6. எழுத்தாளன் உருவில் ஒரு அகோரி

நேற்று கூறியது போல் இன்று தயிர்வடை சென்ஸிபிலிட்டியின் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியாது போல் தெரிகிறது.  அராத்துதான் காரணம்.  அவர்தான் அசுரகணத்தையும் அபிதாவையும் மீண்டும் படிக்க வேண்டிய தேவையை உண்டுபண்ணி விட்டார். 

க.நா.சு. பற்றி நான் ஆற்றிய நான்கு மணி நேர உரையைக் கேட்டிருக்கிறீர்களா?  கொரோனா காலத்தில் மாதம் ஒரு உரை என்று ஸூம் மூலம் கொடுத்தேன்.  நம் இணையதளத்தில் இருக்கிறது.  வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்.  வழக்கம்போலவே அந்த உரைக்காக ஒரு மாத காலம் இரவு பகலாகப் படித்துக் குறிப்புகள் எடுத்தேன்.  அப்போது அசுரகணத்தைப் படித்த சமயத்தில் இது ஒரு உலகத்தரமான நாவல் என்று நினைத்தது இப்போதும் ஞாபகம் உள்ளது.  துரதிர்ஷ்டவசமாக க.நா.சு.வை நான் சந்தித்துக்கொண்டிருந்த போது அவருடைய புனைகதைகளை நான் வாசித்திருக்கவில்லை.  என் வாழ்வின் பெரியதொரு இழப்பு அது.  அப்போது க.நா.சு. தில்லியில் இருந்தார்.  நானும் தில்லியில்தான் இருந்தேன்.  அவர் வீட்டில் அவரைச் சந்தித்தும் இருக்கிறேன்.  ஒரு மேதை என்ற அளவுக்கு அவரை நான் மதித்திருந்தேன்.   அப்போது அவர் நாவல்களைப் படித்திராதது ஒரு பெரிய இழப்பு.  ஆனால் அந்தக் காலகட்டத்தில் நான் தமிழ் எழுத்தாளர்கள் யார் மீதும் மரியாதை கொண்டிருக்கவில்லை.  அசோகமித்திரன், ஆதவன், நகுலன்,  கோபிகிருஷ்ணன், எஸ். சம்பத், எம்.வி. வெங்கட்ராம் போன்ற ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.  அவர்கள் எக்காலத்திலும் நான் வாசித்து மரியாதை கொண்டிருந்த எழுத்தாளர்கள்.   

இப்போது அசுரகணத்தை மீண்டும் வாசிக்கப் போகிறேன்.

நேற்றைய கட்டுரை பலரையும் உசுப்பி விட்டு விட்டது போல.  (ஆனால் சந்தா/நன்கொடை வரவில்லை.  அது வேறு விஷயம்.)  எனக்குப் பிரியமான, எனக்கு நெருக்கமான இரண்டு நண்பர்கள் உண்டு.  இருவருமே சிவில் சர்விஸ் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.  எனக்குப் பணம் முடியாமல் இருப்பது பற்றி மிகவும் விசனம் அடைகிறார்கள். அது தேவையே இல்லை. 

பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து என்னை வாசித்துக்கொண்டிருந்த என் வாசகர் இப்போது தமிழ்நாடு அரசில் பெரிய அதிகாரியாக இருக்கிறார்.  அவர் அரசுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு போலீஸ் துறையா, சிவிலா, எதில் சேரலாம் என்று என்னைக் கேட்ட போது, சிவில் என்று சொல்லி விட்டேன்.  போலீஸில் சேர்ந்தால் அதிகாரியாக இருந்தாலும், கான்ஸ்டபிளெல்லாம் யார் என்று தெரியாமல், டேய் தம்பி, உனக்கு என்ன வேணும் என்று கேட்டு விடுவார்கள். சங்கடமாகப் போய் விடும்.  அதனால்தான் சிவிலில் சேருங்கள் என்று சொல்லி விட்டேன்.  இப்போது பார்த்தால் மூன்றே ஆண்டுகளில் மனிதர் போலீஸ் அதிகாரி போல் மாறி விட்டார்.  ஆனாலும் எதற்குமே உதவாத ஒரு வெட்டியான துறையில் அதிகாரி.  ஸ்டாட்டிஸ்டிக்ஸ் மாதிரி ஒரு துறை.  அவர் போலீஸ் துறையில் இருந்திருந்தால் எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரும் உதவியாக இருந்திருக்கும்.  என் மகனே போலீஸ் அதிகாரியாக இருப்பது போன்றது அது. 

ஏனென்றால், வீட்டை விட்டு வெளியே போனாலே இந்த மெட்றாஸ்காரன்கள் என் பேண்ட்டைக் கழற்றிக் குண்டியடிக்கப் பார்க்கிறான்கள்.  நான் எங்கே வெளியே போகிறேன்?  வீட்டில் இருந்தாலுமே பாதுகாப்பு இல்லை.

ஒருமுறை அவந்திகா மும்பை போயிருந்தாள்.  ஒரு மாத காலம்.  ஒருநாள் பணிப்பெண் வந்து வீடு பெருக்கிக் கொண்டிருந்தார்.  திடீரென்று என் பின்னாலிருந்து “சார், எழுந்து கொள்ளுங்கள், பெருக்க வேண்டும்” என்று குரல் கேட்டது.  ஓ, அந்தப் பெண் பெருக்குவது கூடத் தெரியாமல் தட்டச்சு செய்துகொண்டிருந்திருக்கிறேன். 

அவந்திகா இருந்தால் பணிப்பெண் என் அறையை நாலு நிமிடம் பெருக்கித் துடைப்பார்.  அவந்திகா இல்லாவிட்டால் ஒன்றரை அல்லது இரண்டு நிமிடம்.

ஓ, கவனிக்கலம்மா என்று சொல்லி விட்டு வெளியே ஹாலுக்கு வந்து, அந்த ஒன்றரை நிமிட நேரம் என்ன, மோட்டுவளையையா பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்று Remember us this way லேடி காகா பாடலைக் கேட்க ஆரம்பித்தேன்.  முப்பதே நொடிகளில் கீழே மேனேஜரிடமிருந்து எனக்கு ஃபோன்.  “சார், பாட்டு சத்தத்தால் ஃபோன் பேச முடியலேன்னு ஆஃபீஸ்லேர்ந்து புகார் பண்றாங்க சார், சத்தத்தைக் குறைங்க.”

அடத் தேவ்டியாப் பசங்களா என்றுதான் நினைத்தேன்.  கீழே ஒரு சிட்ஃபண்ட் அலுவலகம் இருக்கிறது.  அங்கேதான் மாதக்கணக்கில் ராவும் பகலுமாக ட்ரில் போட்டு அவந்திகாவைப் பைத்தியமாக்கினார்கள்.  அவந்திகா ஊரில் இருந்தால் ஹிந்தி பஜனைப் பாடல்களை ஏழு தெருவுக்குக் கேட்கும் ஓசையில் வைப்பாள்.  காது சவ்வெல்லாம் பிய்ந்து தொங்கும்.  அந்த நாராசத்தில்தான் நான் இதையெல்லாம் உங்களுக்காக எழுதுகிறேன்.  தினமும் இருக்காது என்பதுதான் ஒரே ஆறுதல்.  ஆனால் வாரம் மூன்று முறை இருக்கும்.  இதுவே வேத ஸ்லோகங்கள் என்றால் அது எனக்குப் பிடிக்கும்.  அவை செவிக்கு இனிமையாக இருக்கும். ஆனால் வேத ஸ்லோகங்கள் எப்போதாவதுதான் போடப்படும்.  மற்றதெல்லாம் எல்லார் ஈஸ்வரி டைப் பஜன்கள்.  பாடுவோர் எல்லோருமே புடுக்கு அறுந்த பன்றி போல் கத்துவார்கள்.  அதுவும் ஹிந்தி.  இந்த எழவிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் தில்லியை விட்டே நான் தமிழ்நாட்டுக்குக் கிளம்பினேன்.  இங்கே வந்தால் இப்படி.  ஒன்றும் செய்ய முடியாது.  இது அவந்திகாவின் வீடு.  நான் இங்கே இருக்கிறேன்.  அவ்வளவுதான்.  எல்லா சமயங்களிலுமே என் சூழ்நிலையை மார்க்கி தெ சாத்-இன் நிலைமையை விட இது பரவாயில்லை என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.  இன்னொரு விஷயம்.  ஆயிரம் பேய்கள் என்னைச் சுற்றி நின்று கத்தினாலும் அது என்னை பாதிக்காது.  ஏனென்றால், நான் ஞானி.  புறமும் சரி, அகமும் சரி, என்னை எதுவும் எப்போதும் பாதிப்பதில்லை.  வெளிப்புற சக்திகளுக்கு என் உலகில் அனுமதியே இல்லை.    

ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேனே, ஞாபகம் இருக்கிறதா?  சின்மயா நகர் என்ற நிஜமான நரகத்தில் வசித்த போது ஒரு சமயம் வெள்ளம் வந்து விட்டது.  செயற்கை வெள்ளம்.  புழல் ஏரியைத் திறந்து விட்டார்கள்.  சென்னையே மிதக்கிறது.  எங்கு பார்த்தாலும் மரண ஓலம்.  ஹெலிகாப்டர்களில் வந்து மொட்டை மாடியில் நாள் கணக்கில் காத்துக்கிடப்பவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். 

நாங்களோ தரைத் தளம்.  எங்களோடு பப்பு என்ற நாய்.  அது ஒரு பெண் நாய்.  அத்தனை சிநேகமான நாய் அல்ல.  எல்லோரையும் கடிக்கும்.  யாரைப் பார்த்தாலும் கடிக்கும்.  அவந்திகாவையே இரண்டு மூன்று முறை கடித்திருக்கிறது.  மற்றபடி மிக மிக மிக அன்பான நாய்.  என்னிடம் மட்டுமே அடங்கும்.  தண்ணீரைக் கண்டால் அதற்குக் கொலைப் பயம்.  வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர்.  அதுவும் பாதாள சாக்கடை.  எங்கு பார்த்தாலும் மலம் மிதக்கிறது.  தண்ணீர் வடிய வழி இல்லை.  ஒரே சாக்கடைக் கடல்.  மலக்கடல்.  அவந்திகா ஒரு கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள்.  இருபத்து நான்கு மணி நேரமாக அவள் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.  தண்ணீர் குடித்தால் சிறுநீர் போக வேண்டுமே, எங்கே போவது என்ற பயம்.  மற்ற குடித்தனக்காரர்கள் மொட்டை மாடிக்குப் போய் ஹெலிகாப்டரிலிருந்து விழுவதை விழுங்கிக்கொண்டிருந்தார்கள். 

பப்பு மாடிப்படி ஏறாது.  அப்படியே ஏறினாலும் கூட்டத்தைப் பார்த்தால் மிரண்டு விடும்.  தண்ணீர் ஏறிக்கொண்டே இருந்தது.  நாய்க்காக உயிரை விடுவோம் என்று முடிவெடுத்து விட்டோம்.

அப்போது பசி தாங்காமல் என் நண்பருக்கு ஃபோன் செய்து (ஆச்சரியம் பாருங்கள், அந்த வெள்ளத்திலும் ஃபோன் வேலை செய்தது, மின்சாரம் தடைப்படாமல் இருந்தது!) பூண்டுக் குழம்பு செய்வது எப்படி என்று கேட்டு, சோறு ஆக்கி பூண்டுக் குழம்பு செய்து அந்த மலக்கரைசலிலேயே நின்றபடி சுடச்சுட சாப்பிட்டேன். 

இரண்டே இரண்டு நிமிடம் என்னை பாட்டுக் கேட்க வேண்டாம் என்று சொன்ன மேனேஜரை கீழே இறங்கிப் போய் செருப்பால் அடிக்கலாமா என்று யோசித்தேன்.  கோபப்பட்டால் எனக்குத்தான் நஷ்டம்.  நெஞ்சுவலி வரும். அதனால் அவனிடம் “நீங்கள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், தெரியுமா?  இயேசுநாதரின் பதின்மூன்றாவது சீடனிடம்…” என்று ஆரம்பித்து அரை மணி நேரம் நான் ஒரு ஞானி என்பதை ஆதாரங்களோடு விளக்கினேன்.  அந்த பாடுக்கு என்ன புரிந்த்தோ, விட்டு விட்டான். 

இது சாந்தோம் பகுதி என்பதால் பெரும்பாலும் கிறித்தவர்கள்தான்.  அதனால்தான் இயேசுவை அழைத்தேன்.  அவந்திகா ஹிந்தி பஜன்களை ஏழு தெருவுக்குக் கேட்கிறாற்போல் போட்டுக் கேட்பதை அவன் ஏன் ஆட்சேபிக்கவில்லை என்பதன் காரணம், அவன் கிறித்தவன் என்பதால்.  ஆட்சேபித்தால் இங்கே மதக்கலவரம் வெடிக்கும்.  ஆனால் எழுத்தாளன் என்றால் கேணப்புண்டை என்று சமுதாயம் பூராவுக்கும் தெரிந்திருக்கிறது என்பதால் நம்மை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் குண்டியடிக்கப் பார்க்கிறான்கள். 

அவந்திகா ஒரு பஜ்ரங் தள் தீவிரவாதியைப் போல் பேசுவாள்.  இது போன்ற விஷயங்களில் நான் எதுவும் அவளோடு பேச்சே வைத்துக்கொள்வதில்லை.  வீட்டில் எங்கே திரும்பினாலும் சாமி படங்கள்.  ஒருமுறை ஒரு நண்பன் இங்கே வந்திருந்தபோது (அஃப்கோர்ஸ், அவந்திகா மும்பை சென்றிருந்தபோதுதான்) வீட்டில் இருந்த ஒரு படத்தைப் பார்த்து, “என்ன சாரு, அயோத்தி ராமர் கோவில் படமெல்லாம் வைத்திருக்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான். அப்போதுதான் எனக்கு அது அயோத்தி ராமர் கோவில் படம் என்றே தெரிந்த்து. 

“அடப் போடா டொங்கு, இது என்ன என் வீடா?  அவந்திகாவின் வீட்டில் நான் இருக்கிறேன்” என்றேன்.  இருந்தாலும் நண்பனின் அதிர்ச்சி தீரவில்லை.  அந்த அதிர்ச்சி கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதத்தின் வெளிப்பாடு.  என்ன செய்ய?  இருவரில் ஒருவர் விட்டுக் கொடுக்காவிட்டால் குடும்ப வண்டி ஓடாது.  மேலும், இது பற்றியெல்லாம் நான் மயிர் அளவு கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

எதற்கு இதையெல்லாம் சொல்ல வந்தேன்?  ஹா, என் வளர்ப்பு மகன் போலீஸ் துறையில் சேர்ந்திருந்தால் இப்படி திரும்பின இடத்திலிருந்தெல்லாம் சூத்தடி வாங்காமல் இருக்கலாம்.  ஒரே ஒரு முறை அந்த நண்பன் போலீஸ் ஜீப்பில் என் வீட்டுக்கு வந்தால் போதும், வாலைச் சுருட்டிக்கொண்டு எனக்கு எப்போதும் சலாம் போட்டுக்கொண்டிருப்பான்கள்.  அதிகாரத்துக்கு மட்டும்தான் இவன்கள் அஞ்சுகிறான்கள்.

இதையும் ஏன் சொல்ல வந்தேன் என்றால், இப்போது சிவில் சர்விஸுக்குப் படித்துக்கொண்டிருக்கும் என் இரண்டு நண்பர்கள்.  அவர்களின் கடிதம் கீழே.

அராத்துவுக்கு நீங்கள் இன்றைக்கு எழுதிய நீண்ட பதில் உண்மையிலே மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, அசோகமித்திரனைப் பற்றி நீண்ட நேரம் பேசிவிட்டு காந்தி ‘பிறரின் வாதை’ பற்றி கூறிய விஷயம் ஆகச்சிறந்த உதாரணம். படித்து முடித்ததும் ஒரு ஐந்து பேருக்கு இதனை கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று அனுப்பிவிட்டேன். என்னுடைய சேமிப்புக் கணக்கில் தற்போதைக்கு ஒரு இலக்கத்தில்தான் பணம் இருக்கிறது. விரைவில் என்னால் இயன்றதை அனுப்பி விடுகிறேன். நன்றி, சாரு…

சிவசங்கர்.

சாரு,

இன்றைய (24.7.2024) கட்டுரையைப் படித்தேன். எதோ சாமி வந்து ஆடியது போல இருந்தது உங்கள் எழுத்து.

அப்துல், பாண்டிச்சேரி.

ஏற்கனவே எழுதியதுதான்.  மாணவப் பருவத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.  கடிதம் எழுதுகிறார்கள்.  நேரில் சந்திக்கிறார்கள்.  ஆனால் உத்தியோகத்துக்குப் போன பிறகு அவர்களுக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமல் போய் விடுகிறது.  அப்துலும், சிவசங்கரும் என் மீது வருத்தம் கொள்ளலாகாது.  இதுவரையிலான என் அனுபவம் அப்படி.  ஒரே ஒரு விதிவிலக்கு, மேலே நான் குறிப்பிட்ட நண்பர்.  அவருடைய உதவியில்தான் நான் ஜனவரியில் நடக்கும் புத்தக விழாவுக்கு இருபத்தோரு நாள்களும் வர முடிகிறது.  எனக்கான வாகனச் செலவு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும்.  காலை பதினோரு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரைக்குமான கார் செலவு.  ஆட்டோவில் சென்றால், ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.  அது என்னால் முடியாது.  அதிலும் இரவு பத்து மணிக்கு ஒரு கிலோமீட்டர் நடப்பது இயலவே இயலாது. 

அதனால் மாணவப் பருவத்தில் படிப்பதில் மட்டுமே குறியாக இருங்கள்.  பணத்தைப் பற்றி யோசிக்கவே வேண்டாம்.  வேலைக்குச் சென்ற பிறகு குருவை கவனிக்கலாம்.

அப்துல் எழுதியிருந்தது உண்மைதான்.  சாமியாட்டம்தான்.  அசோகமித்திரனின் ஒவ்வொரு கதையும் சாமியாடியின் ஆவேசத்தோடுதான் இருக்கும்.  அதை நான் நேற்று திரும்ப ஆடிக் காட்டினேன்.

இன்னொரு கடிதமும் வந்தது.  பெயர் இல்லை.  பெயர் என்ன என்று கேட்டேன்.  Dead soul என்றார்.  ஆஹா, நமக்கேற்ற ஆள் என நினைத்துக்கொண்டேன்.

அவர் கடிதம்:

அன்பின் சாரு சார், ‘அன்பின்’ என்று ஆரம்பித்திருப்பதைப் பார்த்துவிட்டு ஜெமோ ஆள் என்று எண்ணிவிடாதீர்கள். ஜெமோ ஆள் அல்லன் நான். அ.மி. ஆள், அ.மி.யை வாசித்தேயிராத அ.மி. ஆள்! அ.மி. ஆள் மட்டுமல்லன். அ.மி.யின் க்ளோன். க்ளோன்! ஏன்? மிரண்டுவிட்டேன் அ.மி.யின் ‘exegesis’ ஐ தங்களைப் போன்று ரசம் பிழிந்து நல்குவதற்கு குரு இல்லை இங்கு. அ.மி.யின் அமிலத்தை விட ஆயிரம் மடங்கு அமிலம் ‘தொடகாலி முண்டே’, ‘தொண்டு முண்டே’, ‘தேவிடியா முண்டே’ உட்பட பல விஷயங்கள் அடியேனிடம் உண்டு . பல புனைவுவகள் பெறுமதியானவை. எழுபத்தைந்தாயிரம் பக்கங்கள். ஆனால் யார் சாரு சார் வாசிப்பது? தங்களது ஆஸ்தான பீனியின் மீறல்கள் = கமல்ஹாஸன் + மாதவன். பீனி, I ‘m Sorry. சாரு சார் = ஒரிஜினல். No மேட்டர் வாட், ஆங் குரு பூர்ணிமா வணக்கங்கள் சார்.

சாரி. எனக்கு என்னவோ செய்கிறது. அடிவயிறு பற்றிக்கொண்டு எரிகிறது. குமட்டிக்கொண்டு வசையும் வன்மமுமாக குடல் எரிகிறது. கும்நாமியான எனக்கு பலரும் அனுதினமும் என்னைக் குண்டியடித்துக் குடை விரிக்கிறார்கள். குடல் சுழற்றிக்கொண்டு குன்மம் விலுக் விழுக்கென்று இழுக்கிறது. தங்களுக்காவது சீனி உள்ளார். எனக்கு சீனி போல் ஒரு ஆள் வேண்டும். ஏன் வேண்டும்? நான் யார்? நான்தான் கும்நாமி பாபா. அ.மி.யின் க்ளோன். எனக்கு எழுதத் தெரியாது. வாசிக்கவும் அறவே வராது. ஆனாலும் பாருங்கள் தங்களது ஒரு மாத சேலஞ்சை இதுகாறும் வாசித்துவிட்டேன். ஆனாலும் ஒரு பைசா அனுப்ப மனம் வரவில்லை. ஏனென்றால் என் பெயர் கும்நாமி பாபா.

Dead Soul.

பின்குறிப்பு: இன்னொன்றும் சார்.  குன்மமும் பேதியும் சேரும்போது வாயில் ஊறும்.  அதைத் தூ தூ என்று துப்பி மாளாது.

***

இன்று அபிதாவையும் அசுரகணத்தையும் படித்து விட்டு நாளை சந்திக்கிறேன்.  அநேகமாக நேற்றைய ஆட்டத்தை விட ரௌத்ரமாக இருக்கும். 

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கு நினைவூட்டுகிறேன். 300 ரூ. குறைந்த பட்ச சந்தா.  அதிக பட்சம் உங்கள் விருப்பம்.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai