ஒரு வரலாற்றுத் தருணம்

சென்னையில் நடந்த ஹிந்து இலக்கிய விழா, கோழிக்கோடு இலக்கிய விழா, ஜெய்ப்பூர் இலக்கிய விழா, திருவனந்தபுரத்தில் நடந்த மாத்ருபூமி இலக்கிய விழா நான்கும் முடிந்து விட்டது.  நாளை சென்னை வந்து விடுவேன்.  விழாக்கள் பற்றி சில தினங்களில்  எழுதுகிறேன். 

என்னைப் பற்றிய ஆவணப்படம் தெ அவ்ட்ஸைடர் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது.  ஆனாலும் அதில் இரண்டு விஷயங்களைச் சேர்க்க வேண்டும்.  ஒன்று, சீலே.  இரண்டு, பாரிஸ்.  அதன் பொருட்டு வரும் மார்ச் இறுதியில் நானும், நண்பர்கள் குமரேசன், செகந்தர், சீனி மூவரும் கிளம்புகிறோம்.  நண்பர்கள் அவர்கள் செலவில் வருகிறார்கள்.  என்னிடமும் கொஞ்சம் இருக்கிறது.  ஆனால் படப்பிடிப்புச் செலவுக்குப் பணம் இல்லை.  அதற்கு தனியாக ஐந்து லட்சம் ரூபாய் ஆகும்.  இந்த ஐந்து லட்சத்தை தங்களால் முடிந்த நண்பர்கள் பகிர்ந்து ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.  பத்தாயிரம் ரூபாயிலிருந்து எத்தனை வேண்டுமானாலும் அனுப்பலாம்.  ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் அனுப்புபவர்களின் பெயர் படத்தின் டைட்டில் கார்டில் சேர்க்கப்படும். 

நான் சீலேயில் இருந்து கொண்டு பணம் கேட்ட போது எனக்கு யார் என்றே தெரியாத நண்பர்கள் ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பினார்கள்.  அனுப்பாதிருந்தால் நான் சாந்த்தியாகோவின் தெருக்களை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.  அப்படி இல்லாமல் வாசகர்கள் அனுப்பிய ஐந்து லட்சத்தில்தான் தென் சீலே முழுக்கவும் சுற்றினேன்.  இந்த முறை வட சீலே.  நூல்களின் விற்பனை மூலம் எனக்கு வந்து சேரும் பணம் அத்தனையும் ஆங்கில மொழிபெயர்ப்புக்குச் செலவாகி விடுகிறது.  இதுவரை மொழிபெயர்ப்புக்காக மட்டுமே இருபது லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறேன்.  மொழிபெயர்ப்பின் மூலமாக மட்டுமே நான் தமிழ்நாட்டு எல்லையைக் கடக்க முடியும். 

பல நண்பர்கள் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.  நீங்கள் உங்களை ஞானி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.  ஆனால் ஏன் புக்கர் விருது வாங்குவதற்கு முனைப்பாக இருக்கிறீர்கள்?  ஒரே காரணம்தான்.  என் எழுத்து தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல.  அது ஒட்டு மொத்த மானுட குலத்துக்கானது.  அதனால்தான் புக்கர்.  அது இல்லாமல் இந்திய எல்லையை விட்டுத் தாண்டுவது சாத்தியமே இல்லை. 

இப்போது இந்த எழுபது வயதில்தான் ஹார்ப்பர்காலின்ஸ் என்ற பிரபலமான பதிப்பகம் மூலம் வெளியே சென்றிருக்கிறேன்.  வெளியே என்றால் தமிழ்நாட்டுக்கு வெளியேதான்.  இந்தியாவுக்கு வெளியே இல்லை.  அதற்கு நான் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.  வடக்கில் டெலகிராஃப் போன்ற பத்திரிகைகளில் மதிப்புரைகள் வந்து கொண்டிருக்கின்றன.   மார்ஜினல் மேன் நாவலை பிரபலமான பதிப்பகத்தின் மூலமாக வெளியிடவில்லை என்பதால் அது யாருடைய கவனத்துக்கும் செல்லவில்லை.  ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆரம்பத்தில் சர்வதேச அளவில் சென்றிருந்தும், அதற்கு மறுபதிப்புகள் இந்திய அளவில் வரவில்லை. 

என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், காமரூப கதைகள், பலராலும் சிலாகிக்கப்பட்ட ராஸ லீலா, தேகம், அன்பு: ஒரு பின்நவீனத்துவ்வாதியின் மறுசீராய்வு மனு, பெட்டியோ போன்றவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேச்சே இல்லை. 

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஒரு வட இந்திய நண்பரிடம் நான் 130 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்றேன்.  பக்கத்தில் இருந்த ஒரு தமிழ் நண்பர் பகபகவென சிரித்து விட்டு, “நீங்கள் அறுபது நூல்கள்தானே எழுதியிருக்கிறீர்கள், என்ன இப்படி 130 என அடித்து விடுகிறீர்கள்?” என்று கேட்டார். போதையில் உளறுகிறேன் என அவர் நினைத்திருக்கலாம்.  அறுபது நூல்கள் எழுதியவர்களே உலக அளவில் டஜன் பேர்தான் இருப்பார்கள்.  அதுவும் தவிர, அறுபது என்பதே தவறான தகவல்.  அச்சில் என் புத்தகங்கள் எழுபதுக்கு மேல் வெளிவந்திருக்கின்றன.  என் இணையதளத்தில் தொகுக்கப்படாமல் இருக்கும் கட்டுரைகள், கதைகள் எல்லாம் ஒரு அறுபது நூல்கள் காணும்.  தொகுக்கப்படாவிட்டால் அவையெல்லாம் என் கணக்கில் வராதா என்ன?  உயிர்மையில் எழுதி வந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் வாக்கில் என் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை அதன் பொருள்வாரியாகத் தொகுத்து ஜனவரி புத்தக விழாவில் பத்து நூல்களாக வெளியிட்டு வந்தார் ஹமீது.  இப்போது அதற்கெல்லாம் காயத்ரிக்கும் நேரம் இல்லை, எனக்கும் நேரம் இல்லை.  அதனால்தான் என் இணையதளத்தில் உள்ள அனைத்தும் தொகுக்கப்படாமல் இருக்கின்றன. கொரோனா காலத்தில் தொடர்ந்து 150 தினங்கள் 150 கட்டுரைகள் எழுதினேன்.  அவையெல்லாம் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இருப்பவை.  பூச்சி என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வந்தன.  இன்னும் இரண்டு தொகுப்புகளுக்கான பூச்சி கட்டுரைகள் உள்ளன.  தொகுக்க வேண்டும். 

எல்லாவற்றையும் தொகுத்தால் 130 அல்ல, 200 நூல்கள் கூட வரும்.  இதுவே தமிழில் கம்மி.  ஏனென்றால், ஜெயமோகனைத் தொகுத்தால் 500 நூல்கள் வரும்.   

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இது போன்ற சாதனைகளை உலகில் எந்த எழுத்தாளரும் செய்தது இல்லை.  தமிழில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.  வெளிமாநிலத் தோழி ஒருவர் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வயது முப்பத்தைந்து இருக்கும்.  சென்ற ஆண்டு மட்டும் இருபத்தாறு இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டதால் எழுதவே நேரம் இல்லாமல் போய் விட்டது என்றார்.  ஆனால் 130 நூல்களை எழுதியிருக்கும் என்னை இதுவரை எந்த இலக்கிய விழா அமைப்பும் அழைத்தது இல்லை.  நானாகவே சென்று ’நான் வர விரும்புகிறேன்’ என்று சொல்லித்தான் சென்று கொண்டிருக்கிறேன்.  ஏனென்றால், இந்த எழுபது வயதிலாவது நாம் தமிழ்நாட்டை விட்டு வெளியே அறியப்பட வேண்டும். 

அசோகமித்திரனைப் போல், நகுலனைப் போல் ஒரு இருநூறு பேருக்கு மட்டும் எழுதிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  மேலும், 95 வயதில் – கண் காது எல்லாம் பழுதாகி கைத்தடி வைத்துக் கொண்டு நடக்கும் நிலையில் – எனக்கு புக்கர் கிடைத்தால் அந்தப் பட்டயத்தை என் அலமாரியில் வைத்து அழகு பார்ப்பதிலும் எனக்கு விருப்பம் இல்லை.   கிடைத்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நடக்க வேண்டும்.  அதற்கு மொழிபெயர்ப்பும் இந்த ஆவணப்படமும் அவசியம். 

ஆவணப்படத்துக்கு இதுவரை இருபத்தைந்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது என்று சொன்னால், அதற்கும் நக்கல். கேமரா போன்ற தளவாடங்களுக்கே ஏழு லட்சம் ரூபாய் செலவாகி விட்டது. 

அந்த இருபத்தைந்து லட்சம் ரூபாயும் நீங்கள் கொடுத்ததுதான்.  அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்.  இப்படி வேறு எந்த எழுத்தாளருக்கும் நடக்காது. 

இலக்கிய விழாக்களுக்கு என்னை அழைக்கவில்லை என்றால், அதற்கு நானும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறேன்.  யாரையும் தொடர்பு கொள்வதில்லை.  யாரையும் அழைத்துப் பேசுவதில்லை.  எழுதுவதும் உங்களோடு உரையாடுவதும் மட்டுமே என் இலக்கியச் செயல்பாடாக இருந்து வருகிறது.  இப்படி இருந்தால் யார் அழைப்பார்கள்?  ஒருமுறை ஒரிஸ்ஸா இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.  அத்தோடு சரி.  அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரின் தொடர்பு எண் கூட என்னிடம் இல்லை.  இப்போது ஒரிஸ்ஸாவில் இலக்கிய விழா நடக்கிறது.  போனால் ஔரங்ஸேப் அறிமுகத்துக்கு உதவும்.  ஆனால் யார் எண்ணும் என்னிடம் இல்லை. 

இன்னொருவர் அஞ்ஜும் ஹாசன்.   வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்.  பெங்களூரில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர்.  இவரை நான் கௌஹாத்தி இலக்கிய விழாவில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன்.  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.  தொலைபேசி எண்ணும் கொடுத்தார்.  அவரை இப்போது திருவனந்தபுரம் மாத்ருபூமி இலக்கிய விழாவில் சந்தித்தபோது கௌஹாத்தியில் சந்தித்ததே ஞாபகத்தில் இல்லை. அவர் சொல்லித்தான் ஞாபகம் வந்தது. 

இனியாவது அப்படி இருக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்.   

ஆவணப்படம் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு ஆங்கில எழுத்தாளர் அதைப் பார்க்க விரும்புகிறேன் என்றார்.  சீலேவை சேர்க்க வேண்டும்.  சப்டைட்டில் எழுத வேண்டும்.  இந்த இரண்டு வேலைகளையும் முடித்து விட்டால், அவ்ட்ஸைடர் ஆவணப்படத்தை சர்வதேசப் போட்டிகளுக்கு அனுப்ப முடியும்.  

வேறு வேறு எழுத்தாளராக இருந்தால் இப்படி ஒரு படத்துக்கு அவரால் ஒரு கோடி வரை வசூலித்திருக்க முடியும்.  ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் மட்டும்தான்.  அதனால்தான் உங்களிடம் வருகிறேன். 

எனவே, என்னைப் பற்றிய ஆவணப்படத்தின் இறுதிக் காட்சிகளை சேர்ப்பதற்கு உங்கள் உதவியை நாடுகிறேன்.  எப்படியும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நான் புக்கர் வாங்கி விடுவேன்.  வாங்கிய பிறகு இந்த ஆவணப்படத்தின் மதிப்பு கூடும்.  ஏன் இத்தனை உறுதியாகக் கூறுகிறேன் என்றால், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் ஐந்தாவது நாள் மாலை writers’ ball என்ற ஒரு விருந்து நிகழ்ச்சி ஏதோ ஒரு அரண்மனை போன்ற ஏழு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஆயிரத்துக்கு மேல் விருந்தினர்கள்.  அதில் சுமார் முந்நூறு பேர் படு தீவிரமான பஞ்சாபிப் பாடல்களுக்கு ஆடிக் கொண்டிருந்தோம்.  அப்போது இரண்டு வட இந்தியப் பெண்கள் ஹாஆஆஆய் சாரூஊஊ என்று ஆவேசமாகக் கத்தியபடி என் கரங்களைக் குலுக்கினார்கள்.  என்னுடைய அமர்வு Front Lawnஇல் நடந்தது.  அந்த இடத்தில் சசி தாரூர் போன்ற பிரபலங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.  என் அமர்வு காலை பதினோரு மணிக்கு இருந்தாலும் ”ப” வடிவ அரங்கின் மூன்று பக்கங்களிலும் பார்வையாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  இருக்கைகளில் இடம் இல்லை.  கொஞ்ச நேரத்தில் நடுவே ஓடும் நடைபாதையிலும் பார்வையாளர்கள்.  சுமார் ஆயிரம் பேர் இருக்கும் என்று நினைக்கிறேன்.  எனக்கு நான் பேசியதில் திருப்தி இல்லை என்று எண்ணம்.  அதை என் நண்பர் லலித்திடம் சொன்னேன்.  உங்களுடைய ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கைதட்டல் இருந்தது இல்லையா என்று சொல்லி அந்த இடங்களை ஞாபகப்படுத்தினார்.  உண்மைதான்.  முப்பது பேர் ஔரங்ஸேபில் கையெழுத்து வாங்கினார்கள்.  அதில் இருபத்தைந்து பேர் மாணவிகள். 

அந்த அமர்வில் என் பேச்சைக் கேட்டவர்களோ நீங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.  அதற்கு அவர்கள் ஸாரி சொல்லி அமர்வுக்கு வர முடியவில்லை, ஆனால் உங்களுடைய எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறோம் என்றார்கள். 

எல்லா புத்தகங்களும் என்றால்?

ஸீரோ டிகிரி, மார்ஜினல் மேன், ஔரங்ஸேப்.

அதற்கு மேல் அவர்கள் ஊர், பேர் எதுவும் கேட்க முடியவில்லை.  பஞ்சாபி நடனம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட போதும் இதே போன்ற ஒரு நடன விருந்தின்போதுதான் அப்போதைய ஏஷியன் ஏஜ் (தென்னகத்தில் டெக்கான் கிரானிகிள்) தினசரியின் எடிட்டர் சுபர்ணா ஷர்மா என் ஸீரோ டிகிரியாலும் என்னுடைய இலக்கிய விழா பேச்சினாலும் ஆகர்ஷிக்கப்பட்டு ஏஷியன் ஏஜின் இந்திய மற்றும் லண்டன் பதிப்பில் மாதம் இரண்டு கட்டுரைகள் எழுத அழைத்தார்.  நானும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எழுதினேன்.

இப்போது அதேபோல் ஏஷியன் ரெவ்யூ இதழில் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.  அதில் ஔரங்ஸேப் நாவல் பற்றிய என் பேட்டி வந்துள்ளது.  நான் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கட்டுரை.  இனிமேல் அ-புனைவுகளுக்கு நானே ஆங்கிலத்தில் எழுதி விடலாம் என்று இருக்கிறேன்.  புனைவுகளுக்கு மட்டுமே மொழிபெயர்ப்பாளர்கள்.  மை லைஃப்: மை டெக்ஸ்ட் முதல் அத்தியாயத்தை எழுதி லலித்துக்கு அனுப்பி வைத்தேன்.  அவர் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், தமிழ் ஆகியவற்றில் நிபுணர்.  என்னுடைய எல்லா நூல்களையும் படித்தவர்.  என் ஆங்கில மொழியை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.  என்னுடைய தமிழின் நிழலைக்கூட என் ஆங்கிலம் தொட முடியாது.  ஆங்கிலத்தில் எனக்கு சிறுவயதுப் பயிற்சி கிடையாது.  லலித்திடம் என் ஆங்கிலம் எப்படி என்று கேட்டேன்.  Burn என்றார்.  அப்படியென்றால்?  கொளுத்திட்டீங்க. 

மை லைஃப்: மை டெக்ஸ்ட் என்ற என் வாழ்க்கை வரலாற்று நூல் ஜெனேவின் தீஃப்ஸ் ஜர்னல் நாவலைப் போல் கொண்டாடப்படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.  என் வாழ்க்கை அத்தனை மயிர்க் கூச்செரியும் சம்பவங்கள் நிறைந்தது.     

என் வாழ்வில் என்னைப் பற்றிய ஒரே ஆவணப்படம் தெ அவ்ட்ஸைடர்தான். எனக்கு ஒரு சர்வதேச விருது கிடைத்ததும் இந்த ஆவணப்படத்தின் மதிப்பு கூடும்.  எனவே இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கு கொள்ளவே உங்களை அழைக்கிறேன். ஏற்கனவே கூறியபடி பணம் தருபவர்களின் பெயர் டைட்டில் கார்டில் வெளிவரும்.  பெயர் வேண்டாம் என்று நினைப்பவர்களின் விருப்பப்படி அவர்கள் பெயர் தவிர்க்கப்படும்.     

நீங்கள் இப்போது தரும் பணம் என் எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உதவும்.

பணம் அனுப்புவதற்கான வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai