மேற்கண்ட ஸ்பானிஷ் தலைப்பின் நேரடி அர்த்தம் The Ultimate Fog. சீலே தேசத்தைச் சேர்ந்த Maria Luisa Bombal 1934இல் எழுதி வெளிவந்த இந்தக் கதையை சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் சற்று விரிவாக்கி The House of Mist என்ற தலைப்பில் வெளியிட்டார் போம்பல். விரிவாக்கிய பதிப்பை நான் படிக்கவில்லை. முப்பது பக்கங்களே கொண்ட இந்தக் கதையைப் போல் ஒரு கதையை நான் படித்ததில்லை. தமிழில் சி.சு. செல்லப்பா எழுதிய ஜீவனாம்சம் கதையை மட்டுமே லா உல்த்திமா நியப்லாவுக்கு நிகராகச் சொல்ல முடியும். சொல்லப் போனால் ஜீவனாம்சம் போம்பலின் கதையை விடவும் வலுவானது. இந்தக் காரணத்தினால்தான் என்னால் பல மேற்கத்திய எழுத்தாளர்களை வியந்து பாராட்ட முடியவில்லை. செக்காவும் தஸ்தயேவ்ஸ்கியும் கொடுத்த இலக்கியத் தருணங்களை விடவும் போம்பலும் ஜீவனாம்சத்தில் செல்லப்பாவும் கொடுக்கும் அற்புதங்கள் அதிகம்.
இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. சுந்தர் சருக்கை எழுதிய பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து நாவலைப் படித்த வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு நெருங்கிய நண்பர் அதை அறுபது பக்கத்துக்கு மேல் தன்னால் படிக்கவே முடியவில்லை என்றும், கொடூரமான வதை என்றும் சொன்னார். ஒரே வார்த்தையில் சொன்னால் குப்பை. அந்த வார்த்தையை அவர் சொல்லவில்லை என்றாலும், அவர் சொன்னதன் பொருள் அதுதான். அவர் சொன்ன போது நான் அந்த நாவலைப் படித்திருக்கவில்லை. பிறகு படித்த போதுதான் அப்படி ஒரு நாவலை நான் படிப்பது அதுவே முதல் முறை என்று உணர்ந்தேன். சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய நாவல் அது. விட்ஜென்ஸ்டைனின் தத்துவத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போடும் நாவல். விட்ஜென்ஸ்டைனை வாசிக்காதவர்கள் கூட அதை அனுபவிக்க முடியும். ஒருவகையில் அந்த நாவலை Speculative fiction என்று வகைப்படுத்தலாம். இதுவரை நான் மூன்று ஸ்பெகுலேட்டிவ் ஃபிக்ஷன் தான் படித்திருக்கிறேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு. சுந்தர் சருக்கை மூன்றாவது. விஷ்ணுபுரத்தின் தத்துவ நிலைப்பாடு எனக்கு எதிரானது என்பது வேறு விஷயம்.
நான் குறிப்பிட்ட விஷயத்துக்கு வருகிறேன். நண்பரின் பார்வையில் ”பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து” ஒரு குப்பை. மட்டுமல்லாமல் பயங்கர சலிப்பைத் தந்தது என்றார். ஆனால் எனக்கோ அந்த நாவல் ஒரு த்ரில்லர் போல் இருந்தது. இடையிலேயே நான் நாவலின் கடைசி அத்தியாயத்தைப் படித்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டியிருந்தது. நெட்ஃப்ளிக்ஸில் த்ரில்லர் பார்க்கும்போது அப்படித்தான் செய்வேன். இல்லாவிட்டால் நெஞ்சு வலி வந்து விடும்.
இப்போது என்ன பிரச்சினை என்றால், என் நண்பரிடம் என்னால் ”பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து” ஒரு மகத்தான நாவல் என்று நிறுவ இயலாது. எனக்கு அந்த வாதத் திறமையெல்லாம் கிடையாது. நீங்கள் ஒருவரை கொலைகாரன் என்கிறீர்கள். நான் அவர் நிரபராதி என்று வாதம் செய்ய வேண்டிய வக்கீல். நான் செய்யும் வாதங்களில் அவர் கொலைகாரன் மட்டுமல்ல, ரேப்பிஸ்டும் கூட என்று நீதிபதி முடிவுக்கு வந்து விடுவார். என் வாதத்திறமை அப்படிப்பட்டது.
ராபர்ட் ஸ்வபோதாவின் அகோரா புத்தகம் பற்றிப் பேசுகிறேன். அதில் இருப்பதெல்லாம் பச்சைப் பொய், புளுகு, பித்தலாட்டம் என்று வாதிட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? குடிக்காமல் இருந்தால் சும்மா இருந்து விடுவேன். குடித்திருந்தால் ங்கோத்தா ங்கொம்மா என்று போய் விடுகிறது. இப்போது எனக்கு ஒரு பயம் வந்து விட்டது. சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் உலகத் தரமான நாவல் என்று சொல்லி விட்டேன். தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ் எல்லாம் இதற்குப் பின்னால்தான் என்று சொல்லி விட்டேன். ஜீவனாம்சம் ஒரு குப்பை நாவல் என்று வாசகர் வட்டத்தில் எதிர்வாதம் வைக்கப்படும். ஏன், உலகமே ஜே.ஜே. சில குறிப்புகளைக் கொண்டாடிக்கொண்டிருந்த போது நீங்கள் மட்டும் அதைக் குப்பை என்று சொல்லவில்லையா என்ற கேள்வி வரும். என்னிடம் பதில் இருக்காது.
என் திறமை என்னவென்றால், ஒரு போலியான படைப்பை அது போலி என்று எந்த சபையிலும் ஆணித்தரமாக நிறுவ முடியும். உ-ம். பெருமாள் முருகன் புதினங்கள். ஆனால் ஜீவனாம்சம் ஒரு மகத்தான படைப்பு என்று நிறுவ இயலாது.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் சிறுபத்திரிகை இலக்கியவாதிகளோடு இதே பஞ்சாயத்துதான் ஓடிக்கொண்டிருந்தது. ஃபூக்கோ பெயரை உச்சரித்ததற்காகவே வெட்டுக்குத்து எல்லாம் நடந்திருக்கிறது. அதே கச்சடாவையே நம் வாசகர் வட்டத்திலும் என்னால் சகித்துக் கொள்ள முடியுமா?
அதற்காக திமுக தலைவரிடம் மாவட்டச் செயலாளர் பம்முவது போல் என்னிடம் நீங்களெல்லாம் பம்ம வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ராஜா வெங்கடேஷ், செல்வா போன்றவர்கள் நன்கு எதிர்வாதம் செய்யக் கூடியவர்கள். அவர்களோடு மல்லுக்கு நிற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. சீனியோடு நடக்கும் சம்வாதங்களில் நான் “எனக்குத் தூக்கம் வருகிறது, நாளை பேசிக் கொள்வோம்” என்று சொல்லி விட்டுத் தூங்கப் போய் விடுவேன். அப்படிச் சொல்லும்போது அதிகாலை நான்கு மணி இருக்கும்.
இன்னொரு முக்கிய விஷயம். உலகமே கொண்டாடும் காஃப்கா, ஆல்பர் கம்யு போன்றவர்கள் என்னை ஈர்க்கவில்லை. உம்பர்த்தோ எக்கோவின் நேம் ஆஃப் தெ ரோஸை என்னால் படிக்கவே முடியவில்லை. தலைகீழ் நின்று தண்ணீர் குடித்து நூறு பக்கம் போனேன். அதற்கு மேல் தாங்கவில்லை. இப்படியும் ஆகிறதுதான். இன்று காலை ஸ்ரீ La ultima niebla பற்றிய தன் கருத்துகளை அனுப்பியிருந்தாள். அதைப் படித்தபோது இப்படியெல்லாம் என் மனதில் ஓடியது. அதையே இங்கு பதிவு செய்திருக்கிறேன்.
சீனியும் நானும் உரையாடலே நிகழ்த்தவில்லை என்று சொல்லவில்லை. பல இரவுகள் காலை ஐந்து மணி வரை விவாதித்திருக்கிறோம். அது எல்லாமே மனதுக்கு சந்துஷ்டியைத் தரும் விவாதங்கள்தான். சமீப காலமாகத்தான் கூட்டமாகக் கூடும்போது விவாதம் வெறும் நேர விரயமாகப் போய் விடுகிறது.
இன்னொரு விஷயம். உலகம் பூராவும் எழுத்தாளர்கள் விவாதித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். ஆர்த்தர் ரேம்போவும் வெர்லேனும் லண்டன் தெருக்களில் கத்தியால் எல்லாம் குத்திக்கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் ஊர் தி.ஜானகிராமனும் அவரது சக எழுத்தாளர்களும் மைலாப்பூர் கபாலி குளத்தின் படிக்கட்டுகளிலும், மெரினா கடல்கரையிலும் இரவு பூராவும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால் இது ஒன்றும் புதிதல்ல என்பதும் ஞாபகம் வருகிறது.
இனி ஸ்ரீ La ultima niebla பற்றி எழுதியிருந்த குறிப்பைத் தருகிறேன்.
“La Última Niebla” is a “Painting of Paintings.” Each of María Luisa Bombal’s words is a brushstroke, her prose rich in hues, artistically arresting. As I began reading the first few pages, thoughts of onerous effort loomed over me. Yet, as I delved deeper, the narrative’s oneiric qualities enveloped me.
Bombal’s portrayal of women is strikingly authentic, offering a glimpse into a hidden world known to only a select few, who undoubtedly are women. It serves as a poignant reminder of their complexities.
Beyond the story itself, I firmly believe that the imagery portrayed of women in this story truly reflects reality. Whether you’re a male chauvinist in need of enlightenment or a woman eager to reconnect with your own journey, this story will transport you to a realm of illumination. It’s an unsurpassed voyage.
I read it quickly, eager to grasp the story’s essence. I will re-read to savor each word, to immerse myself and fully enjoy the narrative’s depth. When I finished reading it, it feels like I’ve journeyed through the world’s longest, most beautiful poem. It’s a sheer delight. It is exclusive literature.
Thank you so much Charu
p.s. After reading the story, I found myself envying Bombal. Turning experiences into art remains a mystery to me. Eventually, I convinced myself that it is an art reserved for born artists.
With love,
Shree.