நிரூபணம்

என் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்களுக்குத் தெரியும், நான் எழுத ஆரம்பித்த இருபத்தைந்தாம் வயதிலிருந்து ஐம்பதாவது வயது வரை என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பதிப்பகமும் என் நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட கொள்கை அடிப்படையில் வெளியிட மறுத்து விட்டார்கள். என்ன கொள்கை? அவர்களைப் பொருத்தவரை நான் எழுதுவது குப்பை. ஆனால் அப்படி மறுக்கும் அவர்களே நட்பு கருதி அதை அச்சடித்துக் கொடுத்து உதவினார்கள். பணம் மட்டும் நான் கொடுத்து விடுவேன். புத்தகத்தில் பதிப்பகத்தின் பெயர் வராமல் பார்த்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட தேவடியாளோடு பழகுவது மாதிரிதான் என்னோடு பழகினார்கள்.

உயிர்மை வந்த பிறகுதான் மனுஷ்யபுத்திரன் என் புத்தகங்களை பதிப்பிக்க ஆரம்பித்தார். பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்.

இப்போது பாருங்கள். ஆங்கிலத்தில் என் நாவல் வெளிவர நான் எழுபது வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஸீரோ டிகிரி, மார்ஜினல் மேன் எல்லாம் வந்தது. ஆனால் அதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஸீரோ டிகிரியாவது கொஞ்சம் தெரிந்தது. மார்ஜினல் மேனை சென்னையில் யார் வாங்கிப் படிப்பார்கள்? அவர்கள் அதைத் தமிழிலேயே படித்துக்கொள்ள முடியுமே? ஆக, மார்ஜினல் மேன் அண்ணா நகரை விட்டுத் தாண்ட முடியவில்லை. அதை விடுங்கள். ஔரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு ஹார்ப்பர் காலின்ஸால் வெளியிடப்பட்டும் அது இந்தியாவுக்கு வெளியே போகாது. இந்தியாவில் மட்டும்தான். வெளியே போக வேண்டுமானால் அதற்கு லிடரரி ஏஜண்ட்டைப் பிடிக்க வேண்டும். அதை விட கடவுளைப் பிடிப்பது சுலபம்.

அதனால் என் நண்பர்களே, நான் திரும்பத் திரும்ப நிரூபிக்க வேண்டியிருக்கிறது, தமிழ்நாட்டில் நான் ஒரு இலக்கிய சூப்பர் ஸ்டார் என்று. ஏனென்றால், தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் வெளியே நான் ஒரு பெயரற்றவன்.

எனவே, வர இருக்கும் ஹிண்டு இலக்கிய விழாவுக்குத் தவறாமல் வந்து விடுங்கள். தென்னிந்தியாவில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் வாருங்கள். நாம் யார் என்று சமூகத்துக்கும் உலகுக்கும் காண்பிக்க வேண்டும். சமூகம் என்னைப் புறக்கணிக்கிறது. ஆனால் என் வாசகர்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். அதை இந்த விழாவின் மூலம் உலகுக்குக் காண்பிக்க வேண்டும்.

விழாவில் கலந்து கொள்வதற்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும். கீழே இணைப்புகளைத் தருகிறேன். என்னுடைய அமர்வு 26ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு இருக்கிறது. கீழே உள்ள லிங்க் மூலம் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

https://www.thehindu.com/litfest/

Session Title: Breaking Form to Build Narrative: An experiment with translation

Date and Time: January 26, 2024; 5.05 to 5.55 pm

Conversation: 40 minutes

Audience Q&A: 10 minutes

Venue: The Hindu Pavilion, Lady Andal School premises