ஒரு நேர்காணல்

ஏற்கனவே எழுதியதுதான். தமிழ் எழுத்தாளனாக சபிக்கப்பட்ட ஒருவன் விமானம் ஓட்டும் வேலையையெல்லாம் கற்றுக்கொண்டு ஆக வேண்டும். கேட்டால், ஜெயமோகன் ஓட்டுகிறாரே, உங்களுக்கு இதுகூடவா தெரியாது என்பார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு இந்தியத் தத்துவம் தெரிய வேண்டும். மேலைத் தத்துவம் தெரிய வேண்டும். உலக சினிமா தெரிய வேண்டும். ஜெர்மானிய தத்துவவாதி Jurgen Habermas பற்றி நாலு மணி நேரம் உரையாற்றத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் உலகத்தில் தெரியாத விஷயமே இருக்கக் கூடாது. அவன்தான் தமிழ் எழுத்தாளன். இந்த விதிக்கு இணங்க நானும் அவ்வப்போது இணைய ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறேன். அதையும் பலர் கேட்டு வருகிறார்கள். ”சச்சினிடம் போய் நீங்கள் பாராளுமன்றத்தில் ”பேசுவதை” விரும்பிக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்வதைப் போன்றது அது. என்னிடமும் பலர் “உங்கள் யூட்யூப் பேச்சு எல்லாவற்றையும் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லி வருகிறார்கள்.

அப்படித்தான் சென்ற மாதம் கலாட்டா டிவிக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். நாலு மணி நேரம் போனதே தெரியவில்லை. பேட்டி என்றே நினைக்கவில்லை. நண்பர்களோடு அரட்டை அடிப்பது போல் பேசிக்கொண்டிருந்தேன். சென்ற மாதம் வெளிவந்த பேட்டியின் முதல் பகுதியை ஒரு மாதத்தில் 1200 பேர் கேட்டிருக்கிறார்கள். அல்லது, பார்த்திருக்கிறார்கள். என் புத்தகம் நிச்சயம் இப்படி விற்றிருக்காது.

இப்போது இரண்டாவது பகுதி வந்துள்ளது. இரண்டு பகுதிகளையும் இங்கே பகிர்கிறேன்.