டிசம்பர் 30 விழா மற்றும் சில குறிப்புகள்

டிசம்பர் 30 அன்று மாலை ஆறு மணிக்கு அல்சூரில் உள்ள பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தேவதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியிடப்பட உள்ளன. தேவதேவன் தமிழின் மகத்தான நவகவிகளில் ஒருவர். தமிழர்களின் சொத்து. தமிழின் பொக்கிஷம். ஐந்து கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவில் நானும் அபிலாஷ் சந்திரனும் தேவதேவனும் அராத்துவும் பேசுகிறோம். தமிழ்ச் சங்க அரங்கில் 300 பேர் அமரலாம். முப்பது பேராவது வருவார்களா, பத்து இருபது பேர் வந்தால் பார்க்க அசிங்கமாக இருக்கும் என்று தமிழ்ச் சங்க நிர்வாகி பலமுறை சொன்னாராம். அதனால் ஒரு நூறு பேராவது வந்தால்தான் மரியாதையாக இருக்கும். இப்படியெல்லாம் எழுத நேர்வது எனக்கே அசிங்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது. தயவுசெய்து சிரமத்தைப் பார்க்காமல் வாருங்கள். ஐந்து நூல்களையும் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் வெளியிடுகிறது.

முந்தாநாள் இரவு என் நண்பரைப் பார்த்துவிட்டு இரவு பன்னிரண்டு மணி அளவில் நண்பரின் வீட்டுக்கு எதிரே உள்ள என் ஓட்டல் அறைக்குத் திரும்பினேன். பாதுகாப்புக்கு வினித் கூட வந்து என்னை ஓட்டல் அறையில் விட்டுவிட்டுத் திரும்பினார். நான் அப்போது மிகவும் இறுக்கமான கால்சராய் அணிந்திருந்தேன். வழக்கமான ஜீன்ஸ் அணியவில்லை. அதனால் நண்பர் வீட்டில் தரையில் அமரும்போது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் உறுத்தியதால் அதையும் போனையும் வேப்பையும் எடுத்து அங்கே இருந்த ஸ்டூலில் வைத்தேன். காலையில் அறையில் எழுந்து பார்த்தபோது பேண்ட்டில் போன் இருந்தது. வேப் இருந்தது. பர்ஸ் இல்லை. நண்பரின் வீட்டில் நண்பரைத் தவிர வேறு யாரும் இல்லை. வேறு யாரும் வரவும் இல்லை. என் ஓட்டல் அறையிலும் நண்பரின் வீட்டிலும் சல்லடை போட்டுத் தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை. என் இறுக்கமான பேண்ட்டிலிருந்து கீழே விழவும் வாய்ப்பு இல்லை. நான் நண்பரின் வீட்டிலிருந்து கிளம்பும்போது பர்ஸை எடுத்து பாக்கெட்டில் வைத்ததைப் பார்த்ததாக கூட இருந்த வினித் சொல்கிறார். ஆனால் பர்ஸ் இல்லை. உடனடியாக வங்கி அட்டைகளைத் தடை செய்தோம். ஆதார் கார்டை வாங்க வேண்டும். வங்கி அட்டைகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். காசு ஒரு பத்தாயிரம் ரூபாய் இழப்பு. என் மன உலகில் இதுவரை பர்ஸ் என்ற சாதனம் வாழ்ந்தது இல்லை. நாம் சுவாசிக்கிறோம். சுவாசத்தைப் பற்றி நினைக்கவா செய்கிறோம்? அந்த மாதிரி. ஆனால் இனிமேல் என் மன உலகில் பர்ஸுக்கும் ஒரு இடம் கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது. இப்போதைக்கு ஜிபே மூலம் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

உரையாடலில் நான் பலஹீனமானவன். தமிழிலேயே அப்படி என்றால் ஆங்கிலத்தில் கேட்க வேண்டாம். நேற்று குல்க்கே தளத்தில் சித்ராவுடன் ஆங்கிலத்தில் உரையாடினேன். பாஸ் பண்ணிவிட்டதாகவே நினைக்கிறேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும். நேற்று பார்க்க முடியாதவர்கள் பின்வரும் இணைப்பில் அந்த உரையாடலைக் காணலாம்.

https://www.khulke.com/roundtable?id=65882b35126607034d6a6d57