இதுவரை 90 பேர் திருவண்ணாமலை பயிலரங்குக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 20 பேர் இன்னும் கட்டணத் தொகை அனுப்பவில்லை. அந்த இருபது பேரும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த என் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அனைவரும் இருபது தேதிக்குள் பணம் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு நான் 50,000 ரூ. கொடுக்க வேண்டும் என்ற தகவல் வந்தது. தகவல் வந்த அடுத்த நிமிடமே ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டேன். உடனே மொழிபெயர்ப்பாளரிடமிருந்து எனக்கு ஃபோன். “என்ன சார் இது? மெதுவாக அனுப்பலாமே? என்ன அவசரம்? இப்படி ஒரு மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை” என்றார். நான் சொன்னேன், “இந்த அம்பதாயிரம் உன் பணம். உனக்கு நான் தர வேண்டியது. அதை இன்றே கொடுத்து விட்டால் என் பளு குறைந்து விடும் அல்லவா? இன்னொன்று, அந்தப் பணத்தை நான் பத்து நாள் வைத்திருந்தால் எனக்கு என்ன பலன்? ஏதாவது பலன் இருந்தால் நான் அதை என் வசம் வைத்திருந்து பத்து நாள் கழித்துக் கொடுக்கலாம். அதை நான் வைத்திருப்பதால் எனக்கு ஒரு பலனும் இல்லையே? மேலும், அதனால் என் மனதில் அநாவசியமான ஒரு விஷயத்தை வைத்துச் சுமக்க வேண்டிய தேவையும் உண்டாகிறதே?” என்றேன்.
இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப் பயிலரங்கம் பற்றி நான் என் நண்பர்களுக்கு வாட்ஸப் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவித்தேன். தகவல் தெரிவிக்கப்பட்ட அத்தனை பேரும் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு பணமும் அனுப்பினார்கள். வாசகர் வட்ட நண்பர்களைத் தவிர. இதில் ஒரு நண்பர் எனக்கு சமீபத்தில் தெரிய வந்தவர். பார்க்கும் போதெல்லாம் தன் பண்ணை வீடு பற்றி விலாவாரியாகச் சொல்லி அங்கே வந்து நீங்கள் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். உண்மையான அன்பும் பரிவும் தோன்றும் பேச்சு. அவருக்கும் இந்தப் பயிலரங்கம் பற்றிய தகவலை அனுப்பி “முடிந்தால் வாருங்கள்” என்றேன்.
அவசியம் கலந்து கொள்கிறேன் என்றார். அவர் பெயரைக் குறித்துக் கொண்டேன். ஆனால் அவரிடமிருந்து பணம் வரவில்லை. நானும் அது பற்றி யோசிக்கவில்லை. பொதுவாக நான் பணம் பற்றி யோசிக்கவே மாட்டேன். இப்போது கூட பணம் பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால், கல்லூரி நிர்வாகத்துக்குப் பெயர்ப் பட்டியலைக் கொடுக்க வேண்டும். எத்தனை பேர் என்றால்தானே அதற்கான உணவு குறித்துத் திட்டமிடலாம்.
மேலும், இது சினிமா பற்றிய பயிலரங்கம் என்பதால் எனக்கு வேறோர் வேலை வேறு சேர்ந்து விட்டது. சுமார் ஐம்பது படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்தான். இருந்தாலும் அதையெல்லாம் டவுன்லோடு செய்து, எடிட் செய்ய வேண்டிய வேலை. அதை என் நண்பர்கள்தான் செய்கிறார்கள் என்றாலும், அதை முறையாக வரிசைப்படுத்த வேண்டியது என் வேலை. நான் ஒரு படத்தின் ஒரு காட்சியை விளக்கும்போது அது திரையில் ஓட வேண்டும். இதில் எந்தவிதப் பிழையும் ஏற்படக் கூடாது. பெரும் வேலையாக இருக்கிறது இது.
பண்ணை வீட்டு நண்பர் ஒரு வாட்ஸப் செய்தி அனுப்பினார். உலக சினிமா பற்றி என் எழுத்தாளர் நண்பர் எழுதிய புத்தகம் ஒன்று என்னிடம் உள்ளது. அதை அனுப்பி வைக்கிறேன்.
வேண்டாம் என்றா சொல்ல முடியும்? உலக சினிமா பற்றி, தென்னமெரிக்க சினிமா பற்றி என்னிடம் ஒரு முப்பது புத்தகங்கள் உள்ளன. அது எல்லாவற்றையும் நான் முன்பு படித்திருக்கிறேன். இப்போதைய பயிலரங்குக்குப் படிக்கவில்லை. அதெல்லாம் மூன்று மாத வகுப்புக்குப் படிக்க வேண்டியது. இப்போதைய பயிலரங்குக்குத் தேவையில்லை. ஆனாலும் அதிலிருந்து சில விஷயங்களை என் ஞாபகத்திலிருந்து எடுத்துக் கொண்டேன்.
பண்ணை வீட்டு நண்பரை அதோடு மறந்தும் போனேன்.
சனிக்கிழமை அன்று (ஜூன் 8) எனக்கு சென்னை தபால் அலுவலகத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. பெங்களூர் ஜலஹள்ளியிலிருந்து உங்களுக்கு ஒரு தபால் வந்துள்ளது. அதன் பதிவு எண் இன்னது.
எனக்கு அடி வயிற்றில் நீர் சுரந்தது. ஜலஹள்ளியிலிருந்து எனக்கு வரக் கூடிய ஒரே தபால் நீதிமன்றத்திலிருந்துதான். சாமியாரின் சிஷ்யைகள் என் மீது போட்ட கிரிமினல் வழக்குகள் இன்னும் முடியவில்லை. பத்து ஆண்டுகளாக பெங்களூருக்கும் சென்னைக்கும் நாய் மாதிரி அலைந்து கொண்டிருக்கிறேன். கிரிமினல் வழக்கு என்பதால் பெயில் வாங்கிக் கொண்டுதான் நீதிமன்றத்திலிருந்து வெளியிலேயே வர முடியும். இல்லாவிட்டால் சிறைதான்.
நீதிமன்றத்துக்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்போது பதினைந்தாம் தேதியிலிருந்து இருபத்து இரண்டாம் தேதி வரை நான் கேரளத்தில் இருந்தாக வேண்டும். தவிர்க்கவே முடியாத வேலை. அதற்குப் பிறகு திருவண்ணாமலை. எப்படி நீதிமன்றம் செல்வது. தேதி வாங்கலாம் என்றால் ஏற்கனவே இரண்டு வாய்தா வாங்கியாகி விட்டது. போகாவிட்டால் கர்னாடகா போலீஸ் அரெஸ்ட் வாரண்டோடு வரும்.
என்ன செய்யலாம் என்று திங்கள் கிழமை நான்கைந்து வக்கீல்களுக்கு ஃபோன் போட்டுக் கேட்டேன். திங்கள்கிழமைதான் தபால்காரர் நோட்டீஸைக் கொண்டு வருவார். Refused என்று தபால்காரர் எழுதி அனுப்பி விட்டால் அரெஸ்ட் வாரண்ட் தான். என் பழைய தபால் அலுவலக நண்பர்களுக்கும் ஃபோன் போட்டேன். ஒரே பதற்றம். ஒரே ஃபோன் கால்கள்.
மூன்று மணிக்கு வந்தார் தபால்காரர். ஒரு பார்சலோடு. புத்தக பார்சல் சார் என்றார். வாங்கிப் பார்த்தால் உலக சினிமா அனுபவங்கள் என்று ஒரு புத்தகம். என் பண்ணை வீட்டு நண்பர் ஜலஹள்ளியிலிருந்து அனுப்பியிருக்கிறார். எங்கள் நாகூரில் இதற்கு ஒரு திட்டு உண்டு. இங்கே எழுத முடியாது. நீங்களும் கோபித்துக் கொள்வீர்கள். பண்ணை வீட்டு நண்பர் ரொம்பவே கோபித்துக் கொள்வார்.
நம்முடைய மூன்று வயதுக் குழந்தைகள் ஓவியம் என்று கிறுக்கிக்கொண்டு வந்து கொடுக்கும் இல்லையா, அந்த மாதிரிப் புத்தகம். ஹிட்ஸ்காக் பற்றியும் சத்யஜித் ராய் பற்றியும் ஆரம்ப நிலைப் பாடங்கள்.
ஒருமுறை ஒரு எழுத்தாளர் எனக்குப் பணக்கஷ்டம், பணம் இருப்பவர்கள் உதவுங்கள் என்று இணையத்தில் எழுதினார். அதற்கு ஒருவர் ஏன், மாடு மேயுங்களேன், நிறைய பணம் கிடைக்கும் என்று பின்னூட்டம் போட்டார். நம் பண்ணை வீட்டு நண்பர் செய்திருப்பது எனக்கு அந்த மாடு மேய்க்கும் யோசனையைத்தான் ஞாபகப்படுத்துகிறது. 2000 ரூ. பணம் அனுப்பி என் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல மனம் இல்லை. எனக்கு அறிவுத் தானம் செய்கிறாராம். நண்பரே, உங்களைப் போன்ற அன்பர்களை என் வாழ்நாள் பூராவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரமணரிடம் போய் தியானம் செய்வது எப்படி என்ற தமிழ்வாணன் பதிப்பகப் புத்தகத்தைக் கொண்டு போய் கொடுப்பீர்களா? மாட்டீர்கள்தானே? அப்புறம் எப்படி எழுத்தாளன் என்றால் மட்டும் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறீர்கள்? உங்களிடமெல்லாம் பணம் எப்படி மலைமலையாய் சேருகிறது என்பதுதான் எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது ஐயா!
பயிலரங்கில் கலந்து கொள்ள குறைந்த பட்ச நன்கொடை 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ.
தொடர்புக்கு : charu.nivedita.india@gmail.com
phone: 95975 00949