சென்ற ஆண்டு புத்தக விழாவில் வெளியானது என்னுடைய நாவல் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு. அந்த நாவல் பற்றி பல பெண்கள் எனக்கு தம் வாழ்வையே மாற்றி அமைத்த நூல் என்று சொன்னார்கள். உண்மைதான். ஆண்களின் வாழ்வையும் மாற்றக் கூடிய நாவல்தான். ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும். ஆயிரம் பிரதி கூட விற்றிருக்காது என்று யூகிக்கிறேன். எத்தனை பிரதிகள் விற்றன என்று ஒருபோதும் என் பதிப்பாளர்களிடம் நான் கேட்டதில்லை. முந்நூறு நானூறு என்றே பதில் வரும் என்று தெரியும் என்பதால் அந்தக் கேள்வியை நான் கேட்க விரும்ப மாட்டேன். அந்த நாவலை தமிழ் தெரிந்த எல்லோருமே படிக்கலாம். அன்புக்கு முன்னால் வந்தது நான்தான் ஔரங்ஸேப். பேய் பிடித்தது போல் ஆறு மாதத்தில் எழுதிய ஆயிரம் பக்க நாவல்.
அடுத்து, அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கலகக்காரனின் உடல் என்ற நாடகம்.
அடுத்து, பெட்டியோ. என் நாவல்களில் ஆகச் சிறந்த படைப்பாக நான் கருதுவது அதைத்தான். என் சிருஷ்டிகர மனநிலையின் உச்சம் அது. முழுமையான பித்துநிலையில் எழுதிய நாவல். மூன்றே மாதத்தில் எழுதினேன். அன்பு நாவலை ஒரு மாதத்தில் எழுதினேன். ஆர்த்தோ நாடகமும் ஒரு மாதம்.
அடுத்து, உல்லாசம், உல்லாசம்… நாவல். இதை நான் பதினைந்து நாட்களில் எழுதினேன். இந்த நாவலின் ஆரம்பத்தில் இதை சிறுவர்கள், மரபு சார்ந்த பெண்கள், முதியோர் ஆகிய பிரிவினர் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறேன். அந்தக் காலத்தில் போருக்கு முன்னால் இந்த மூன்று பிரிவினரையும் அந்தணரையும் பசுக்களையும் ஊரை விட்டு வெளியேற்றி விடுவார்கள் இல்லையா, அது போலத்தான். உல்லாசம் நாவல் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஏன் என்று அந்த நாவலிலேயே விளக்கியிருக்கிறேன். ஏன் சகலருக்கும் ஆர்த்தோ நாடகம் பிடித்துப் போயிற்று என்ற காரணமும் உல்லாசம் நாவலில் உண்டு.
இவை தவிர, சமஸின் அருஞ்சொல் பத்திரிகையில் சமஸுடனான உரையாடல் அந்நியனுடன் ஓர் உரையாடல் என்ற தலைப்பில் நூலாக வருகிறது. சொல் கடிகை என்ற தலைப்பை மாற்றி விட்டேன். அது ”அந்த” சாராரின் தலைப்பு போல் இருப்பதாக வாசகர் வட்ட நண்பர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.
ஆக, மூன்று புதிய புத்தகங்களும் சென்ற ஆண்டு வெளிவந்த அன்பு, ஔரங்ஸேப் நாவல்களும் இந்தப் புத்தக விழாவில் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு நாவல்களை எழுதியிருக்கிறேன். அடுத்த ஆண்டு தியாகராஜா, ரொப்பங்கி இரவுகள் ஆகிய இரண்டு நாவல்கள் வெளியாகும். இரண்டு நாவல்களுமே மிக அதிக உழைப்பை கோருபவை. தியாகராஜா முக்கால்வாசி முடித்து விட்டேன். இரண்டுமே இரண்டு துருவங்கள் என்பதுதான் விசேஷம்.
பெங்களூருவில் சந்திப்போம். அங்கே முடியாவிட்டால் சென்னை புத்தக விழாவுக்கு நான் சென்னையில் இருக்கும் தினங்களில் வருவேன்.
charu.nivedita.india@gmail.com
அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் நாடகம் பற்றி ஒரு மதிப்பீடு:
இந்த நாடகப் பிரதியை படித்த முடித்த கையோடு Theatre Of Crueltyயை பற்றி கொஞ்சம் விரிவாக அறிய வேண்டும் என்கிற முனைப்பில் பல தளங்களில் தேடிப் படித்தேன். எல்லாத் தளங்களிலும் இருந்தும் நான் இறுதியாக பெற முடிந்த ஒன்று இதுவே –
“இந்த நாடகப் பிரதியில் பழக்கத்தில் இருக்கும் விழுமியங்களை எல்லாம் ஆர்த்தோ தன்னுடைய உடலின் வழியே தகர்ப்பதாகட்டும், கேளிக்கையை வழக்கமாக கொண்டிருக்கும் கோமாளி கூட இந்நாடக இயக்குனரின் வேண்டுதலின் படி பிரக்ஞையுடன் புரியும் கொலை ஆகட்டும், தற்போது நாம் வாழந்து வரும் கொடூரமான சூழலை உடைத்துக் காட்டும் ருராமுரி மக்களின் குரலாகட்டும் – இது போன்ற சில நுட்பமான விஷயங்கள் எல்லாம் வார்த்தைகளை விட செங்குத்தாகப் பாயும் ஒளிக்குப் பின், தாராஉமாராவின் இசைக்குப் பின்னும் நடுவிலும், பிணங்கள் சூழ்ந்த வாடையின் புழுங்கலின் பின்னர் தான் அரங்கேறுகிறது. இதன் வழியேதான் இந்நாடகப் பிரதி மையத்தில் இருந்து விலகி விடுகிறது. ஒரு கட்டத்தில் இந்நாடகத்தின் பார்வையாளர்களும் ருராமுரி மக்கள் ஆதிகாலத்தில் இருந்ததைப் போல ஆடைகளற்று விளக்கொளியில் அமர்ந்து கொண்டு ஆர்த்தோ அலறி அலறிப் பேசுவதை பிரக்ஞையோடு கேட்பதாக முடிகிறது இந்தப் பிரதி.
In the “Theatre Of Cruelty,” Antonin Artaud gives more importance to physical expressions, body gestures, sounds, and lights to enhance the text and bring the audience into the performance. This happened strongly in this play which makes to think more about the way Antonin handled the human body against the materialistic pleasures and its individualistic deprivation.
In the end, I came to know that ‘The tortured man has raised his voice for the soulless people in a strife-ridden society. And in this play, there’s a line which disturbs me – ‘சமூக அமைப்பின் வன்முறையை இப்படிப்பட்ட தனிமனித வன்முறைகளால் அழித்து விட முடியாது என்று நான் எத்தனை முறை சொல்வது?”
Thanks for this thought-provoking and much-needed text in this war-filled era!
இப்படிக்கு,
க. சிவசங்கரன்