பின்வரும் கட்டுரை சென்ற மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. கட்டுரை எண்: 26. ஆக, இருபத்தாறு கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பிரச்சினையை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. இந்த விவாதத்துக்குக் காரணமாக இருந்தவர் அராத்து. தயிர்வடை சென்ஸிபிலிட்டியில் தொடங்கினோம். ஆனால் புத்தகத்தின் தலைப்பு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அது ஒரு மாதிரி பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம் மாதிரி தொனிக்கிறது. உடலை முன்வைத்து ஒரு தத்துவ விசாரணை என்பது மாதிரியான தலைப்பாக இருந்தால் நலம். In the Realm of the Senses. இப்படியான ஒரு தமிழ்த் தலைப்பு தேவை. நீங்களும் யோசிக்கலாம்.
நாளை நான் In the Realm of the Senses திரைப்படம் பற்றியும் அதற்கடுத்து பசோலினியின் ஸாலோ பற்றியும், பத்தாயின் என்னுடைய அம்மா பற்றியும் எழுதிவிட்டு, இறுதியாக க.நா.சு.வின் அசுரகணத்தோடு முடிக்கலாம் என்று இருக்கிறேன். நம்முடைய முன்னோடிகளிடம் எது விடுபடுகிறது என்று அராத்து சொல்கிறார் என்பதை விவாதிப்பேன். ஆனால் அந்த விடுபடலுக்காக அவர்கள் எல்லோரையும் அராத்துவைப் போல் நாம் ஒதுக்கி விடக் கூடாது, அது பெரும் ஆபத்து என்பதையும் விளக்க வேண்டும்.
அங்கே செல்வதற்கு முன்னதாக மார்க்கி தெ ஸாத் பற்றி என்ன எழுதியிருக்கிறேன் என்பதை நீங்கள் ஒருமுறை மீள்வாசிப்பு தரலாம்.
தற்காலிகமாக The Existential Weight of Spoonsஐ ஒத்தி வைக்கிறேன். ஒரு நண்பர் அது அன்பு நாவல் மாதிரி இருப்பதாகச் சொல்லி நிராகரித்தார். இப்போது அதை ஒத்தி வைப்பதற்கு நண்பர் போட்ட தடை காரணம் அல்ல. லூயி ஃபெர்தினாந் செலின், ப்யூகோவ்ஸ்கி, வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற தலைகள் ஒரே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப எழுதின. பல மகத்தான ஓவியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஓவியத்தைத்தான் எழுதினார்கள். ஆர்த்தோவும் நகுலனும் அப்படித்தான் வாழ்க்கை பூராவும் ஒரே விஷயத்தைத்தான் கூவினார்கள். ஆனால் நான் அப்படி அல்ல. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் மாதிரி ஸீரோ டிகிரி மாதிரி இருக்காது. ஸீரோ டிகிரி மாதிரி ராஸ லீலா இருக்காது. ராஸ லீலா மாதிரி காமரூப கதைகள் இருக்காது. காமரூப கதைகள் மாதிரி தேகம் இருக்காது. தேகம் மாதிரி எக்ஸைல் இல்லை. எக்ஸைலுக்கும் ஔரங்ஸேபுக்கும் சம்பந்தமே இல்லை. அதேபோல், ஔரங்ஸேப் மாதிரி பெட்டியோ இல்லை. பெட்டியோ மாதிரி அன்பு இல்லை. ஆனால் அன்பு மாதிரி The Existential Weight of Spoons இருக்கிறது. ரொப்பங்கி இரவுகள் இது எது மாதிரியும் இருக்காது. தியாகராஜா நான் எழுதியது போலவே இருக்காது. ஆக, அன்பு மாதிரி ஸ்பூன்ஸ் இருந்தால் அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. அன்புவின் தொடர்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
எனக்கு என்ன எழுத வேண்டும், எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று தெரியும். தயவுசெய்து எனக்குப் பாடம் எடுக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லையா, படிக்காதீர்கள். எனக்குப் பிடிக்காத எதையும் இந்த எழுபது வயது வரை படித்ததே இல்லை. அதை நான் ஒரு விதி போல் வைத்திருக்கிறேன். எனக்குப் பிடிக்காத எதையுமே நான் படித்தது இல்லை. அதை நீங்களும் பின்பற்றலாம்.
சிலர் ஸ்பூன்ஸ் பற்றிக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு கடிதத்தையும் நான் வெளியிடவில்லை. இதயத்தை விம்ம வைக்கும் கடிதங்கள். அவர்கள் யாரும் சுஜாதா படிப்பவர்கள் இல்லை. கல்கி படிப்பவர்கள் இல்லை. உலக இலக்கியம் படிப்பவர்கள். ரியூ முராகாமி படிப்பவர்கள். பகடியில் சில இடங்களில் உங்களை விட ரியூ கலக்குகிறான் என்று என்னையே வாரி விடுபவர்கள். அவர்கள்தான் ஸ்பூன்ஸ் நாவலைக் கொண்டாடிக் கொண்டாடிக் கடிதம் எழுதுகிறார்கள். என் வாசகர்கள் மிகுந்த இலக்கியத் தேர்ச்சி உடையவர்கள். அவர்கள் ஸ்பூன்ஸைக் கொண்டாடுகிறார்கள் என்பதால் அவர்களுக்காக மட்டுமே எழுதுவது எனக்கு மிகுந்த சந்துஷ்டியை அளிக்கிறது.
மேலும், நான் அடிக்கடி சொல்லி வருவது போல, நான் ஒரு தேர்ந்த வாசகன். என் எழுத்தின் முதல் வாசகனும் நானே. எனக்கு நான் என்ன எழுதுகிறேன், அதன் இலக்கியத் தகுதி என்ன என்று தெரியும். எனவே என் எழுத்தை விமர்சிப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டிருந்தால் அது என் எழுத்துப் பயணத்துக்கு உதவிகரமாக இருக்கும். இதைக் கூட அவர்கள் என் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சொல்கிறேன். இல்லாவிட்டால் இதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டேன்.
சமீபத்தில் ஒரு இளைஞனின் மேடைப் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பேச்சு முழுவதும் உடலை மறுத்து தத்துவத்தை முன்நிறுத்துவதாக இருந்தது. அது ஒரு ஃபாஸிஸ்டின் குரல். அதைத்தான் தன் சினிமாவின் மூலம் உடைத்துச் சிதைத்துத் தள்ளுகிறார் நகீஸா ஒஷீமா. அது பற்றி விவாதிப்போம்.
நாளை வரை மார்க்கி தெ ஸாத்…
அராஜகமானது, காலரா போல் தொற்றிக்கொள்ளக் கூடியது, கோபப்படுத்தக் கூடியது, அதன் எல்லா அம்சங்களிலும் தீவிரத்தன்மை கொண்டது, இதுவரை ஒருபோதும் பார்த்திராத அளவுக்கு உடல் இன்பத்தைக் கொண்டாடும் கற்பனைகளைக் கொண்டது, வெறித்தனமான கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசுவது – சுருக்கமாகச் சொன்னால் இதுதான் என் எழுத்து. இதற்காக நீங்கள் என்னைத் திரும்பவும் கொல்லலாம். அல்லது, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், நீங்கள் என்ன செய்தாலும் நான் என்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.”
சமூகம் அவரைக் கொல்ல முடிவு செய்தது. முதலில் அவரை மனநோய் விடுதிகளில் அடைத்தும், அடுத்து அவரை அவர் விரும்பியபடியே மறதியின் சவக்குழிகளில் தள்ளியும்.
-இப்படித்தான் ஸிமோன் தெ பூவா மார்க்கி தெ ஸாத் பற்றிய தன் கட்டுரையைத் தொடங்குகிறார். மார்க்கியே அப்படித்தான் எழுதியிருக்கிறார். ”என் சமாதி மூடப்பட்ட பின், அதன் மீது புல் பூண்டுகளும் விருட்சங்களும் முளைத்துப் படர்ந்து பூமியின் நிலப்பரப்பிலிருந்து என் சமாதியின் அத்தனை தடயங்களும் மறைந்து போகும்; மனிதர்களின் மனங்களிலிருந்து என் நினைவும் துடைக்கப்படுவதைப் போல…”
தடயங்களை அழித்தது மார்க்கியின் மகன். மார்க்கி தெ ஸாத் எழுதிய எல்லா நாள்குறிப்புகளும் காணாமல் அடிக்கப்பட்டன. அவர் எழுதிய கடைசி நாவல் Les Journées de Florbelle ou La Nature dévoilée (The Days of Florbelle; or, Nature Unveiled)-இன் பத்து தொகுதிகளையும் மார்க்கியின் மகன் தீ வைத்துக் கொளுத்தி விட்டான்.
(தமிழிலும் சில எழுத்தாளர்களுக்கு அப்படி வேறு விதமாக நடந்திருக்கிறது. சார்வாகன் தான் சாகும் தருணத்தில் தான் ஆயுள் முழுவதும் எழுதிய கவிதைகளை எனக்கு மின்ன்ஞ்சல் செய்து அதை எந்தப் பதிப்பகத்திலாவது கொடுத்து பிரசுரிக்க முடியுமா என்று கேட்டார். மின்ன்ஞ்சல் என்பதால் கடிதம் என்னிடம் இருக்கிறது. நானும் ஸீரோ டிகிரியில் கொடுத்தேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சார்வாகன் இறந்து விட்டார். இருந்தாலும் அதைப் பிரசுரிப்பதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருந்தேன். இதற்கிடையில் சார்வாகனோடு நீண்ட காலம் பழகிய ஒரு யோக்கியர் ஸீரோ டிகிரி பதிப்பகத்தை அணுகி அதை ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் பிரசுரிக்க்க் கூடாது என்றும், அதற்காக அவர் சார்வாகனின் சகோதரரின் ஒப்புதலைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். ஸீரோ டிகிரி என்ற பெயரை மாற்றினால் அதைப் பிரசுரிப்பதற்கு அனுமதி தருவதாகவும் சொன்னார்.
அதற்குப் பிறகு அந்தக் கவிதைத் தொகுதி வரவே இல்லை. எழுத்தாளர்களை உயிரோடு புதைப்பது என்றால் இதுதான்.
எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலுக்கும் இதேதான் நடந்த்து. பிரசுரிக்க்க் கூடாது என்று குடும்பத்தார் தடை.
மார்க்கியின் நிலைமைக்கும் இங்கே உள்ள நிலைமைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கே எரிக்க மாட்டார்கள். உயிரோடு அல்லது உயிர் போன பிறகு புதைத்து விடுவார்கள்.
என்னுடைய நாவல்களுக்கும் அந்த கதி நேரலாம். அதனால் யார் தடுத்தாலும் அவற்றை வெளியிட்டே தீருமாறு ஸீரோ டிகிரி பதிப்பகத்திடமும், அவர்கள் தயங்கினால் நீங்கள் செய்ய வேண்டும் என்று சீனியிடமும் கேட்டிருக்கிறேன். என் எழுத்தைத் தடை செய்ய என் குடும்பத்துக்கு உரிமை கிடையாது.)
மார்க்கி தெ ஸாத் ஏன் அப்படிச் சொன்னார்? நான் மனித மன்ங்களிலிருந்து காணாமல் போய் விடுவேன் என்று அவர் சொன்னது அவருடைய முன்னறிவிப்பு அல்ல, விருப்பம். ஏன் அப்படி விரும்பினார்?
அகோரா என்ற புத்தகத்தில் ஒரு அகோரி வருகிறார். அந்நூலை எழுதிய ராபர்ட் ஸ்வபோதா அந்த அகோரிக்கு விமலானந்தா என்று ஒரு புனைப்பெயரை இடுகிறார். அந்த அகோரி தனக்கென்று ஒரு அமைப்பையோ சீடர்களையோ – ஏன், ஒரு நூலைக் கூட அடையாளமாக வைக்கவில்லை.
ஏனென்றால், என் தர்சனத்தைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் தகுதியானவர்களாக இல்லை என்றார் விமலானந்தா. மனிதர்கள் யாவரும் பணத்தை வணங்குபவர்களாகவும், ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள் என்றார். உதாரணமாக, என்னிடமிருக்கும் ஏராளமான சொத்துக்களை என்னுடைய சீடனாகவும் ஆடிட்டராகவும் இருப்பவனே சுருட்டிக் கொள்வான் என்றார். அவர் இறந்த பிறகு அவர் சொன்னபடியே நடந்தது.
அந்த விமலானந்தாவைப் போலவே மார்க்கி தெ ஸாத்- உம் நினைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ’மனித குலச் சிந்தனையில் இதுவரை நடந்திராத கண்டுபிடிப்புகளைச் சொல்கிறோம், இந்த மனிதர்களோ நம்மைப் பிடித்து சிறையிலும் மனநோய் விடுதியிலும் தள்ளுகிறார்களே’ என்று அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகவே தன் பெயரும், எழுத்துக்களும் மனித ஞாபகத்திலிருந்து மறைந்து விட வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கலாம்.
ஆனால் அவர் நினைத்தபடி நடக்கவில்லை. நீட்ஷே, ஃப்ராய்ட் போன்ற சிந்தனையாளர்களை பெருமளவு பாதித்தவராக இருந்தார் மார்க்கி தெ ஸாத். அதன் காரணமாகவே அவர் ஒரு மகத்தான தீர்க்கதரிசி என்று ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகில் அவர் பெயர் மீண்டும் நிறுவப்பட்டது. ஏனென்றால், மார்க்கி தெ ஸாத் இல்லையேல் நீட்ஷேயிலிருந்து நகீஸா ஓஷிமா (Nagisa Oshima) வரையிலான பெயர்களை நாம் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. சாரு நிவேதிதா என்ற பெயரையும்.
மார்க்கி தெ ஸாத்-இன் எழுத்துக்கள் ஏன் எரிக்கப்பட்டன என்பதற்கான விடையை நாம் மார்க்கி பற்றிய ஜார்ஜ் பத்தாயின் ஆய்விலிருந்து புரிந்து கொள்ளலாம். பத்தாய் சொல்கிறார்: இந்த உலகம் இரண்டு அடிப்படைகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்று, மேட்டர். இன்னொன்று, ஸ்பிரிட். (உடல் மற்றும் ஆன்மா என்று புரிந்து கொள்ளலாமா?) மார்க்கி மேட்டர் பற்றி எழுதினார். (மேட்டர் என்ற வார்த்தையை நீங்கள் இங்கே சிலேடையாகவும் எடுத்துக்கொள்ளலாம். பத்தாய்க்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!)
ஆனால் சரித்திரத்தில் ஆன்மா பற்றி எழுதுபவர்களுக்குத்தான் பெயர். தம் சம காலத்தவர் பலர் தர்சனம் என்றும் ஆன்ம ஞானம் என்று புல்லரித்துக்கொண்டிருந்த போது தஞ்சை ப்ரகாஷ் உடல் பற்றியும் உடலின் வேட்கை பற்றியும் எழுதினார். அதனால்தான் தமிழ்கூறு நல்லுலகம் அப்படி ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையே கண்டு கொள்ளவில்லை.
பொதுவாகவே உலகில் உள்ளொளி பற்றி எழுதுபவர்களே உயர்ந்த கலையை வெளிப்படுத்துபவர்களாகவும் உடல் பற்றி எழுதுபவர்கள் கீழாகப் பார்க்கப்படுவதும் ஒட்டு மொத்தமாக மறக்கடிக்கப்படுவதும் இதனால்தான்.
ஜப்பானிய சினிமாவை எடுத்துக் கொண்டால் அகிரா குரஸவாதான் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். குரஸவாவின் படங்களில் போரும் சண்டைகளும் நிறையவே இருந்தாலும் அவற்றின் உள்ளோட்டம் ஆன்மீக தர்சனம்தான். ஆனால் கொதார் குரஸவாவை வெறும் adventure படங்கள் என்று ஒதுக்கி விட்டு Kenji Mizoguchiயைத்தான் உண்மையான ஜப்பானியத் திரைக் கலைஞர் என்கிறார்.
இதைவிட இன்னும் வலுவான உதாரணம், ஜப்பானிய இயக்குனர் நகீஸா ஓஷிமா. குரஸவாவை ஜப்பானே கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் ஓஷிமாவின் In the Realm of the Senses என்ற பட்த்தை ஜப்பான் தடை செய்த்து. இன்றளவும் அந்தப் பட்த்தின் முழுமையான வடிவத்தை ஜப்பானில் பார்க்க முடியாது. பட்த்தை ஜப்பானில் எடுத்து முடித்து விட்டு ஓஷிமா அதை ஃப்ரான்ஸுக்கு அனுப்பித்தான் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளைச் செய்து முடித்து வெளியிடவும் முடிந்தது.
இந்த எல்லா விஷயங்களையும் நாம் மேட்டர், ஸ்ப்ரிட் என்ற பிரிவினைக்குள் வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
***