகம் விளைவிக்காதவர்கள். அன்பே வடிவானவர்கள். ஒரு விதத்தில் பார்த்தால் குழந்தைகள். அந்தப் பத்தில் ஐந்து பேர் பெண்கள் என்பதுதான் இந்த நாவலை முக்கியத்துவம் கொள்ளச் செய்கிறது. எல்லோரும் கல்வியில் சிறந்தவர்கள். ஆனால் உத்தியோகம், குடும்பம் என்று எந்தத் தளையிலும் சிக்க விரும்பாமல் இப்படிநாடோடியாய்த் திரிகிறார்கள். சினிமா எடுக்கிறார்கள். நாடகம் போடுகிறார்கள். கதை கவிதை ஓவியம். யாரிடமும் ஒரு பைசா இல்லை. எப்படியோ வாழ்கிறார்கள். தேவை கம்மி.
சுருக்கமாகச் சொன்னால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களின் வாழ்க்கை இது.
இன்னும் ஒரு பதினைந்து நாளில் நாவலை முடித்து விடுவேன். சீனியிடம்தான் முன்னுரை கேட்க வேண்டும் என்று தோன்றியது. வேறு யாரும் நம்ப மாட்டார்கள். அவரிடம் மட்டும்தான் நான் தைரியமாக ஒளிப்பதிவுகளைக் காண்பிக்கவும் முடியும். அவையெல்லாம் வெளியே போனால் எனக்கு நானே சமாதி கட்டிக் கொள்வதற்கு சமம். ஒருசில காட்சிகளை மட்டும் என்னைப் பற்றிய ஆவணப்படத்தில் சேர்க்க இருப்பதாக கேகே சொன்னார். இலங்கையில் வெளியிடப்பட இருக்கும் படம். பாதகம் இல்லை.
ஆனால் நாவலை அச்சு வடிவில் கொண்டு வருவதில் எனக்கு இன்னும் தயக்கம் இருக்கிறது. ராம்ஜி நான் தயார் என்று சொல்லி விட்டார். போர்னோகிராஃபி சட்டம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். அன்பு நாவலைப் போல் கமுக்கமாக இருந்தால் எனக்கு நல்லது. பிரபலம் ஆனால் எனக்கு சிக்கல். நாவல் பற்றி எழுதி விட்டதால் இனிமேல் புனைப்பெயரிலும் வெளியிட முடியாது. ஜார்ஜ் பத்தாய் தன் நாவல்களை யாருமே அறியாமல் புனைப்பெயரில்தான் வெளியிட்டார். நான் ஒரு ஓட்டை வாய். வெளியே சொல்லி விட்டேன். புனைப்பெயரில் வெளியிட்டிருந்தால் எனக்குத் தெரியாது என்று கையை விரித்திருக்கலாம்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், போர்னோ இரண்டு வகை. பாலியல் வேட்கையைத் தீர்த்துக் கொள்வதற்காக வெளிவரும் லட்சக்கணக்கான போர்னோ கதைகள் ஒரு வகை. இலக்கியம் சார்ந்த போர்னோ இன்னொரு வகை. உல்லாசம் இரண்டாம் வகை என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கமர்ஷியல் போர்னோ எழுதுவதற்கு நமக்கு என்ன தேவை இருக்கிறது? போர்னோகிராஃபி பற்றி சூஸன் சொண்டாக் எழுதியுள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். அல்லது, ரியூ முராகாமியின் தோக்யோ டிகேடன்ஸ் என்ற படத்தை மட்டுமாவது பாருங்கள். இலக்கிய போர்னோ பற்றிய தெளிவு கிடைக்கும்.
தமிழில் அனார்க்கிஸ நாவல் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உல்லாசம், உல்லாசம்… அனார்க்கிஸ வகை எழுத்தைத் தொடங்கி வைப்பதில் முக்கியமான பங்களிப்பைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இறுதியாக ஒன்று. முன்பெல்லாம் என்னை செக்ஸ் ரைட்டர் என்று சொன்னால் அடிக்கப் போவேன். இனிமேல் ஆமாம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உல்லாசம் ஒரு erotic நாவல். இலக்கிய போர்னோ வகையைச் சார்ந்தது.
நாள் முழுவதும் எழுதியதால் சோர்வுற்று இரவு Meet Joe Black என்ற மூன்று மணி நேரப் படத்தைப் பார்த்தேன். அருமையான பொழுதுபோக்குத் திரைப்படம். மிகவும் ரசித்தேன். இப்படிப்பட்ட படங்கள் கூட ஏன் தமிழில் வருவதில்லை என்று ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பத்தில் வரும் காதல் காட்சியும் ஒரு ஆச்சரியம். அமெரிக்காவில் கூட இப்படித்தான் ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்களா? அல்லது, இப்போது மாறி விட்டதா? புரியவில்லை.