அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஆர். அபிலாஷ் விமர்சனம்
அந்தோனின் ஆர்த்தோ ஒரு மிக முக்கியமான பரிசோதனை,கலக நாடக இயக்குநர். தெரிதா, பின்நவீன சிந்தனையாளர்கள் தெல்யூஸ், கொத்தாரி போன்றோருக்கு படைப்பூக்கம் அளித்தவர். குரூர நாடக அரங்கின் தந்தை. ஆர்த்தோ மனச்சிதைவு காலகட்டத்தில் அவரது வாழ்வே ஒரு குரூத நாடமாகவதை சித்தரிக்கும் நாடகம் தான் சாரு எழுதிய “ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்”. ஒரே சமயத்தில் ஆர்த்தோவின் மன அரங்கு, அவரது இயக்குநர், அவரைப் பற்றி நாடகம் எழுதும் எழுத்தாளர், பார்வையாளர்கள், கோமாளி எனும் சமூக மனசாட்சி காவலன் ஆகியோரின் மன அரங்குகள் என கலவையாக தருகிறார். பலவிதமான அரங்குகள் – நாடக பனுவல், அதை எதிர்த்து தோன்றும் நிகழ் பனுவல், அரங்கில் கலவி, கூச்சல் – என ஒவ்வொன்றும் தனி பொருள் கொள்கின்றன. ஆர்த்தோவை எப்படி காப்பாற்றுவது, அவருக்கு எப்படி நியாயம் வழங்குவது என்பது நாடகத்தின் நாடகீய சிக்கல் ஆகிட கடைசி காட்சிகளே மிகச்சிறப்பாக அரங்கேறுகின்றன. ஆர்த்தோ தோன்றி அதுவரை தன்னைப் பற்றி சொல்லப்பட்டவற்றை மறுத்துவிட்டு ஏன் வன்முறையால் நீதியை வழங்க முடியாது எனக் கூறும் இடத்தில் ஒட்டுமொத்த கதையையும் 360 கோணத்தில் மாற்றி இன்னொரு கண்ணோட்டத்தில் இருந்து சித்தரிக்கும் இடம் அட்டகாசம். மிகச்சிறந்த கற்பனைத் தாவல் அது – அட எப்படி எதிர்பாராத விதத்தில் கதையை மாற்றிவிட்டார் நான் மிகவும் வியந்தேன்.
அதே நேரம் நாடகத்தின் துவக்கத்தில் ஆர்த்தோ ஐயர்லாந்துக்கு வரும் போது பேசும் இடங்களில் சாரு தன் ‘கற்பனை சுதந்திரத்தை’ எடுத்தாண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நான் படித்தவரையில் ஆர்த்தோவுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அவர் பேசிய விசயங்கள் அங்குள்ளவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் சாருவின் நாடகத்தில் புரிகிறது, அவருடன் ஐரிஷ் கிறித்துவ துறவிகளும் காவலர்களும் சரளமாகப் பேசுகிறார்கள். இது நாடகத்தில் கதையின் நகர்வுக்காக சாரு செய்த மாற்றம்.
யாராவது இதை அரங்கேற்றினால் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. நம்மூரில் நிர்வாணக் காட்சிகளை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.
– ஆர். அபிலாஷ்