“அண்மையில் பெட்டியோ நாவல் படிக்கும் போது இந்தப் பாடலை கேட்டேன். இதுவரை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில்லை. Pure Bliss.”
என் வாரிசுகளில் ஒருவனாகிய வளன் அரசு ஃபேஸ்புக்கில் மேற்கண்ட வாக்கியத்தை எழுதியிருக்கிறான். வளன் ஒரு பாதிரியாராக இருந்தாலும் எல்லா மதங்களையும் எல்லா தீர்க்கதரிசிகளையும் மதிப்பவன். என் வாரிசாகிய ஒருவன் அப்படித்தானே இருக்க முடியும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுதானே என் மதம்?
வளன் அரசுவின் யூதாஸ் நாவலை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். நான் படித்த மறக்க முடியாத நாவல்களில் ஒன்று அது.
புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய இதிபிஸோ பகவா என்ற அற்புதமான பாடல் பற்றி மேலே எழுதியிருக்கிறான் வளன். ஆனால் அதில் ஒரு கருத்துப் பிழை உள்ளது. பெட்டியோ நாவலைப் படிப்பதற்கு முன்னால் வளனுக்கு இதிபிஸோ பகவா பாடல் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதிபிஸோ பகவா என்ற பாடல் பெட்டியோ நாவலில் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. பெட்டியோவை நான் என் குருதியால் எழுதினேன். அப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் இனி ஒருபோதும் எழுத முடியாது. அந்த நாவலில் ஒரு அதிசயம் இருக்கிறது. அது எனக்கு மட்டுமே தெரியும். உங்களால் நம்ப முடியாது. அந்த நாவலில் பல விஷயங்களை நான் கற்பனையால் எழுதினேன். அந்தக் கற்பனை முழுவதும் நான் மீண்டும் இலங்கை சென்ற போது அச்சு அசலாக நடந்தது. என்னாலேயே நம்ப முடியாத அதிசயம் அது.
வளனின் வார்த்தைகளில் இருக்கும் கருத்துப் பிழை என்ன?
அந்த வாக்கியம் இப்படி இருந்திருக்க வேண்டும்.
”அண்மையில் பெட்டியோ நாவலைப் படிக்கும்போது அந்த நாவலின் மூலமாக இதிபிஸோ பகவா என்ற பாடல் அறிமுகமானது. அதிலிருந்து அந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன் என்றே தெரியாது. ப்யூர் ப்லிஸ்.”
என் மகன், என் வாரிசு என்பதால் இதைக் குறிப்பிட்டேன். வளனின் மேற்கண்ட வாக்கியத்தில் பெட்டியோ நாவலுக்கும் இதிபிஸோ பகவாவுக்கும் சம்பந்தமில்லாதது போல் தெரிகிறது. இதிபிஸோ பகவா பாடல் பெட்டியோ நாவலின் ஆன்மா. பெட்டியோ நாவல் என் குருதி. அதனால் இதைச் சொன்னேன்.
இதிபிஸோ பகவா லிங்க்: