எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்

நடைப்பயிற்சியில்
ஒருகாலத்தில் துணையாயிருந்த
இசை இன்று.
அலுத்துவிட்டது.

ஒரு நண்பனை அழைத்தேன்.
“இப்போதுதான் பாஸ்டனிலிருந்து வந்தேன்.
இது இரவா பகலா
என்றே தெரியவில்லை.
பிறகு பேசலாமா?”
என்றான்.

இன்னொருவனை அழைத்தேன்.
“குடித்துக் குடித்து
உணவுக்குழாய் கெட்டுப்போய்
படுக்கையில் கிடக்கிறார்
உங்கள் நண்பர்”
என்றாள் அவன் மனைவி.
அழாமல் இருக்க முயற்சிப்பது
குரலில் தெரிந்தது

மற்றொரு நண்பன்:
நாற்பத்தைந்து வயதில்
மனைவி செக்ஸை நிறுத்திவிட்டாள்
மூன்று வருடமாக
தினமும் மூன்று முறை
சுயமைதுனத்தில்
ஓடுகிறது வாழ்க்கை என்று புலம்பினான்

ஒருகாலத்தில்
“காலையில் உன்னோடு பேசினால்
நாள் முழுக்க உற்சாகம்,”
என்றவள்,
இப்போது
“காலையில் பேசினால்
மன உளைச்சல்.
மாலையில் பேசலாமா?”
என்கிறாள்.

இன்னொரு தோழிக்கு
இரண்டு தினங்களுக்கு முன்பு
ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
பார்த்தாளா
என்றே தெரியவில்லை.
நீலக்கோடு தெரிந்தால்
பெரிய அசௌகரியம்
என்றாள்.

எது குறித்தும்
புகாரில்லை
எல்லோரும்
இன்புற்றிருக்க வேண்டும்.