The Existential Weight of Spoons – 6

ஒருமுறை அல்ல, பலமுறை சொன்னான் விஷால்.  வைதேகியை விவாகரத்து செய்து விடுங்கள். 

அது பற்றி பெருமாள் அவனிடம் விரிவாக விளக்கியும் விஷாலுக்கு பெருமாளின் நிலைப்பாடு புரியவில்லை.  பிறகு அது ஒரு துன்பமாகப் போகவே நட்பைத் துண்டித்தான்.

மிகவும் சுருக்கமாகச் சொன்னால், பெருமாளைப் போன்ற அதிர்ஷ்டக்கார எழுத்தாளன் இந்த உலகத்திலேயே இல்லை.  எழுத்துக்கு ஆதாரமான விஷயம் என்ன?  கட்டுப்பாடற்ற சுதந்திரம்.  இந்த விஷயத்தில் பெருமாளைப் போல் சுதந்திரத்தை அனுபவிப்பவன் யாருமேயில்லை.

இதைப் படிப்பதை ஒரு கணம் நிறுத்தி விட்டு யோசித்துப் பாருங்கள்.  நீங்கள்தான் பெருமாள்.  உங்கள் மனைவி வைதேகி பற்றி சக்கை சக்கையாகக் கிழித்து எழுதுகிறீர்கள்.  பெருமாள் மாதிரி.  வைதேகி அதைப் படிக்கிறாள் என்றால், என்ன ஆகும்?  அடிதடி, ரகளை, கொலை, தற்கொலை… அல்லது, குறைந்த பட்சம் விவாகரத்து.  ஆகுமா, ஆகாதா?  இங்கே பெருமாள் விஷயத்தில் வைதேகி பெருமாள் எழுதுவதை வாசிப்பதே இல்லையே, அது எவ்வளவு பெரிய சுதந்திரம்?  சுத்தமாகப் படிப்பதில்லை.  யாராவது இப்படி படிப்பாமல் இருப்பார்களா?  வாழ்க்கையில் ஒரு இலக்கியப் புத்தகம், ஏன், எந்தப் புத்தகமுமே படிக்காத பெண்ணுக்குக் கூட தன் கணவன் இப்படி வரிந்து வரிந்து புத்தகங்களாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறானே, ஒரு ஒற்றை வரியையாவது படித்துப் பார்ப்போம் என்று தோன்றும்தானே?  அப்படித் தோன்றினால் அவன் எழுத்தில் என்ன இருக்கும்?  ”ரொப்பங்கி இரவுகள் நாவல் எழுதுவதற்காகப் பெண்களை சந்திக்க ஜப்பான் போகிறேன்.”  டேய் மவனே, உன் குரல்வளையை நெறித்துக் கொல்வேன் என்றுதானே ராக்ஷஸ வடிவம் எடுப்பார்கள்?  பெருமாள் இன்செஸ்டை வைத்து ஒரு நாவல் எழுதினான்.  அதில் வரும் நாயகி தன்னோடு சம்போகம் பண்ணும் பெரியப்பனை நோக்கி, “உங்கள் முகத்தை மூடிக் கொள்ளுங்கள், எனக்கு உங்கள் முகத்தைப் பார்த்தால் என் நைனா ஞாபகம் வருகிறது” என்கிறாள். 

பெருமாளுக்கு இரண்டு வகையில் அதிர்ஷ்டம்.  சமூகமும் கவனிக்கவில்லை.  வைதேகியும் படிப்பதில்லை.  சமூகம் கவனித்திருந்தால் அவனுக்கு சிறை அல்லது சமூகப் பிரஷ்டம்.  வைதேகி படித்திருந்தால் சர்வ நாஸ்தி. 

ஜார்ஜ் பத்தாய் மாதிரி எதை வேண்டுமானாலும் எழுதித் தள்ளுகிறான் பெருமாள்.  பத்தாய் கூட புனைப்பெயரில்தான் எழுதினார்.  அவர் எழுதிய ஒரு இன்செஸ்ட் நாவல் அவர் இறந்த பிறகுதான் வெளிவந்தது.  ஃப்ரான்ஸின் புகழ் பெற்ற எழுத்தாளர்.  ஆனால் பெருமாளுக்கு இங்கே ஒரு பிரச்சினை இல்லை. சக எழுத்தாளக் குஞ்சுகள் சில “இவன் எழுத்தாளனே இல்லை” என்று அவ்வப்போது குமுறுவதோடு சரி. 

டேய் விஷால் மடையா, வைதேகியை விவாகரத்து செய்யச் சொல்கிறாயே?  இந்தப் பூவுலகில் வேறு எந்தப் பெண்ணாவது இப்படி பெருமாள் எழுதும் எதையுமே படிக்காமல் இருப்பாளா?  சில சமயம் பெருமாளுக்கு விருதுகள் வருகின்றன.  அப்போது கூட படிப்பதில்லை.  வேலியில் போகும் ஓணானை எடுத்து ஏன் இடுப்பில் விட்டுக் கொள்ள வேண்டும் என்பதனால் அவள் படிக்காமல் இல்லை.  இலக்கியத்தில் துளிக்கூட அவளுக்கு ஆர்வம் இல்லை.  ஆனால் இது எதுவுமே சரியான வாதம் இல்லை.  பெருமாள் எழுதிய நூறு புத்தகங்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.  வைதேகிதான் தினமும் அவைகளை தூசி தட்டி அடுக்கி வைக்கிறாள்.  ஒருநாள் கூட அந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்ததில்லை.  இப்படி வேறு எந்தப் பெண்ணாவது இருப்பாளா?  இது பெருமாளின் அதிர்ஷ்டம் இல்லையா?

அதனால்தான் சொல்கிறேன், பெருமாளைப் போன்ற சுதந்திரமான எழுத்தாளன் இந்த உலகத்திலேயே இல்லை என்று.  மற்ற தேசங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு அரசாங்க அச்சுறுத்தல் இருக்கும்.  தமிழ்நாட்டின் மக்கள் தொகையான ஒன்பது கோடியில் இலக்கியம் வாசிப்பவர்கள் ஐயாயிரம் பேர் இருப்பார்கள் என்றால் எத்தனை சதவிகிதம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.  அதனால் இலக்கியம் என்பதே டயரி எழுதுவது போல் ஆகி விட்டது என்கிற போது அது பற்றி அரசுக்கு என்ன கவலை?  பெருமாளின் டயரியை ஆயிரம் பேர் படிக்கிறார்கள்.  இது ஒன்றும் கவனிக்க வேண்டிய விஷயம் அல்ல என்று தண்ணி தெளித்து விட்டு விட்டது அரசு எந்திரம். 

அப்படியானால் வைதேகி பெருமாளுக்குக் கொடுக்கும் மண்டையிடிகள்?  அது எவ்வளவு பெரிய ஆக்கினை?  விஷாலின் சிந்தனை இப்படி ஓடலாம்.

லௌகீக வாழ்க்கையை பெருமாள் சுன்னி மயிராக நினைக்கிறான்.  (அவன் நூறு முறை இப்படிச் சொல்லியிருப்பதால் நானும் மாற்றாமல் எழுதுகிறேன்.)  அதனால்தான் வைதேகி கொடுக்கும் உளைச்சல்களையெல்லாம் ‘போடி சுன்னி’ என்ற இரண்டெழுத்து மந்திரத்தை மனசுக்குள் சொல்லிக் கடந்து போய்க்கொண்டிருக்கிறான்.  ஆக, வைதேகியால் பெருமாளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  அவனுடைய எழுத்துக்கு ஆகப் பொருத்தமானவள் வைதேகிதான்.

ஆனால் ஆனந்தி விஷயம் அப்படி அல்ல.  ஆஹா, இங்கே பெருமாள் ஆனந்திக்குக் கொடுத்த சத்தியத்தை மீற வேண்டியிருக்கிறது, ஆனந்தி ஒருமுறை பெருமாளிடம் “நீங்கள் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதக் கூடாது என்று சத்தியம் வாங்கியிருக்கிறாள்.

ஆனந்தி பெருமாளின் வாசகி.  பெருமாளிடம் இலக்கியம் கற்ற மாணவி.  ஆனால் சமீப காலத்தில் அவளுக்குப் பெருமாளின் எழுத்துக்களோடு மாற்றுக் கருத்து ஏற்படுகிறது.  ஏற்பட்டால் என்ன? ’மாற்றுக் கருத்து கொக்கரக்கோ’ என்று கிண்டல் செய்யும் அளவுக்கு பெருமாளிடம் மாற்றுக் கருத்துக்கள் கொண்டவன் கொக்கரக்கோ.  ஆனால் ஆனந்தியின் மாற்றுக் கருத்துக்கள் பெருமாளின் அடிப்படையிலேயே கை வைப்பவையாக இருந்தன. 

அது மட்டுமல்லாமல் ஆனந்தி பெருமாள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவள்.  அங்கேதான் பிரச்சினை.  கொக்கரக்கோவுக்கும் பெருமாள் மீது அந்த இரண்டும் உண்டு என்றாலும், பெருமாளின் எழுத்தோடு அவை உரசுவதில்லை. 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  சமீபத்தில் பெருமாள் வேறொரு பெருமாள் பற்றி ஒரு கிண்டல் கட்டுரை எழுதியிருந்தான்.  அதை அந்த வேறொரு பெருமாள் திட்டியிருந்தான்.  அதற்கு நம்முடைய பெருமாள் ஒரு காட்டமான மறுப்பு எழுதியிருந்தான். 

உடனே ஆனந்தியிடமிருந்து பெருமாளுக்கு மெஸேஜ்.  ”அந்தக் கட்டுரையை நீங்கள் என்னிடம் காண்பித்திருக்கலாம்.  காண்பித்திருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன்.  அதை நீங்கள் உடனடியாக தளத்திலிருந்து எடுத்து விடுங்கள்.  உங்கள் இடம் என்ன?  உங்கள் தகுதி என்ன?  நீங்கள் போய் அந்தப் பெருமாளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கலாமா?  இப்போது வீணாக உங்களை நாலு பேர் திட்டுவார்கள்.  எதற்கு உங்களை அநாவசியமாக நாலு பேர் திட்ட வேண்டும்?  எதற்கு இதெல்லாம்?  நீங்கள் எழுத வேண்டிய நாவல்கள் எத்தனையோ இருக்கின்றன.  அதில் கவனம் செலுத்துங்கள்.”

பெருமாளுக்கு அவன் மூஞ்சியில் காறித் துப்பியது போல் இருந்தது.  அவள் தெரியாமல்தான் செய்கிறாள்.  அளப்பரிய அன்பினால்தான் செய்கிறாள். 

அந்த மெஸேஜுக்கு பெருமாள் ஆனந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் தன் தளத்திலேயே ஒரு பதில் எழுதினான். அவள் அதைப் படித்திருக்க மாட்டாள் என்று நான்கு வாய்ஸ் மெஸேஜும் அனுப்பினான். 

இன்று பெருமாள் ஆனந்தியிடம் ஃபோனில் பேசிய போது Pierre Guyotat பற்றிப் பேச்சு வந்தது.  ஆனந்திக்குத் தெரியவில்லை.  “நான் பியர் க்யூத்தா பற்றி எவ்வளவோ எழுதி விட்டேன்.  நீதான் நான் எழுதுவதைப் படிப்பதே இல்லை” என்று குற்றம் சாட்டும் தொனியில் சொன்னான் பெருமாள்.

“இல்லை பெருமாள்.  நீங்கள் எழுதுவதைப் படித்தால் எனக்கு உடனே மாற்றுக் கருத்து ஏற்படுகிறது.  அதை எனக்குள்ளேயே வைத்துக் கொள்ளவும் தெரியவில்லை.   என்னிடம் சொல்லாதே என்று நீங்களே பலமுறை சொல்லி விட்டீர்கள்.  ஆனாலும் என் வாய் சும்மா இருப்பதில்லை.  சொல்லித் தொலைத்து விடுகிறேன்.  உடனே உங்களிடமிருந்து நாலு வாய்ஸ் மெஸேஜ் வருகிறது.  எதற்கு இந்த வம்பெல்லாம் என்றுதான் நான் நீங்கள் எழுதுவதைப் படிப்பதில்லை.”

வைதேகிக்கும் ஆனந்திக்கும் வித்தியாசம் புரிகிறதா?  யார் நல்லவர் என்று இங்கே நான் பட்டிமன்றம் நடத்தவில்லை.  ஆனந்தி பெருமாளின் மனைவியாக இருந்தால் ஒரே வாரத்தில் வெட்டுக்குத்து, கொலை, தற்கொலை, அல்லது… குறைந்த பட்சம் விவாக ரத்துதான் நடக்கும்.  சந்தேகமே இல்லை.  காரணம், ஆனந்தி இலக்கிய வாசகி.  பெருமாளின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவள்.  அந்த அன்பே அரிவாளாக மாறும்.  அந்த அரிவாளைப் பிடுங்கி பெருமாள் ஆனந்தியை வெட்டிக் கொன்று விடுவான். 

இப்போது இதை ஆனந்தி வாசிக்க நேர்ந்தால் அவள் வயிறு பற்றி எரியும்.  அடப் பாவி, சத்தியம் செய்து விட்டு பாவி நம்மைப் போட்டு நடுச்சந்தியில் அடிக்கிறானே என்று. 

அப்படியெல்லாம் இல்லை.  நான் சொல்வது எளிமையான விஷயம். ஆனந்தியைப் போல் ஒரு வாசகி பெருமாளின் மனைவியாக இருந்தால் இப்படித்தான் ஆகும். 

எப்படி?

நீ எழுதியதைத் தூக்கு.  உனக்குக் கெட்ட பேர் வரும்.  உன்னை நாலு பேர் திட்டுவான்.

அப்படிச் சொன்னால் உடனடியாக விவாகரத்துதான் செய்வான் பெருமாள்.  ஏனென்றால், லௌகீக வாழ்க்கை அவனுக்கு சுன்னி மயிர் என்றால் எழுத்து அவன் உயிர் மூச்சு.  அதில் கையை வைத்து நெறிக்கிறாள் ஆனந்தி. 

கட்டற்ற சுதந்திரமான எழுத்துதான் ஆன்மாவின் உயிர்மூச்சு என்பது ஆனந்திக்குத் தெரியாதா?  Doesn’t she know that to silence it is to unravel the fabric that binds our shared humanity?  ஒரு எழுத்தை நசுக்குவதென்பது ஒரு குரலை அமுக்கிக் கொல்வது மட்டுமல்லாமல் ஆன்மாவின் குரல்வளையையே நெறிப்பதாகாதா? 

ஆனந்தி சொன்னாள், நீங்கள் எப்படி எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசி விடுகிறீர்களோ அதைப் போலவேதான் நானும் உங்களிடம் வெளிப்படையாகப் பேசி விடுகிறேன்.

இல்லை, பெருமாள் அப்படி வெளிப்படையாகத் தன் நண்பர்கள் யாரிடமும் பேசுவதில்லை.  பேசினால் அவனோடு ஒரு பயல் நிற்க மாட்டான்.  கொக்கரக்கோவைப் பற்றியே பெருமாளுக்குப் பல விமர்சனங்கள் உண்டு.  இந்தக் கணம் வரை அவன் கொக்கரக்கோவிடம் அது பற்றிப் பேசியதில்லை.  ஆனந்தி பற்றியும்தான்.  ஆனந்தியிடம் ஒரு நாள் கூட பெருமாள் அந்த விமர்சனங்களை வைத்ததில்லை.  காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. அவர்களை அந்த விமர்சனம் காயப்படுத்தும்.  அதைத் தவிர அந்த விமர்சன்ங்களால் ஒரு பயனுமே இல்லை.  பின்னே எதற்கு அதையெல்லாம் சொல்ல வேண்டும்?  கேட்டால் சொல்லலாம்.  பெருமாளே சில சமயங்களில் தான் எழுதியதை ஆனந்திக்கும் கொக்கரக்கோவுக்கும் அனுப்பி கருத்து கேட்பதுண்டு.  அப்போது சொல்லுங்கள்.  மற்ற சமயங்களில்கூட சொல்லலாம்.  ஆனால் அப்படிச் சொன்னால் பெருமாள் அனுப்பும் வாய்ஸ் மெஸேஜ்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மேலும், இந்தக் கட்டுரையைத் தூக்கி விடுங்கள் என்பது கருத்து அல்ல.  கொலை.  கழுத்தை நெறித்துக் கொல்லும் செயல்.  ஏனென்றால், எழுத்துதானே பெருமாளின் உயிர் மூச்சு? 

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக பெருமாள் வெறும் புனைவுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தானானால் இன்று அவன் எங்கே நிற்கிறானோ அந்த இடத்தில் நின்றிருக்க மாட்டான். ஏனென்றால், அவன் செய்து கொண்டிருப்பது ஒரு கருத்தியல் போராட்டம்.  ஒரு சமூகப் போராட்டம்.  சமூகத்துக்கு எதிரான போராட்டம்.  சமூகத்தை அவன் துப்புரவு செய்துகொண்டிருக்கிறான்.  அவன் எழுதும் சினிமா விமர்சனங்களைப் படித்து விட்டு சமூகமே ஒன்று திரண்டு அவனைத் தாக்குகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன?

ஆனந்தி அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைத் தூக்கி விடச் சொன்னாள் இல்லையா, உடனே அவன் கொக்கரக்கோவிடம் அபிப்பிராயம் கேட்டான்.  அந்தக் கட்டுரை கட்டாயம் எழுதப்பட வேண்டும் என்றான் கொக்கரக்கோ.  சரி, இப்போது பெருமாள் யார் பேச்சைக் கேட்பது?  ஆனந்தியின் பேச்சையா, கொக்கரக்கோவின் பேச்சையா?  என்னய்யா நக்கல் புண்டை பண்ணுகிறீர்களா, ஒரு எழுத்தாளன் யார் பேச்சைக் கேட்டு எழுத வேண்டும்? என்ன ஆனந்தி இது, பெருமாளிடமே பாடம் கேட்டுக் கொண்டு அவனுக்கே பாடம் எடுக்கிறாயா?

நீ சொல்வது போல் அவன் எந்த வம்புதும்பிலும் மாட்டாமல் புனைவுகளாகவே எழுதிக்கொண்டிருந்தானானால் அவன் இன்று ஒரு நடைப்பிணமாகத்தான் உலவிக்கொண்டிருப்பான்.  நீ அவனுக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு அவன் அழிவுக்கு வழி சொல்கிறாய். 

அந்த்தோனின் ஆர்த்தோ ஃப்ரான்ஸுக்கு எதிரான தன் எதிர்ப்புக் குரலை முதலில் எழுத்தாக முன்வைத்தான். பைத்தியக்கார விடுதியில் அடைத்தார்கள். வெளியே வந்து அவன் ஃப்ரான்ஸை நோக்கிக் கத்தினான். அடித்தொண்டையில் கத்தினான். கத்திக் கத்தியே நாடகம் எழுதினான். நாடகத்தில் நடிக்கும்போதும் கத்தினான்.  கத்துவதுதான் அவன் வசனமே.  நாடகம் பூராவும் அவனுடைய கத்தும் சத்தம்தான்.  கத்திக் கத்தியே செத்தான். 

ஆர்த்தோ கத்தினான். பெருமாள் எழுதுகிறான். ஆர்த்தோவின் கதறல் அவன் குரல் வழியே வந்தது. பெருமாளின் கதறல் அவன் கரங்களின் வழியே வருகிறது.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் ஆனந்தி இப்போது பெருமாளை வாசிப்பதில்லை.  எத்தகையதொரு அவமானம் இது!  கருத்து முரண்பாடு வருகிறது என்பதற்காக பெருமாளை வாசிப்பதையே நிறுத்தியாயிற்று.  அப்படியானால் பெருமாள் யார்?  அவன் எழுத்துதானே அவன் அடையாளம்?  அவன் எழுத்துதானே அவனுடைய வாழ்க்கை?  அதைப் படிக்கவில்லையானால் அவனை நீ உன் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி விட்டாய் என்றுதானே அர்த்தம்? 

பின்குறிப்பு: பெருமாள் ஒரு சிலரிடம் மட்டும் எதையுமே மறைக்காமல் முழு நிர்வாணமாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறான்.  பெங்களூர் ஷ்ரேயா, அன்னபூரணி, இன்னொரு ஆனந்தி, மலேஷியாவில் இருக்கும் சந்தனா, இலங்கையில் இருக்கும் நயநதினி (சிங்களம்) மற்றும் மகேஸ்வரி (தமிழ்).  இவர்கள்தான் அவனை எந்த முன்நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட பெண்கள். 

உங்களுடைய சந்தா மற்றும் நன்கொடையை அனுப்பி வையுங்கள்.  

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. Nagar Branch. Chennai