மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகள் ஒரு தேசத்தின், ஒரு பண்பாட்டின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மொழியின் அடையாளம் என்று ஆன்மீகவாதியைச் சொல்லவில்லை. அவர் ஒரு ஆன்மீகவாதியாகவே இருந்தாலும். எழுத்தாளனைத்தான் சொல்கிறார். இது மிகப் பெரிய விஷயம். ஏனென்றால், எழுத்தாளன் மட்டுமே தன் ஒட்டுமொத்த ஜீவிதத்தையும் சமூகத்திடம் ஒப்படைக்கிறான். என் தந்தை இறந்த செய்தி வந்தபோது நான் உயிர்மைக்குக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். நான் தான் முதல் மகன். முதல் பிள்ளை. நான் தான் தந்தைக்குக் கொள்ளி போட வேண்டும். ஆனால் என் அடையாளம் என் தந்தையின் மகன் என்பது அல்ல. நான் எழுத்தாளன். இந்த ஒட்டு மொத்த மானுட இனத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பவன். என் தம்பியிடம் நீயே சடங்குகளை செய்து விடு, நான் எழுதி முடித்துவிட்டுத்தான் வர முடியும் என்று சொல்லி விட்டேன்.
ஆதி சங்கரர் அப்படிச் சொல்லவில்லை. அன்னை இறந்த செய்தி தெரிந்து எங்கிருந்தோ சொந்த ஊருக்கு ஓடினார். அதற்கு அவர் தன் அன்னைக்கு அளித்த வாக்குறுதி காரணம் என்றாலும் கூட நான் என் வாழ்வில் எந்த லௌகீக வாக்குறுதிகளுக்கும் கூட முக்கியத்துவம் அளித்ததில்லை. எழுத்து மட்டுமே நான் வணங்கும் தெய்வம். அதுவே என் அன்னையும் பிதாவும்.
இந்தக் காரணத்தினால் மட்டுமே என்னை நான் ஒரு ஞானி என்கிறேன். எவனொருவன் தன் குடும்பத்தையும் உற்றத்தையும் சுற்றத்தையும் துறந்து விட்டு, மரணத்தைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டிருக்கிறானோ அவன் ஞானி. அதனால்தான் நான் ஞானி.
என்னை ஒரு சாமான்யன் கல்லால் அடித்தால் சொல்லால் அடித்தால் நான் சபிக்க மாட்டேன். நீ யாரையும் சபிக்கலாகாது, பலித்து விடும் என்று வாக்களித்திருக்கிறார் என் குரு. ஆனால் இயற்கை விதி என்ற ஒன்று இருக்கிறதே? நீங்கள் பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்ப வருகிறதுதானே? அவந்திகாவின் அன்னைக்கு ஒருவர் செய்வினை வைத்து அவரைப் பைத்தியம் ஆக்கினார். செய்வினை வைத்தவருக்கு குட்டம் வந்து விட்டது. உடம்பெல்லாம் அழுகிப் புழுத்து நாறியது.
எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. அதுதான் இயற்கை விதி.
நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளில் பத்தொன்பது மணி நேரம் படிக்கிறேன். எழுதுகிறேன். உறக்கமே ஐந்து மணி நேரம்தான்.
என் மீது ஒருவன் கல்லால் அடிக்கிறான். என்னை பைத்தியம் என்று எழுதியிருக்கிறான். இன்னொருவன் திருடன் என்று எழுதுகிறான். நான் சபிக்க மாட்டேன். அது என் தர்மத்துக்கு விரோதமானவது. ஆனால் தன் தந்தையின் சாவுக்குக் கூடப் போகாமல் 130 புத்தகங்களுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனை நீ பைத்தியம் என்று திட்டினால் இயற்கையின் சாப நிழல் உன் மீது வந்து விழும். உன் மீது விழும் என்றால் நான் இந்தப் பதிவையே எழுதியிருக்க மாட்டேன். நீ செய்த வினையின் பயனை நீ அனுபவிப்பாய் என்று விட்டு விடுவேன். ஆனால் அனாவசியமாக உன் பாவம் உன் குடும்பத்தின் மீது விழும். உன் குழந்தைகளின் மீது விழும். அதுதான் என் மனதை வருந்தச் செய்கிறது. எனக்கு துக்கமளிக்கிறது. என்னை நீ பைத்தியம் என்று எழுதி விட்டாய். நான் உன்னை சபிக்கவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதனால் தானாகவே உண்டாகி விட்ட சாபம் உன் குழந்தைகளின் மீதும் விழுகிறதே என்பதுதான் என் கவலை.
என்னைப் பைத்தியம் என்று சொல்லும் நீ என்றைக்காவது பிச்சை எடுத்திருக்கிறாயா? இந்த உலகத்திலேயே ரொம்பவும் அவமானகரமான காரியம் எது தெரியுமா? பிச்சை எடுப்பதுதான். நான் இருபது பூனைகளுக்காகப் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். மாதம் அறுபதாயிரம் ரூபாய் ஆகிறது. அவ்வளவையும் பிச்சைதான் எடுத்து சமாளிக்கிறேன். இன்னமும் அவலமான காரியம் இருந்தாலும் செய்வேன். இருபது பசித்த பூனைகளுக்கு நான் உணவளிக்க வேண்டும். அந்தப் பூனைகள் என்னை எத்தனை வாழ்த்துகின்றன தெரியுமா? பசியோடு அவக் அவக் என்று அவைகள் சாப்பிடும்போது நான் ஒரு தாய் போல் உணர்கிறேன். அதற்காகத்தான் கௌரவம் பார்க்காமல் பிச்சை எடுத்து பூனைகளுக்கு உணவளிக்கிறேன்.
அதனால்தான் என் மீது கல்லெறிபவர்கள் மீது சாபம் கவிகிறது. நான் சபிப்பதனால் அல்ல. நான் சபித்ததில்லை. சபிக்கவும் மாட்டேன். ஆனால் எழுத்தாளர்கள் மீதும், ஞானிகள் மீதும் கல்லெறிபவர்கள் மீது சாபம் கவியும். அந்தச் சாபம் அவன் வாரிசுகள் மீதும் விழும். அதுதான் இயற்கை விதி. அதைக் கடவுளாலும் மாற்றவியலாது.
நீ சாபம் சம்பாதித்துக் கொண்டு போ. ஏன் உன் குழந்தைகளுக்கும் சாபம் சம்பாதித்துக் கொடுக்கிறாய்?