தஞ்சாவூர் கவிராயர் எழுதிய ஒரு கதையை என்னால் எந்த ஜென்மத்திலும் மறக்க இயலாது. அவர் வீட்டில் ஒரு கல்யாணமுருங்கை மரம். அந்த மரத்தின் இலைகள் தன் வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் காரில் விழுந்து பெரிய இம்சையாக இருக்கிறது, அதை வெட்டுங்கள் என்று அண்டை வீட்டுக்காரர் இம்சை தருகிறார். ஒரு கட்டத்தில் அண்டை வீட்டுக்காரரின் இம்சை தாங்க முடியாமல் போகவே தஞ்சாவூர் கவிராயர் அரிவாளை எடுத்துக்கொண்டு போய் தான் பிரியம் பிரியமாக வளர்த்த கல்யாணமுருங்கை மரத்தை வெட்ட அரிவாளை ஓங்கும் தருணத்தில் அவரைத் தேடி ஒரு முக்கியஸ்தர் வந்து விடுகிறார். வெட்டப் போன அரிவாளை வைத்து விட்டு வந்தவரை கவனிக்கப் போய் விடுகிறார் தஞ்சாவூர் கவிராயர்.
மறுநாள் போய் முந்தின நாள் விட்ட காரியத்தைத் தொடர எத்தனிக்கிறார் கவிராயர். பார்த்தால் கல்யாணமுருங்கை சுத்தமாகப் பட்டுப்போய் கிடக்கிறது. கவிராயருக்கு ஒரே ஆச்சரியம். அப்போது அவரது தர்மபத்தினி வந்து “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது, தகப்பனே தன்னை வெட்ட முனைந்து விட்டபோது இனி வாழ்ந்து என்ன என்று அது தன்னைத் தானே மாய்த்துக்கொண்டு விட்டது” என்கிறார்.
இது சர்வ நிச்சயமாக நடந்த கதையாகத்தான் இருக்கும். இதில் எனக்கு சந்தேகமே இல்லை.
என் வீட்டு பால்கனியில் பல மூலிகைச் செடிகள் உள்ளன. அதில் துளசியும் ஒன்று. நானோ அவந்திகாவோ மட்டுமே அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். வேறு யார் ஊற்றினாலும் அது பட்டுப்போய் விடும். கதைக்காகச் சொல்லவில்லை. நான் கண்டதைச் சொல்கிறேன்.
என் வீட்டு பால்கனியில் ஒரு குப்பைத்தொட்டி உண்டு. குப்பைத்தொட்டியை எங்கே நடுவீட்டிலா வைக்க முடியும்? அந்தக் குப்பைத்தொட்டிக்கு அருகே ஒரு செடி. குப்பைத்தொட்டியில் குப்பையைப் போடுவதற்காக தொட்டியின் கீழே உள்ள ஒரு பகுதியை காலால் அழுத்தி, மேல்மூடி திறந்ததும் குப்பையைப் போடுவேன். இப்படி ஒரு நாளில் ஒரு இருபது முறை நான் குப்பை போட வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் அந்த மூடி தொட்டியின் அருகே இருக்கும் செடியின் இலைகளின்மீது படும். மறுநாள் பார்த்தால் இலை வாடி காய்ந்து போய் இருக்கும். அதனால் நான் குப்பை போடும் ஒவ்வொரு முறையும் குப்பைத்தொட்டியின் மூடி இலையின் மீது படாமல் தொட்டியை முன்னுக்கு நகர்த்தித்தான் குப்பையைப் போடுவேன். இதற்காக நான் ஒவ்வொரு முறையும் குனிந்து தொட்டியை நகர்த்த வேண்டும். இது எனக்குப் பெரும் அசௌகரியத்தை அளித்ததால் ஒருநாள் குப்பைத்தொட்டி சுவர் ஓரமாக இல்லாமல் கொஞ்சம் முன்னுக்கே நகர்ந்தாற்போல் இருக்கலாமே என்று அவந்திகாவிடம் சொன்னேன். காரணத்தையும் விளக்கினேன்.
ஆனாலும் குப்பைத்தொட்டி பழையபடியே சுவர் ஓரமாகத்தான் இருந்தது. அவந்திகாவுமே தாவரங்களையும் விலங்குகளையும் நேசிப்பவள்தான். ஆனால் அதை விடவும் அவளுக்கு ஒழுங்கு முக்கியம் என்பதைக் கண்டு கொண்டேன். அதற்கு மேல் அவளிடம் அதுபற்றிப் பிரஸ்தாபிப்பதை விட்டுவிட்டு ஒரு நாளில் ஒரு இருபது முறை குனிந்து குனிந்து குப்பைத்தொட்டியை முன்னுக்கு நகர்த்தி குப்பை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் எப்போது பார்த்தாலும் குப்பைத்தொட்டி சுவர் ஓரமாகத்தான் இருக்கும்.
இதற்கும் இப்போது நான் சொல்லப் போகும் நீதிக்கதைக்கும் மேற்கண்ட விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
முந்தாநாள் ரிஷான் ஷெரீஃபின் புத்தகங்களை வாங்க புத்தக விழாவில் இருக்கும் எதிர் வெளியீடு அரங்கம் சென்றேன். புத்தகங்களை வாங்கினேன். பில் போட்டு பணமும் கொடுத்தேன். வழக்கமாக பில்லைக் கசக்கி என் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, பிறகு வீட்டுக்கு வந்து பால்கனியில் உள்ள குப்பைத்தொட்டிக்கு முன் குனிந்து அதை முன்னுக்கு நகர்த்தி பில்லையோ மற்ற குப்பைக் காகிதங்களையோ போடுவது வழக்கம்.
எதிர் வெளியீடு அரங்குக்குச் சென்றபோது கூடவே என் நண்பரையும் அழைத்துக்கொண்டு போனேன். எனக்கு எதையும் தனியாகச் செய்வது பிடிக்காது. கூட ஒரு ஆள் இருக்க வேண்டும். வருகிறீர்களா என்று கேட்டபோதே அவர் “நானும் வர வேண்டுமா?” என்று கேட்டுத் தயங்கினார். வாருங்களேன் என்றேன்.
பில் போட்டுப் பணம் கொடுத்த பிறகு பில்லைக் கொடுங்கள் என்றார் கூட வந்த நண்பர். பில்லைப் பார்த்து விட்டு, “என்ன இது, அனுஷ் உங்களுக்கு பத்து சதவிகிதம்தான் தள்ளுபடி கொடுத்திருக்கிறார்? எழுத்தாளர்களுக்கு முப்பது சதவிகிதம் கொடுக்கலாமே?” என்றார்.
எனக்கு சுருக்கென்றது. ஏனென்றால், நான் என் சக மனிதர்களையெல்லாம் சகோதரர்களாகக்க் கருதுவதில்லை என்றாலும் அனுஷை என் சொந்த சகோதரனாகவே கருதுபவன். அதற்கு ஒரு பிரத்தியேகமான காரணம் உண்டு. அது, நான் எந்தெந்த புத்தகத்தையெல்லாம் என் ஆன்மாவுக்கு நெருக்கமானவை என்று நினைக்கிறேனோ அந்தப் புத்தகங்களையெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டு விடுவார் அனுஷ். இத்தனைக்கும் அவரும் நானும் பேசிக் கொண்டதுகூட இல்லை. புத்தக விழாவில் பார்ப்பதோடு சரி. உதாரணமாக, நாத்திகனான இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய ஒரு புத்தகம் The Blinding Absence of Light என்ற நாவல். யாருக்குமே தெரியாத அந்த நாவலைக்கூட தமிழில் வெளியிட்டு விட்டார் அனுஷ். அதனால்தான் அவர் என் சகோதரர் என வரித்தேன்.
அந்தப் பத்து சகவிகித விஷயத்தை உடனடியாக எழுதிவிட்டேன். பெயர் குறிப்பிட்டே எழுதினேன். வேறு யாராகவாவது இருந்தால் பெயர் குறிப்பிட்டிருக்க மாட்டேன். அனுஷ் என்பதால், சகோதரர் என்பதால் குறிப்பிட்டேன்.
கடைசியில் பார்த்தால் அனுஷ் எனக்கு முப்பது சதவிகிதம்தான் தள்ளுபடி செய்து கொடுத்திருக்கிறார் என்பது நேற்று தெரிந்தது. கூட வந்த நண்பர் கணக்கில் பலஹீனம். தெரிந்ததும் உடனடியாக நான் எழுதியதை நீக்கிவிட்டு அனுஷிடம் ஓடிப் போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அவரும் பெருந்தன்மையாக “நீங்கள் என் mentor, இதற்கெல்லாம் போய் பெரிய வார்த்தை சொல்லாதீர்கள்” என்றார். குற்ற உணர்ச்சியுடன் திரும்பி விட்டேன்.
நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, எனக்குக் கொடுக்கப்படும் பில்லை இதுவரை வாழ்நாளில் ஒருமுறைகூட பார்த்தது இல்லை. ஆனால் என் கூட வந்த நண்பர் பார்த்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நண்பரின் நண்பரும் நானும் எனக்காகப் பூனை உணவு வாங்கப் போனோம். வாங்கிக் கொண்டு வந்து காரில் அமர்ந்தேன். நண்பர் “எங்கே பில்லைக் கொடுங்கள்” என்றார். வீட்டு பால்கனியில் போடுவதற்காக என் பாக்கெட்டில் வைத்திருந்த பில்லைக் காண்பித்தேன். ஹ்ஹ்ஹா என்று பெரிதாகச் சிரித்தவர் ”இந்த பூலோகத்திலேயே ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு பூனை உணவு வாங்கிய ஒரே மனிதர் நீங்களாகத்தான் இருக்கும்” என்றார். பில்லை வாங்கிப் பார்த்தால் 1300 ரூபாய் என்று இருக்க வேண்டிய இட்த்தில் 130000 என்று இருந்த்து. இரண்டு பூஜ்யங்கள் அதிகப்படியாகச் சேர்ந்திருந்தன. என் கைபேசியைப் பார்த்தேன். அதில் வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கழிக்க்ப்பட்டிருந்தது.
பிறகு கடைக்குப் போய் பேசி அந்த ஒரு லட்சத்து சொச்சத்தையும் திரும்ப வாங்கியது பெரிய கதை. உடனடியாகப் பணத்தைத் திருப்பினால் கடைக்காரரின் ஆடிட்டர் ஆட்சேபணை செய்வாராம். அதனால் பணத்தை உடனே திருப்ப முடியாதாம். கடைசியில் ஒருவழியாகக் கடைக்காரர் கொடுத்த காசோலை என் வங்கியிலிருந்து ”செல்லாது” என்று திரும்பி வந்து விட்டது. அப்போதுதான் முதல் முதலாக பயந்தேன். காசோலையின் பின்னால் நான் கையெழுத்துப் போட மறந்து விட்டேன். பிறகு எப்படியோ பெரும் தாமதத்துக்குப் பிறகு பணம் கிடைத்தது. இத்தனை கதையையும் அவந்திகாவிடம் வேறு சொல்லாமல் மறைக்க வேண்டியதாயிற்று. சொல்லியிருந்தால் அன்றைய தினமே பணம் கிடைக்காவிட்டால் கடைக்காரரை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாள். எனக்கும் ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். அவளிடம் சொல்லாததால் என் உயிர் தப்பியது.
ஒரு பில்லுக்குப் பின்னால் இத்தனை கதை இருந்ததால்தான் எதிர் வெளியீடு பில்லை நண்பர் பார்க்க வேண்டியதாயிற்று.
மன்னிப்பும் கேட்டாயிற்று. கதை முடிந்ததா என்றால் இல்லை.
இப்போது நண்பருக்கு மன உளைச்சல் ஆரம்பித்தது. ”இத்தனையும் என்னால்தானே என்று இரவு பூராவும் நித்திரை இல்லை. இனிமேல் உங்களோடு பேசவே போவதில்லை, பேசினால்தானே அதை எழுதுகிறீர்கள்? ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்னால் அது பற்றி ஓரிரு முறை சரி பார்த்துக்கொண்டு செய்ய வேண்டாமா?”