சீனி அளவுக்கு எனக்கு க்ரியேட்டிவ் யோசனைகள் சொன்ன நண்பர்கள் யாரும் இல்லை. யாராவது வருவார்களா, அவரை வெல்வார்களா, மீறுவார்களா என்று நானும் பதினைந்து ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஒருத்தரும் இல்லை. இன்று சற்று நேரம் முன்னால் சீனி ஒரு கதை சொன்னார். அதேபோல் நானும் ஒன்று சொன்னேன். உடனே சீனி இதை நீங்கள் ஒரு நாவலாக எழுதலாமே என்றார். அந்தக் கணம் வரை அப்படி எனக்குத் தோன்றவே இல்லை. நானும் அந்தக் கதையை ஒரு தோழியிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவள் இந்த யோசனையைச் சொல்லவில்லை. ஒரு படு பயங்கரமான ட்ரான்ஸ்கிரஸிவ் கதை. இதுவரை இந்த அளவுக்கு நேரடியான ட்ரான்ஸ்கிரஸிவ் கதையை நான் எழுதியதில்லை.
ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், நானெல்லாம் ஜார்ஜ் பத்தாயின் நிழலைக் கூடத் தொட்டதில்லை என்று. ஏனென்றால், தமிழ் தாங்காது. ஜார்ஜ் பத்தாயே தன் கண்ணின் கதையை ஒரு புனைப்பெயரில்தான் எழுதினார். அந்த நாவல் வந்த போது அவர் ஃப்ரான்ஸில் ஒரு பிரபலமான தத்துவவாதியாக அறியப்பட்டிருந்தார். பிறகுதான் ரொலாந் பார்த்தும், சூஸன் சொண்டாகும் கண்ணின் கதைக்கு ஒரு முன்னுரை எழுதி அதை எழுதியவர் நம்மாள்தான் என்று வெளிப்படுத்தினார்கள்.
நிலைமை அப்படி இருக்கும்போது நான் இந்தத் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு எப்படி ஜார்ஜ் பத்தாய் மாதிரி எழுதுவது? ஆனால் இப்போது அப்படி எழுதும்படியான சூழல் உருவாகி விட்டது. அப்படி நான் ஒரு கதையைக் கேட்டேன். சமூகத்தில் அப்படி நடக்கும்போது நான் ஏன் அதைப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும்? மற்ற எழுத்தாளர்கள் அதைப் புறக்கணித்துவிட்டுப் போய் விடுவார்கள். என்னால் அது முடியாது. நான் நமனை அஞ்சோம் பார்ட்டி. நான் யாருக்கு அஞ்ச வேண்டும்? அதுவும் எழுபத்து மூன்று வயதில்? எழுதலாம் எனத் துணிந்து விட்டேன். மிகப் பெரிய பிரச்சினைகள் வரும். மிகப் பெரிய இழப்புகள் வரும். கவலை இல்லை. எழுத்தே சுவாசம். எழுத்தே தெய்வம்.
இன்னும் ஒரே மாதத்தில் குத்து விளக்கு நாவல் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். மிகச் சிறிய நாவல்தான். ஆனால் அது ஒரு வெடிகுண்டு. உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு சம்பவமும் உண்மை. எதார்த்தம். இன்றைய எதார்த்தம். ஒரு மாதம் காத்திருங்கள். தலைப்பு சீனி சொன்னது. பழைய வார்த்தை. குத்து விளக்கு. ஆனால் கதை அதற்கு எதிர் மாறானது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வங்காள இயக்குனர் என்னிடம் நீங்கள் ஏன் ஒரு திரைப்படத்தை இயக்கக் கூடாது என்று கேட்டார். இயக்கினால் அது வெளிவராது என்றேன். ஏன் என்றார். நான் சொன்னேன்.
பாலியல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் யோனியை திரைப்படத்தின் ஆரம்பத்தில் மூன்று நிமிடம் எந்தப் பின்னணி இசையும் இல்லாமல் காண்பிப்பேன். ரெடியா என்றேன்.
மூச்சுப் பேச்சு இல்லை.
இதை நான் சொன்னதற்குக் காரணம், hour of the furnaces என்ற படத்தில் சே குவேராவின் குண்டு துளைக்கப்பட்ட உடல் – முக்கியமாக முகம் – படத்தின் தொடக்கத்தில் மூன்று நிமிடம் காண்பிக்கப்படுகிறது.
குத்து விளக்கு நாவல் அப்படித்தான் இருக்கும். சே குவேராவின் முகமாக அல்ல. பாலியல் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் யோனியாக.
எதுவுமே கற்பனை இல்லை. எதார்த்தம். பச்சை எதார்த்தம். நீங்களும் கண்டிருப்பீர்கள். எதுவுமே புதிது அல்ல. நம் கண் முன்னே நிகழ்வதுதான். ஆனால் இதுவரை எந்தத் தமிழ் எழுத்தாளரும் எழுதியது இல்லை. ஆம். மீண்டும் சொல்கிறேன். இதுவரை எந்தத் தமிழ் எழுத்தாளரும் எழுதியது இல்லை. இரண்டாயிரம் வருடத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் நான் முதல் முதலாக எழுதி வைக்கிறேன். இதற்காக எனக்கு எந்தக் கல்லடி வந்தாலும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஏனென்றால், இது நான் கண்ட கதை. அதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.
இதை எழுதுங்கள் என்று முதல் விதை போட்ட அராத்துவுக்கு இந்த நாவலை நான் சமர்ப்பணம் செய்ய வேண்டும். செய்வேன். அவர் சொல்லியிருக்காவிட்டால் இதை நான் எழுதியிருக்க மாட்டேன். அந்த அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸ்விவ் தன்மை கொண்ட கதை இது.
ஒரு மாதம் பொறுத்திருங்கள்.