ஜெய்ப்பூர் இலக்கிய விழா

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது.

என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் நண்பர்கள் வரலாம். நுழைவுக் கட்டணம் 200 ரூ. இரவு நடக்கும் மது விருந்துக்கான நுழைவுக் கட்டணம் 13500 ரூ. சீனியும் வினித்தும் வருகிறார்கள். இரவு விருந்துக்கு இருவருக்குமான கட்டணத்தை ஏற்க விரும்பும் நண்பர்கள் (!) என்னையோ அவர்களையோ தொடர்பு கொள்ளலாம். இந்த இரவு விருந்து மிகவும் முக்கியம். ஏனென்றால், உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்களை சந்தித்துப் பேச இயலும். பகல் நேரத்தில் கடுகடு என்று இருக்கும் எழுத்தாளர்கள் உற்சாக பானத்தின் தயவினால் சற்று நெகிழ்ச்சியுடன் இருப்பதை பலமுறை கவனித்து இருக்கிறேன். கண்டமேனிக்கு எல்லோருடனும் பேசத் தயாராக இருப்பார்கள்.

ஹிந்து இலக்கிய விழா இரவு விருந்தில் செஸ் விஸ்வநாதன் ஆனந்த் மிகவும் தனியாக நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ட்டி.எம். கிருஷ்ணா பெருமாள் முருகனோடு பேசிக் கொண்டிருந்தார்.

ஜனவரி 31 ஜெய்ப்பூர் கிளம்புகிறேன். ஃபெப்ருவரி 6 சென்னை திரும்புகிறேன். உடனே ஃபெப்ருவரி 8 திருவனந்தபுரம் கிளம்புகிறேன். திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறேன். என் அமர்வு 10 அல்லது 11-ஆம் தேதியில் இருக்கும். 8, 9 தேதிகளில் வர்க்கலாவில் தங்கியிருப்பேன். வாசகர் வட்ட சந்திப்பும் 8, 9 தேதிகளில் வர்க்கலாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் வினித்தையோ சீனியையோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த முறை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. காலச்சுவடு கண்ணன், பெருமாள் முருகன், ஜெயமோகன், சுசித்ரா (மொழிபெயர்ப்பாளர்), அடியேன். ஜெயமோகன் மற்றும் பெருமாள் முருகன் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஜெயமோகனின் அமர்வு ஃபெப்ருவரி முதல் தேதியே இருக்கிறது. அதிர்ஷ்டக்காரர். அவரை அமெரிக்கர்களுடன் சேர்க்கவில்லை. எனக்குத்தான் அமெரிக்க உச்சரிப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.