வர்ண மேகங்களிடையே இருந்து… (நெடுங்கதை) மனுஷா ப்ரபானி திஸாநாயக்க சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

(ஒரு முன்குறிப்பு: மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம்.

இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் உள்ளீடாக ஏதோ ஒன்று அதற்கும் இதற்கும் இடையே ஓடுகிறது. உருகுவாயைச் சேர்ந்த Armonia Somers என்ற பெண் எழுத்தாளர் எழுதிய The Fall என்ற சிறுகதை. அந்தக் கதையை சுருக்கமாக நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அதன் இணைப்பை இந்த நெடுங்கதையின் முடிவில் தருகிறேன்.

சிங்கள இலக்கிய உலகம் இப்படி ஒரு கதைக்கு இடமளிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த நெடுங்கதை பற்றிய விவாதங்கள் உருவானால் அது நமது இலக்கியச் சூழலுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.

  • சாரு)

எனது ஈரக் கூந்தலைக் காய வைக்க நான் எப்போதும் இங்கேதான் வருவேன். ஈரக் கூந்தலைக் காய வைப்பதற்காக மாத்திரமல்ல. கூந்தலின் கீழே தலையினுள்ளே இருக்கும் பிரச்சினைகளை மறக்கவும் நான் பெரும்பாலான நேரங்களில் இங்கேதான் வருவேன். வருவேன் என்பதல்ல ஏறுவேன்  என்பதுதான் மிகச் சரி. ஏறி அமர்ந்து கொள்வேன்.

உண்மையில் இதுவோர் உயரமான மதில் சுவர். சாதாரணமாக எவராலும் இலகுவாக இதில் ஏறிவிட முடியாது. அதிலும் குறிப்பாக சிறுமியொருத்திக்கு!  இருந்தாலும் நான்தான் இப்போது சின்னப் பெண் இல்லையே! நானோ எனது பால்ய காலத்திலிருந்தே இதில் ஏறுகிறேன். அதனால் இப்போதெல்லாம் என்னால் இதில் இலகுவாக ஏறி விட முடிகிறது. பாடுபடவே தேவையில்லை.

இந்த உயர்ந்த மதிலைக் குறித்து நான் கேள்விப்பட்டும் இருக்காத காலத்தில்தான் இதை நான் சந்தித்தேன். அதுவும் மிகவும் தற்செயலாக நடந்தது.

அப்போது எனக்கு பதினாறு வயது. யாரிடமும் உதவி கோராமல் எனக்கே தோன்றி எனது கைகளாலேயே செய்த சிறிய காற்றாடியொன்றைப் போன்ற ஒரு பொருளை நான் கைகளில் வைத்திருந்த வேளையில் காற்று பலமாக வீசியதால் அது எனது கைகளிலிருந்து பறந்து போனது. யாருக்கும் தெரியாமல் கையில் பொத்தி வைத்திருக்கும் எதுவும் கூட புற சக்திகளால் தீண்டப்பட்டால் பறந்து விடும் என்பதைக் கூட அப்போதுதான் நான் அறிந்து கொண்டேன்.

நான் காற்றைத் தொடர்ந்து ஓடினேன். அம்மா எனது கூந்தலில் முடிச்சிட்டு விட்டிருந்த இளஞ்சிவப்பு நிற ரிப்பன் கூட எனக்கே தெரியாமல் அவிழ்ந்து வீழ்ந்திருந்தது. காற்று அந்தளவு பலமாக வீசிக் கொண்டிருந்தது. எமது பாடசாலை வாகனம் ஒருபோதும் போயிருக்காத ஒற்றையடிப் பாதையில் சின்னதோர் அழகிய காட்டின் நடுவே நான் சிரித்தவாறே ஓடினேன். ஓடிக் கொண்டிருந்த வெள்ளி நீரோடையைத் தாண்டிக் குதிக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை எனக்கு.

நான் தண்ணீரில் குதித்தேன். அதில் கால் வைக்கும்போது உணர்ந்த குளிரில் எனது உள்ளமும் விறைத்துப் போனது. கடவுளே! வாழ்க்கை இவ்வளவு வசீகரமானதா?! பாடசாலை விட்டு வந்ததும் எனது அறையிலிருந்து வெளியே வர ஏன் ஒருபோதும் தோன்றவேயில்லை எனக்கு?! உலகம் என்பது எனது வீட்டுக்குள்தான் இருக்கிறதென அவ்வளவு காலமும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உலகமோ வீட்டுக்கு வெளியேதான் இருக்கிறது.

அவ்வேளையில் காற்றைத் துரத்தியவாறே நான் காற்றின் பின்னால் ஓடப் போய்த்தான் அவை அனைத்தையும் கண்டேன். அந்தச் சின்னக் காற்றாடிதான் நான் வெளியே வர பாதை அமைத்துக் கொடுத்தது. எனது உள்ளங்கையிலேயே சுருண்டு கொண்டிருந்து அந்தக் காற்றாடிக்கே அலுத்துப் போயிருந்திருக்கக் கூடும். அவ்வாறென்றால் அந்தக் காற்றாடி ஒரு மாய சக்தியோ?! ஆனால் அதை உருவாக்கியவள் நான்தானே?! நான் மந்திரவாதியின் மகளோ?! எனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. எனது அம்மா ஒரு தேவதை. அப்பாவோ ஒரு தேவதூதன். இறைபக்தி மிக்கவர்கள் அவர்கள். ஆகவே என்னுள்ளே மந்திர ரத்தம் கலந்தே இருக்காது. அவ்வாறென்றால் அந்தக் காற்றாடிக்கு மந்திர சக்தி வந்தது எவ்வாறு?!

வெள்ளி நிறத்தில் பளபளத்த நீரோடையைக் கடந்ததும், பால் நிறத்தில் ஒரு நீர்வீழ்ச்சியைக் கண்டதும் எனது எண்ணங்கள் பனி நிறத்திலாயின. பனி நிறத்திலாகிய எண்ணங்கள் உறைந்து போயின. எனது எண்ணங்களால் பனி நிறமாக ஆக முடியும் என்றால், எனது விரல்களுக்கு மந்திர சக்தியும் வரக் கூடும்தானே?!

அந்த  நீர்வீழ்ச்சியில் நீராடியவாறே நான் இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில்தான் எனது பனி நிற எண்ணங்களெல்லாம் கரைந்து வெண்ணிறமாக ஒழுகத் தொடங்கியது. மல்லிகைப் பூ கசங்கும் வாசனையோடு ஈர கவுண் எனது மேனியோடு ஒட்டிக் கொண்டது. எனது எண்ணங்கள் இத்தனை வாசனை மிக்கவையா?!

என்னையே நான் உறிஞ்சியவாறு என்னைப் பார்த்தபோதுதான் எனது தேகத்தின் வடிவத்தை நான் கண்டேன். எனது மேனியில்    பூரித்ததும், ஒடுங்கியதும், நீண்டதுமான இடங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இனிமேலும் நான் சின்னப் பெண் இல்லை. நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். நான் கண்டு பொறாமைப்பட்ட ஏனைய பெண் பிள்ளைகளைப் போலவே நானும் ஓர் அழகிதான். எனது மார்புகள் திடீரென்று இவ்வளவு பூரித்துச் செழித்தது எவ்வாறு?!

எனக்கு என் மீதே ஒரு காதல் உருவாகும் முன்புதான் நான் எனது முதற்காதலைத் தேடித்தானே ஓடி வந்தேன் என்பது எனக்கு ஞாபகம் வந்தது. எனது விரல்களுக்கு அந்த மந்திர சக்தி வந்தது எனது மனக் கிளர்ச்சியால்தான் என்பதை நான் உணர்ந்தேன். யாருடைய உதவியோ, வழிகாட்டலோ இல்லாமல் நானே உருவாக்கிய அந்தச் சின்னக் காற்றாடியை எப்படிப் பறக்க வைப்பது என்பதைக் கூட அறியாமல் நான் போகும் இடமெல்லாம் அதைக் கையில் பொத்தி எடுத்துக் கொண்டு போனேன். காற்று வந்து அந்தக் காற்றாடியோடு அந்தச் சிறிய வனத்தின் மத்தியில் என்னைக் கூட்டி வந்து எம்மை அங்கு கரைத்து விட்டிருந்தது. விதி வரைந்த பாதை வழியே ஒரு நெடும் பயணம்.

இப்போது நான் இருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பேன்?! இனியும் சிரித்துக் கொண்டிருப்பது பொருந்தாது. இருள் சூழ்ந்துகொண்டிருந்த அவ்வேளையில் நான் அழுதவாறே மீண்டும் ஓடத் துவங்கினேன். அப்போதுதான் நான் இந்த உயரமான மதிலைக் கண்டேன். வண்ண வண்ண மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக இந்த மதிலோடு ஒட்டிக் கொண்டிருந்த காரணத்தால் திடீரென்று இது ஒரு மதில் சுவர் என்பது கூட எனக்கு விளங்கவில்லை.

சடுதியாக நானொரு பேரானந்தத்தை உணர்ந்தேன். காற்றாடி அந்த மதில் மேலே இருந்தது. அப்போது காற்று வீசவில்லை. குளிர் மாத்திரமே இருந்தது. இரவாகிக் கொண்டிருந்தது. ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம்தான் எனது வதனம் பிரகாசித்திருக்கும். வீட்டில் என்னைத் தேடுவார்களோ?!

மதில் மேல் ஏறாமல், அந்தக் காற்றாடி இல்லாமல் இந்த இரவை சுய நினைவோடு கழிக்க என்னால் முடியாதிருக்கும் என்பது எனக்கே புரிந்தது. இருந்தாலும் ஒரு சிறுமி எவ்வாறு இதில் ஏறுவாள்?! சிறுவனாக இருந்தாலும் அவனால் கூட இலகுவாக இதில் ஏற முடியாதிருக்கும். இதற்கும் ஏதாவது வழியிருக்க வேண்டும். காற்றாடியானது எனது கண்களில் தென்படுமாறு மதில் மேலே இருப்பது கூட எனது மந்திர சக்தியால்தானே?! எனது மந்திர சக்தியை, எனது கைகளினாலேயே தொட வேண்டுமானால் நான் இந்த மதிலில் எவ்வாறேனும் ஏறியே ஆக வேண்டும். சிலவேளை அவ்வாறு ஏறினால் இவை அனைத்தும் காணாமல் போய் நான் மீண்டும் எனது அறைக்குள்ளே விழவும் கூடும்.

என்னைப் பார்த்து தமது புட்டங்களால் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த மின்மினிப் பூச்சிகளால் கதைக்க முடியுமாக இருக்குமோ என்று கூட சட்டென்று எனக்குத் தோன்றியது. நான் பேசினால் அந்தச் சத்தம் கேட்டு அவை பயந்து போகக் கூடும். ஆகவே நான் ஏதோ ரகசியம் கூறப் போவதைப் போலத்தான் முதன்முதலாக இந்த மதிலை நெருங்கினேன்.

நான் பேச முன்பே எனது உதடுகளின் சூட்டுக்கும், சுவாசத்தின் ஓசைக்கும் பதில் கூறும் விதமாக ஒரு கூட்டம் மின்மினிப் பூச்சிகள் படிக்கட்டு போல கீழிருந்து மேலாக படிப்படியாகப் பறந்து சென்றமை எனக்கு மேலே செல்ல வழிகாட்டுவதைப் போல இருந்தது. என்றாலும் அந்தப் பாதையோ கூரிய முற்களின் மீதிருந்தது. முள் குத்தினாலும் சரி. நான் ஏறியே ஆகவேண்டும். இந்தக் காட்டுக்குள் வேறு மிருகங்களோ, பாம்புகளோ கூட என்னருகே வரக் கூடும். ஆகவே எவ்வாறு நான் தரையில் இருப்பேன்?!

உயிர் வாழும் ஆசை திடீரென உதித்து எனது பாதங்களை கூரிய முற்களின் மீது பதிக்கச் செய்தது. அவ்வாறு பாடுபட்டு ஏறுகையில் எனக்கு கீழே பார்க்கும் ஆசை வந்தது. என்றாலும் நான் கீழே பார்க்கும் முன்பே தமது புட்டங்களால் சிரிக்கும் எனது சிறிய நண்பர்கள் கூட்டம் எனது எண்ணத்தை அறிந்து கொண்டதுபோல கலந்தாலோசித்து தரையை எனக்குக் காண்பிக்காதிருக்க ஒரு பாயை நெய்தது போல தரைக்கு சமாந்தரமாக மிதந்து கொண்டிருந்தது. ஆகவே எனக்கு தரை தென்படவில்லை.

நான் அந்தளவு தூரம் ஏறியிருக்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. அவ்வளவு பாடுபட்டும் அந்தளவு தூரம் நான் ஏறியிருக்கவில்லையா என்ன?! என்றாலும் மேலே பார்த்தபோது காற்றாடி அருகில் இருப்பது போலத்தான் தென்பட்டது. ஆனால் இனியும் என்னால் ஏற முடியாது. எனது உடலிலிருந்த சக்தியையெல்லாம் நான் இழந்து விட்டிருந்தேன். ஆகவே உயிர் வாழும் ஆசையை நான் கை விட்டேன். எனது கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன.      

நான் மீண்டும் கண் திறக்கையில் வாழ்க்கையானது என்னைத் தூக்கி மதிலின் மீது வைத்திருந்தது. இவ்வாறு நடக்கும் என முன்பே தெரிந்திருந்தால் இரண்டு, மூன்று அடிகள் மாத்திரம் ஏறி விட்டு கீழே விழுந்திருப்பேனே! ஒரு சின்னப் பெண்ணை இந்தளவு அலைக்கழிக்க விட்டும் இந்த வாழ்க்கைக்கு ஒரு பொறுப்பும் இல்லாமலிருப்பதைப் பாருங்கள். எனக்கு கோபம் கோபமாக வந்தது. என்றாலும் மதிலொன்றின் மீதிருக்கிறேன் என்பதை மறந்ததால் சமநிலை தவறி நான் மீண்டும் கீழே விழப் பார்த்தேன். அதுவும் மதிலின் மறுபுறமாக.

எவ்வாறோ நான் கால்களிரண்டையும் மதிலின் இரண்டு பக்கமாகப் போட்டுக் கொண்டு மதிலை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். காற்றாடியோ அப்போதும் எனக்கு சற்று தொலைவாகத்தான் இருந்தது. என்னால்  முடியவில்லை. சீனப் பெருஞ் சுவரை பத்து மடங்கால் பெருக்கியது போல என்ன இது ஒரு வித்தியாசமான மதில் சுவர்?!

அது மாத்திரமல்லாமல் நான் ஓடி வந்த பக்கம் போல இருக்கவேயில்லை மதிலின் மறுபக்கம். பலதும் அடங்கியதாக இருந்த  அந்தப் பக்கமோ பல வர்ணங்களைக் கொண்டிருந்தது. அது வித்தியாசமானதாக இருந்தது. பெரிய பெரிய பூக்கள். பாரிய பெருவிருட்சங்கள். சின்னச் சின்னக் குருவிகள். பென்னாம்பெரிய பட்டாம்பூச்சிகள். எனக்கு பெயரே தெரியாத பல ஜீவிகள் தொலைவில் பறந்து கொண்டிருந்தன. அவை மாத்திரமா?! பறக்கும் பூ இதழ்கள், சுற்றிச் சுழலும் வானவில், வண்ண வண்ண மேகங்கள் போன்றவற்றையும் அங்கே நான் கண்டேன். சில நேரங்களில் வாசனை மிக்க நறுமணத்தையும், சில நேரங்களில் துர்நாற்றத்தையும் அங்கே உணர்ந்தேன். என்றாலும் அந்தத் துர்நாற்றம் கூட அருவருப்பைத் தோற்றுவிக்கவில்லை.

ஏன் இந்தளவு பெரிய மதில் சுவரால் எமது நிஜ உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது?! இந்த மதில் சுவர் மாத்திரம் இல்லையென்றால் எல்லோருமே இந்த சுற்றுச் சூழலை அனுபவித்திருப்பார்களே! அப்போதுதான் ஓர் இளஞ்சிவப்பு நிறப் பறவையொன்று வந்து எனது நெற்றியில் கொத்தி விட்டுப் போனது. எனதேயான சிந்தனையொன்று வந்து எனக்குப் பதிலளித்தது.

‘நான் இருப்பது கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்களையும், தடுக்கப்பட்ட செயல்களையும் பிரிக்கும் மதில் சுவரின் மீது. இந்த மதில் சுவரின் மீது ஏறுவது கூட தடை செய்யப்பட்டதுதான். அதிலும் குறிப்பாக என்னைப் போன்ற பதினெட்டு வயதிலும் குறைவானவர்களுக்கு. ஆகவே எவருக்கும் இந்த மதில் சுவரின் மீது அமர்ந்திருப்பதுவும் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. அமர்பவர் ஒன்றோ ஏற்றுக் கொள்ளப்பட்டவை இருக்கும் பக்கமாக விழ வேண்டும். இல்லாவிட்டால் தடுக்கப்பட்டவை இருக்கும் பக்கமாக விழ வேண்டும். இரண்டுக்கும் இடையில் அமர்ந்திருக்க அனுமதியில்லை.’

இவ்வாறாக எனது எண்ணம் எனக்காக வாதிட்டு விட்டு, திடீரென்று எனக்கெதிராகவும் பேசத் தொடங்கியது.

‘விழு! தடுக்கப்பட்டவையுள்ள பக்கமாக விழு! இவ்வளவு சின்னப் பெண்ணாக இருந்து கொண்டு இதன் மேல் ஏறுவதற்கு மனதைத் தயார்படுத்திக் கொண்டது ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றோடு மாத்திரம் வாழ்ந்து முடிக்கவல்லவே?!’

அதே கணத்தில் காற்றாடியானது தடுக்கப்பட்டவை இருக்கும் பக்கமாக மிதக்கத் தொடங்கியது. நான் பாய்ந்து அதைப் பிடிக்க முற்பட்ட வேளையில், ஆமாம், நான் அந்தப் பக்கம் விழுந்து விட்டிருந்தேன். என்னதான் நான் விசாலமான கருப்புக் காளான்கள் மீதுதான் விழுந்திருந்த போதிலும் எனக்கு வலித்தது. அந்தப் பக்கத்தில் மின்மினிப் பூச்சிகளின் பாய் இருக்கவில்லை. விழுந்ததுமே வேதனை தரக் கூடிய ஓர் இடம் அது. எனது உள்ளத்துக்கோ, உடலுக்கோ எவ்வித இதமும் இருக்கவில்லை.

நான் ஓலமிட்டேன். ‘என்னைக் காப்பாற்ற யாருமேயில்லையா?’ என்று கத்தினேன்.

‘நான் பாடுபட்டு மதிலின் மேலே ஏறியது உயிர் பிழைக்கத்தானே?! இங்கு வந்த போது நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. எனது மனதில் எழுந்த உத்வேகத்துக்கு ஏற்ப நான் ஓடி வந்தேன். காற்றாடியின் மீதுள்ள பாசத்தின் காரணமாகத்தான் நான் மதிலின் மேலே ஏறினேன். எனக்கு இந்த ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றைப் பற்றியோ, விலக்கப்பட்டவற்றைப் பற்றியோ எதுவுமே தெரியாது கடவுளே! போதாததற்கு என்னிடம் இப்போது எனது காற்றாடியும் இல்லை. நானே எனக்கில்லை’ என்று நான் கதறிக் கதறி சத்தமாக அழுதேன்.

அப்போதுதான் யாரோ, எங்கிருந்தோ வந்தார். என்னை மிகுந்த கருணையோடு கூர்ந்து பார்த்தார். அவர் ஒரு மனிதர் போலத் தெரியவில்லை. மனிதரில்லை என்பது போலவும் தெரியவில்லை. மிகவும் சாந்தமாகத் தெரிந்தார். உண்மையில் அவர் ஒரு தேவதூதர் போலத் தெரிந்தார்.

கடவுள் என்று சொல்லப்படுபவர் உண்மையில் இவர்தானா? அவர் தனது மேலங்கியான சால்வையை சற்று ஒழுங்குபடுத்தியதை மாத்திரம்தான் செய்தார். மறுகணமே நாங்கள் இருவரும் மீண்டும் மதில் மேல் இருந்தோம். எனது வாய் முந்திக் கொண்டது.

“யார் நீங்கள்?”

“உன்னை அறிந்தவர்.”

“நான் இப்போது எங்கே இருக்கிறேன்?”

“நீ நினைக்கும் இடத்தில்தான் நீ இருக்கிறாய்.”

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?”

“நீ கத்தினால், அது கேட்கும் தொலைவில்.”

நான் அவரது பதில்களைப் புரிந்து கொள்ள முடியாமல் அவரது கண்களையே நேராகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவரது கண்களும், அந்தச் சால்வையும் மாத்திரமே தென்பட்டன. ஆழமான அந்தக் கண்களிலிருந்து கருணையானது பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதை எவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அவர் எனது பார்வையைத் தவிர்த்தவாறே நான் கத்தியது மேலுலகத்துக்கே கேட்டது என்றார். அப்போது அவர் தியானத்தில் இருந்தாராம். தடுக்கப்பட்டவை இருக்கும் பக்கம் தொடர்ச்சியாக மூன்று முறை விழுந்தால் அதன் பிறகு தன்னால் கூட என்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை இருக்கும் பக்கம் கொண்டு வர முடியாது என்றார். நான் விரும்பும் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வயது எனக்கு இன்னும் வரவில்லை என்பதால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டவைக்கும், தடுக்கப்பட்டவைக்கும் நடுவில் இருக்கும் மதில் மேல் அமர்ந்து பழகுவதுதான் இப்போதைக்கு நல்லது என்றார். என்றாலும் ஒரு புறமாக இருப்பதிலும் பார்க்க இரண்டுக்கும் நடுவில் சமநிலையில் இருப்பதுதான் கடினம் என்றும் அவர் சொன்னார். காரணம், ஏற்றுக் கொள்ளப்பட்டவையோடு மாத்திரம் இருந்து பழகியவர்களைப் போலவே, தடுக்கப்பட்டவையோடு மாத்திரம் இருந்து பழகியவர்களுக்கும் இந்த மதிலின் மீது சமநிலையில் இருக்க முடியாதாம். ஒரு மனதில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையும், விலக்கப்பட்டவையும் கட்டுப்படுத்தப்படுவது ஏதோ புற சக்தியால் அல்லவாம். ஆகவே ஒருவரது இக்கட்டான சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை வேறு எவராலும் எடுக்கவே முடியாது என்று அவர் கூறிக் கொண்டிருக்கையில் நான் மென்மேலும் கேள்விகளைத் தொடுக்க வாயைத் திறந்ததுதான் தாமதம் சட்டென்று அவர் காணாமல் போய் விட்டார். மறுகணமே நான் எனது அறையில் படுக்கையின் மீதிருந்தேன். காற்றாடி எங்கே போனதோ நானறியேன்.

என்னதான் அந்தக் காற்றாடியை நான் மறந்துவிட்ட போதிலும், மதில் சுவரையோ, சால்வையையோ, சாந்தமான அந்த விழிகளிரண்டையுமோ மறக்காமலே இருந்தேன். அவர் ஒரு துறவியாக இருந்திருந்தால் ‘இந்தச் சின்ன வயதில் அறியாத பக்கமெல்லாம் ஏன் சுற்றித் திரிகிறாய்?’ என்று என்னைத் திட்டியிருக்கலாமே! என்றாலும் அவர் என்னைத் திட்டவேயில்லை. வேண்டாம் என்று எதற்கும் தடை விதிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக ‘உனது வாழ்க்கைப் பொறுப்புகளை நீயே எடுத்துக் கொள்’ என்றுதான் சொன்னார். ஏற்றுக் கொள்ளப்பட்டவைக்கும், விலக்கப்பட்டவைக்கும் நடுவே இருக்கப் பழகிக் கொள்ளச் சொன்னார்.

ஆகவேதான் நான் அவ்வப்போது அந்த இடத்துக்குப் போனேன். அதுவும் ஓர் ஒற்றைக் காரணத்துக்காகவல்லாமல், பல காரணங்களுக்காக. முதற்காரணம் எனது சுருண்டு அலையடிக்கும் நீண்ட கூந்தல். எனது கூந்தலைக் காய வைக்கும் அளவுக்கு நல்ல காற்றடிப்பது அந்த இடத்தில்தான்.

எனது வயது ஏற ஏறத்தான் ஒரே எண்ணத்தோடு மதில் மேல் அமர நான் பழகிக் கொண்டேன். நான் வரும்போதே தமது பாயை மிதக்க விடும் அளவுக்கு மின்மினிப் பூச்சிகள் என்னுடன் நட்பாகியிருந்தன. சோம்பலை நான் உணரும் சமயங்களில் எல்லாம் மதில் சுவரின் மீது ஏறியிருப்பதைத்தான் நான் செய்தேன். மதிலின் மேலிருந்து பார்க்கையில் தென்படும் இரண்டு சூழல்களினதும் வேறுபாட்டை நான் வித்தியாசம் பாராமல் பார்த்து ரசித்தேன்.

ஏற்றுக் கொள்ளப்பட்டவை இருக்கும் பக்கத்தில் கால்களைப் போட்டவாறு அமர்ந்திருந்தால் வீசும் காற்றுக்கு எனது கவுன் கொஞ்சம் கூட மேலே ஏறாது என்றாலும் தடுக்கப்பட்டவை இருக்கும் பக்கத்தில் கால்களை போட்டிருந்தால் உடனே மெய் சிலிர்க்கும் அளவுக்கு எனது மேனியில் குளிர்ச்சியை நான் உணர்வதோடு எனது கவுன் கந்தல் கந்தலாகக் கிழிவது போல நான் உணரத் தொடங்கினேன். இவை இரண்டுமே எனக்கு மிகுந்த குதூகலத்தை அளித்தன.

அது போதாதற்கு எனது கூந்தல் தடுக்கப்பட்டவை பக்கமாக விழுந்தால் அது நீண்ட நீண்ட வடிவங்களில் பின்னப்பட்டு புதுவித மாயையைத் தோற்றுவித்தது. அது மனதைக் கவரக் கூடியதாக இருந்தது. அவ்வேளையில் எனக்கு என் மீதே ஒரு காதல் தோன்றும். நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.

நான் உடற்பயிற்சிகளைக் கூட அந்த மதிலின் மீதிருந்துதான் செய்தேன். பல நேரங்களில் தடுக்கப்பட்டவை பக்கமாக கால்களைப் போட்டுக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவை பக்கமாக தலையை சாய்த்து பாயாக மிதந்து கொண்டிருக்கும் மின்மினிப் பூச்சிகளோடு கதைத்துக் கொண்டிருப்பேன் நான். அந்தக் கோணத்தில் சாய்ந்திருப்பது மிகவும் சிரமமானதுதான். உடலாலும், எண்ணங்களாலும் தடுக்கப்பட்டவற்றோடு முழுமையாக ஒன்றாமல் கால்களை மாத்திரம் அங்கு போட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதில்லை. கடினமான பயிற்சிக்குப் பிறகே எனக்கு அது வசப்பட்டது. அதைக் குறித்து இப்போது நான் பெருமையாக உணர்கிறேன். அதுதான் மதிலின் மீது எனக்குப் பிரியமான இருப்பு.

எனது அந்த இருப்பை யாராவது பெண்ணொருத்தி கண்டால் சிரித்துச் சிரித்தே அவளது உயிர் போகும். ஓர் ஆடவன் கண்டால் மோகத்தில் தடுமாறுவான். காரணம் தடுக்கப்பட்டவற்றின் பக்கத்தில்தான் ஆடைகளுக்கு எந்த வேலையும் இல்லையே! அந்தப் பக்கமாக கால்களைப் போட்ட மறுகணமே அணிந்திருக்கும் ஆடை நைந்து கரைந்து போகும் அளவுக்கு அங்கமெல்லாம் தெரியத் தொடங்கும். அதைக் கடவுள் கண்டாரானால் கோபிக்கக் கூடும். இருந்தாலும் நான் வெட்கப்படவில்லை. அங்கு யார்தான் என்னைக் காணக் கூடும்?! எனது கடவுளோ தியானத்தில் இருப்பாரே! மதில் சுவர் என்பதே ஓர் எல்லைக் கோடுதானே!

எல்லைக் கோடுகளின் அருகே மக்கள் வசிக்க மாட்டார்கள். எல்லைக் கோடுகளின் இரு புறங்களிலிருந்தும் சற்று உள்ளே செல்லும்போதுதான் மக்கள் குடியிருப்புகளைக் காண முடியும். தடுக்கப்பட்டவை பக்கத்தில் தொலைவில் பறந்து கொண்டிருக்கும் நான் அறியாதவற்றுக்கு என்னைக் குறித்த ஓர் உணர்விருக்கும் என்றே எனக்குத் தோன்றாது. என்றாலும் சில என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் நான் உணர்வேன். சரி. எனக்கென்ன?! பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டுமே!

தடுக்கப்பட்டவற்றின் பக்கமாக துர்நாற்ற வாடையோடு நான் சுவனத்து நல்வாடையையும் அவ்வப்போது உணர்ந்தேன். சுவர்க்கங்கள் அனைத்தும் இந்த மதிலுக்கு நேர் மேலாகத்தான் இருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றும். ஏனென்றால் சரியாக நேர்மேலே பார்த்தவாறு சுவாசிக்கும்போதுதான் சுவனத்து வாடையை நான் உணர்ந்தேன். என்றாலும் தலையை சற்று ஒருபக்கமாகச் சாய்த்து சுவாசிக்கையில் போதையூட்டும் பூக்களினதும், பழங்களினதும் கலவை போன்ற ஒரு வாசனையைத்தான் நான் உணர்ந்தேன்.

நிச்சயமாக அது வரையறுக்கப்பட்டதும், திகிலூட்டுபவற்றிலிருந்தும் வரும் சமநிலையற்ற காமத்தின் வாசனை. அதை ஓர் அருமையான நறுமணம் என்று கூட சொல்லலாம். அந்த வாசனை எனது மனதை மயக்குவதால் சில சமயங்களில் நான் விழப் பார்ப்பேன். இருந்தாலும் அப்படி வீழ்வேன் என்பதை அறிந்திருப்பதால் என்னையே நான் காப்பாற்றிக் கொள்வேன். சுவனத்திலிருந்து அவ்வப்போது மெலிதாகக் காதில் விழும் நற்போதனைகளும் எனக்கு மிகுந்த தைரியமூட்டின.

ஒரு நாள் அந்தச் ‘சால்வை’ இப்போது சுவனத்தில் தியானம் செய்தவாறிருக்கும் என்ற எண்ணத்தோடு நான் ஆகாயத்தைப் பார்த்தவாறு மெதுவாக மதில் மீது மல்லாந்து படுத்தேன். அதுவும் எனக்கு இலகுவான அந்த இருப்பு. எனது சரீரம் இருபுறமாகவும் சமநிலையோடு மிதந்துகொண்டிருக்கும் ஒரு நேரம் அது. உள்ளத்தாலும், உடலாலும் சரி பாதியாக நான் தடுக்கப்பற்றவற்றோடு சம்பந்தப்படும் நேரம் அது. என்னதான் மனதை அலைபாய விடாமல் நடுநிலையாகவே வைத்திருக்க என்னால் முடியும் என்பது நல்ல விடயமாக இருந்த போதிலும், அந்த இருப்பு சமநிலையற்றது. பட்சிகளின் கண்களுக்கு மிகவும் ஆபாசமாகத் தென்படக் கூடிய ஓர் இருப்பு அது.

நான் அவ்வாறிருக்கும் ஒவ்வொரு தடவையும் இரத்த வாடைக்கு வேட்டை மிருகங்கள் ஓடி வருவதைப் போல மறுகணமே எங்கிருந்து வருகின்றன என்பதே தெரியாமல் பறவைக் கூட்டமொன்றே  என்னருகே வரத் தொடங்கும். அவை பறவைகள்தான் என்று உறுதியாகச் சொல்லவும் முடியாது. வினோதமான பறக்கும் விலங்குகள் போன்றவை அவை. சிறகுகளைக் கொண்டிருக்கும் பூச்சிகள் போன்ற விந்தையான சிறிய விலங்குகளும் கூட எனதருகில் வந்து எனது உடலில் ஆடை கரைந்து அங்கங்கள் தென்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஏதேனும் தணியாப் பேராசையுடைய ஜீவிகளாக அவை இருக்கக் கூடும் என்று அப்போது  எனக்குத் தோன்றும். அவை எனது உடலை மொய்க்கத் தயாராகும்போது நான் ஏற்றுக்கொள்ளப்பட்டவை பக்கமாகக் கிடக்கும் எனது கையை எடுத்து அவற்றைத் துரத்தி விடுவதால் அவை அப்போது எனது அரை நிர்வாணத்தைப் பார்த்து ரசித்தவாறு தாமாகவே சுகிப்பதை மாத்திரம்தான் செய்து கொண்டிருக்கும். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. என்னைப் பார்த்து யார் உணர்வெழுச்சி கொண்டாலும் எனக்குப் பரவாயில்லை. நான் உணர்வேறாமல் இருப்பதுதானே எனக்கு முக்கியம்?!

அவ்வாறான நேரங்களில் எனது உள்ளங்கால்களை ஊதா நிறத்தில் பஞ்சுப் பொதி போன்ற யாரோ ஒருவர்தான் உரித்தாக்கிக் கொண்டிருப்பார். அவரது கிச்சுக்கிச்சு மூட்டலும், ஸ்பரிசமும் எனக்கு மிகவும் இன்பம் தருவதாக இருக்கும். ஆகவே அவரைக் காலால் உதைத்து புறந்தள்ளும் எண்ணம் எனக்கு வராது.

இதனிடையே எனக்கு மிகவும் பிடித்த ஒரு வெள்ளைக் காகம் வரும். அதன் கண்களிரண்டும் நீல நிறத்தில் இருக்கும். அது ஒரு காகம் என்று கூட சொல்ல முடியாது. ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளில் அவ்வாறு ஒரு காகம் இருக்கவே கூடாதே! இருப்பது பொருத்தமும் இல்லையே?! என்றாலும் அது ஒரு வினோதமான புருஷப் பட்சி. அது எனது வயிற்றின் மீது அமர்ந்து தத்தித் தத்தி எனது கண்களையும், மார்புகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வேளையில் அதன் நீலக் கண்கள் மோகத்தில் சிவப்பதைக் காண எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கும். என்றாலும் நான் அதன் சிறகுகளைத் தடவிக் கொடுப்பேன். அவை மிகவும் மென்மையானவை. பின்னர் அது தனது இறகுகளால் எனது தேகம் முழுதும் கவியெழுதும். அந்தக் கவிதைகளை நான் உணர்வேன். அதுவொரு கவிஞர் காகம்.

கூடலுக்கான அழைப்புகள், கவிதைகள், பாடல்கள், பிரலாபங்கள் போன்றவற்றை நான் இவ்வாறு இந்த மதிலின் மேலே எனக்குப் பிடித்த இருப்பில் இருக்கும்போது வேண்டிய மட்டும் கேட்டிருந்த போதிலும் எனது மனது யார் மீதும் முழுமையாகச் சாயவேயில்லை. என்றாலும் நான் அவை அனைத்தையும் ரசிக்கவில்லை என்று சொல்லவும் என்னால் முடியாது.

இப்படி நடுநிலையில் இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒருவருக்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்காமல் இன்னும் பலருக்கு பல்வேறு புறத்திலிருந்தும் முகம்கொடுப்பதில் கூட பல்வகைமை இருக்கிறது. அவ்வாறே இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு நான்தான் ஏற்கெனவே முகம் கொடுத்திருக்கிறேனே?!

எனது எரிச்சலூட்டும் கொள்கைகளின் காரணமாக சிலர் சொற்ப நேரத்திலேயே சுய விருப்பத்தோடு என்னை விட்டும் விலகிச் சென்று விடுவார்கள். நான் அடுத்தவர்களைச் சித்திரவதை செய்து அதன் மூலம் பாலியல் இன்பம் அனுபவிக்க விரும்புவள். என்றாலும் அந்த வேதனையின் சுவைதான் அதி உன்னதமானது என்று அதைக் குறித்து புத்தகங்களை எழுதிய ஒருவனை நான் காதலிப்பதாகச் சொன்னதுமே அவன் என்னை விட்டும் தப்பி ஓடி விட்டான். ஆகவே அந்தப் புத்தகங்களை மீண்டும் வாசிக்கையில் எனக்கு அழுகை வருகிறது.

ஒரே ஒரு நாள், ஒரே ஒரு வேளை மாத்திரம் தனது பக்கமாக முழுமையாக வந்தால் சுவனத்திலிருந்து ஒரு போதும் வாடாத பூவொன்றைக் கொண்டு வந்து தருவதாக அந்த வெள்ளைக் காகம் தனது கடைசிக் கவிதையில் எழுதிய நாளிலும் நான் ‘முடியாது!’ என்று மிகவும் கடுமையாகச் சொல்லி விட்டேன். அன்று சிவந்து போன அதன் விழிகளிலிருந்து நீல நிறத்தில் கண்ணீர்த் துளியொன்று விழுந்தது. சிற்றின்ப வேட்கை நிரம்பிய அந்த நீலக் கல்லை நான் ஒரு நினைவுச் சின்னமாக என்னுடனே எடுத்து வைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக இலகுவான இருப்பில் சாய்ந்திருக்கையில் எந்தக் காதலனைக் குறித்தும் எனது இதயம் முற்றிலுமாக உருகி விடாமலிருக்க இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அந்தச் சால்வையின் உரிமையாளரது சாந்தமான விழிகள் எனக்கு ஞாபகம் வருவது. மற்றையது எனது ஒரு கால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையின் பக்கம் தொங்கிக் கொண்டிருப்பது. இவ்வாறாக, கருத்தரிக்காமல் இருக்க பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதைப் போல ஒரு முறையை நானும் பின்பற்றுவதில் தவறேதுமில்லையே!

எனது இந்த அழகிய காவியத்தன்மை மிக்க தேகம் ஒரு பெரிய நூலகத்துக்கே பொருத்தமானது. என்றாலும் அடிக்கடி வாசிக்கப்படக் கூடிய புத்தகமொன்றாக ஆக என்னால் முடியாது. அங்கு எனக்கென்றே சிறப்பியல்பான ஓர் இடம் வேண்டும். அனைத்தும் தென்படக் கூடிய ஓர் அரங்கு வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்டவை இருக்கும் பக்கத்திலிருந்து சூரியன் மறையும்போது தோன்றும் வெளிச்சமும், தடுக்கப்பட்டவை இருக்கும் பக்கத்தில் நிலா உதித்து வருகையில் எழும் வெளிச்சமும் எனது மேனியில் விழும் அந்த மெய்மறந்த அனுபூதிக் கணத்தில் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்திருந்து பெருங்காதலோடு ஸ்பரிசிக்கும் அந்தப் பொழுதில்தான் நான் எனது உச்சத்தை எட்ட வேண்டும்.

இல்லாவிட்டால் இன்னுமொரு வழி இருக்கிறது. ஆனால் அது ஓர் இரகசியம். அதாவது ஒரு மின்மினிப் பூச்சி கூட இல்லாத பூரண பெளர்ணமி ஒளியில் நான் அந்த சாந்தமான விழிகளுடன் போரிட்டு ஜெயிக்க வேண்டும். அவர் மீது மோகத்துடன் நான் இயங்குகையில் அந்தக் கூடலால் அவர் தனது சாந்தத்திலிருந்து மீள வேண்டும். உண்மையில் இவ்வாறான முற்றுமுழுதான விலக்கப்பட்டதும், தடுக்கப்பட்டதுமான ஓர் எண்ணம் தடுக்கப்பட்டவற்றை மாத்திரமே செய்துகொண்டிருக்கும்   படுமோசமான ஒருவருக்குக் கூட தோன்றாது.

இந்தளவு மிருகங்கள், சர்ப்பங்கள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், யானைகள், குதிரைகள், எருதுகள் போன்ற விந்தையானவையெல்லாம் இருக்கும்போது நான் ஏன் பவித்திரமான ஒரு சால்வையைக் கறைப்படுத்தும் ஒரு கூடலைக் குறித்து கனவு காண்கிறேன்?! அவ்வாறெனில் உண்மையிலேயே நான் அடுத்தவர்களைச் சித்திரவதை செய்து அதன் மூலம் பாலியல் இன்பம் அனுபவிக்க விரும்புவள்தா னே?!

நான் என்ன பாவம் செய்தேனோ?! அந்த சாந்தமான விழிகள் எப்போதும் எனது சாந்தத்தைக் குலைக்கின்றன. அவரைப் பற்றி நினைக்கும்போதே நான் மிதக்கத் தொடங்கினேன். வண்ண வண்ண மேகங்கள் எனது முகத்தைத் தொட்டுச் சென்றன. அவ்வேளையில் யாரோ எனது கூந்தலைப் பிடித்திழுத்தார்கள். நான் ஒரு சிவப்பு நிற மேகத்தின் மீது விழுந்தேன். சிவப்பு நிறம்! எனக்குப் பிடித்த நிறமொன்றல்லவே?!

அந்தச் சிவப்பு மேகம் ஒரு மிருதுவான பட்டுத் துணிப் படுக்கை போல ஆகி என்னைத் தனது கர்ப்பப்பைக்குள் சொருகிக் கொண்டது. அதுவென்றால் அத்தனை வருட காலத்திலும் நான் அனுபவித்தேயிராத ஓர் அனுபவம் ஆக இருந்தது. உணர்ச்சி மிக்கதாக இருந்தது. கூந்தலைப் பிடித்திழுத்த கரங்கள் எனது கூந்தலின் கீழேயிருந்த தலையை மிருதுவாகவும், வலிமையாகவும் தடவிக் கொடுக்கத் தொடங்கின. யாரது? இப்படி எனது தலையைத் தடவிக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது என்பதை அறிந்து வைத்திருக்கும் இவர் யார்? அந்தச் சால்வை, வர்ணச் சால்வை அணிந்து நடமாடுகிறதோ?! அவரது தியானம் முடிந்து விட்டதோ?!

எல்லா நாட்களையும் போல நான் அன்றும் மனதால் அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டு நொடிப் பொழுதில் அதைக் கறைப்படுத்தி விட்டிருந்தேன். என்றாலும் மறுகணமே இந்தத் தீண்டல் ஸ்பரிசம் அவருடையதாக இருக்க முடியாது என்பது எனக்குப் புரிந்தது. யாராக இருந்தாலும் என்ன? தலையைத் தானே தடவி விடுகிறார்கள்?!

தொடர்ந்து அந்த விரல்கள் எனது தலையை விட்டுவிட்டு எனது தோள்களைப் பிடித்து கசக்கியவாறே கழுத்து வழியாகக் கீழே வந்து எனது கவுனின் விளிம்புகள் வழியாக உள்ளே நுழைந்து எனது மார்புகளை தனது இரு கரங்களாலும் பிடித்துக் கசக்கத் தொடங்கின. மின்னல் தாக்கியது போல உடனடியாக நான் அந்த மேகப் படுக்கையிலிருந்து எழுந்து விட்டிருந்தேன். எனது கவுன் இடை வரை கரைந்து போயிருந்தது. மார்புகளை பொத்தி எனது வெட்கத்தை மறைத்துக் கொண்டிருந்தன அந்நியக் கரங்கள் இரண்டு. அது ஏதோ என் மீதுள்ள அனுதாபத்தினாலோ, பாசத்தினாலோ அல்ல. மோகத்தில் நீந்தியவாறும், சாகசமாக இன்பம் அனுபவிக்க என்னைத் தூண்டும் விதமாகவும் என்பதை நான் உணர்ந்தேன்.

என்றாலும் யார் இவர்? நான் தலை திருப்பி அந்த முகத்தை இனங்காண இடமளிக்காது அந்த அந்நிய விலங்கு எனது தேகத்தின் பின்னாலிருந்து தனது கைகளின் மூர்க்கமான இயக்கத்தைக் கைவிடாமலேயே எனது கன்னத்தில் கன்னம் வைத்து அழுத்தியவாறே இரகசியமாக முணுமுணுக்கத் தொடங்கியது.

“உனது கூந்தல் சரியாக நடுவில் வகிடு பிரிக்கப்பட்டு இரு புறமாக நீர்வீழ்ச்சி போல தரை நோக்கி விழும் இடத்தில்தான் எனது காமம் தொடங்கியது. காரணம் நான் உன்னை முதன்முதலாக அந்தக் கோணத்தில்தான் கண்டேன். ஆகவே உனக்கு முன்பே உனது அலையடிக்கும் சுருண்ட கூந்தல்தான் எனக்கு முதலில் தென்பட்டது. இந்தக் கூந்தலை மாத்திரம் நான் எத்தனை நாட்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் கூந்தலில் நான் எத்தனை பூக்களைச் சூடியிருப்பேன். அவை எவற்றையும் நீ உணர்ந்திருக்க மாட்டாய். இல்லாவிட்டால் உணராதது போல காட்டிக் கொண்டாய். தனியாக இந்த எல்லைக் கோட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்தக் குறும்புக்காரச் சிறுமி யார் என்று எத்தனை நாட்கள் நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? நீ என்னை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட்டாயா? எல்லைக் கோட்டைத் தாண்டி என்னிடம் மாட்டிக் கொள்ளாதே என்று நான் உன்னை எச்சரித்தேன்தானே? அப்போது நீ வாயைக் கோணலாக்கி பழித்துக் காட்டி சிரித்தாய்தானே அழகியே? இப்போதென்றால் உன்னால் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது.”

கண்ணுக்குப் புலப்படாத அந்தக் கரங்களின் அழுத்தத்திலும், அந்த ராகம் மிக்க குரலின் மெருகிலும் நான் விடாமல் நசுங்கிக் கொண்டிருந்தேன். என்றாலும் அவை எனது இடையின் கீழே செல்லும் முன்பு என்னால் அவரைத் தடுத்து நிறுத்த முடியுமாக இருந்தது. நான் அவரை விடவும் புலனாற்றல் மிகுந்து பக்குவமடைந்திருந்த காரணத்தால்தான் அது சாத்தியமானது.

ஆமாம். நான் அவரை இனங்கண்டு கொண்டேன். என்றாலும் அவருக்கு இந்தளவு பலம் இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அவர் யாரென்று அறிந்து கொண்ட திகைப்பில் நான் வேகமாக அவரது முத்தத்திலிருந்து விலகிக் கொண்ட கணத்தில் அச் சிவப்பு மேகம் கிழிந்ததால் வேறோர் ஊதா நிற மேகத்தின் மீது நான் விழுந்தேன். அந்த மேகத்தின் உள்ளே நான் புதையுறவில்லை. அங்கு நான் ஒரு பூவிதழின் மேல் மிதப்பது போன்ற மென்மையான உணர்வைத்தான் உணர்ந்தேன்.

நான் நிம்மதியாக மூச்சிரைக்கத் தொடங்கினேன். ஏன் இன்று ஒருபோதும் இல்லாமல் இவ்வாறு உடனடியாக பாரதூரமான தாக்குதல்கள் என் மீது பிரயோகிக்கப்படுகின்றன? எனது பயிற்சி என்னை விட்டும் நீங்கி விட்டதா? எனது சமநிலை தவறி விட்டதா? இனியும் நான் இரண்டுக்கும் நடுவிலே நிலைத்திருக்க மாட்டேனா?

அவ்வேளையில்தான் இளம் மஞ்சள் நிறத்திலிருந்த பட்டாம்பூச்சிகளிரண்டு வந்து எனது கண்ணிமைகளை மூடின. இரண்டுமே ஒரே நேரத்தில் ஏதோ தமக்கிடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவது போலவும், என்னைப் பகிர்ந்துகொள்வது போலவும் செயலாற்றின. ஒன்று எனது கண்ணிமையில் இருந்து கன்னத்துக்குப் பறக்கையில், மற்றையதும் அதையே செய்தது. ஒத்திசைவாக பரவச நிலை இருபுறமும் சமச்சீராக பிரிந்து செல்வதானது என்னைக் குழப்பியதோடு என்னை உச்சத்தை எட்டச் செய்தது.

அந்தப் பட்டாம்பூச்சிகள் இரண்டும் எனது இரண்டு கன்னங்களிலிருந்து ஈருதடுகளுக்கும், ஈருதடுகளிலிருந்து காது மடல்களின் பின்புறமாகவும், தொடர்ந்து கழுத்தின் இருபுறங்களிலும் தொட்டுத் தொட்டுப்  போகும்போது இந்தக் காமசூத்திரத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேறொரு மேகத்தின் மீது குதிப்பதா இல்லாவிட்டால் ஒரு முனகலைக் கூட வெளிப்படுத்தாமல் பொறுத்துக் கொண்டிருப்பதா என்று நான் கண்களை இறுக மூடிக் கொண்டு யோசிக்கும்போதே மெல்லிய முனகல் எனது உதடுகளிடையேயிருந்து வெளிப்பட்டது. மறுகணமே அந்தப் பட்டாம்பூச்சிகள் இரண்டும் எனது முலைக் காம்புகளை மூடி என்னை உறிஞ்சிக் குடித்தவாறு விசாலமாகியும், வர்ணமேற்றப்பட்டும், தமது நான்கு செட்டைகளாலும் என்னை முழுவதுமாக அரவணைத்துக் கொண்டன. அவை இரண்டும் எனது சிந்தனாகாலத்தை மீண்டும் மீண்டும் துய்த்தவாறு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டே பித்துப் பிடித்தது போல நிறுத்தாமல் அவற்றுக்குள் என்னை இழுத்துக் கொண்டிருந்தன. அவை மூச்சிரைக்கும் வேகத்துக்கு இசைவாக எனது விரல் முனைகளிலும், கைகளிலும் படிந்திருந்த மேகப் பூக்களின் இதழ்கள் கரைந்தொழுகிக் கொண்டிருந்தன. எனது இடுப்பின் கீழே எஞ்சியிருந்த ஆடை காணாமல் போயிருந்தது. உணர்ச்சிக் குவியல் தேகம் முழுவதையும் ஆட்கொண்டிருந்தது. இதனிடையே அந்த வெள்ளைக் காகமும் ஒரு போதும் வாடாத பூவொன்றைத் தனது சொண்டில் காவியவாறு பறந்து வந்து எனது தொப்புளின் மீது பூவை வைத்தது.

எதிர்பாராத விதத்தில் ஏன் இவ்வளவும் நடந்து கொண்டிருக்கின்றன? நான் பட்டாம்பூச்சிகளை நம்பி மோசம் போய் விட்டேனே! அவற்றுக்கு எங்கிருந்துதான் இந்தளவு காமமோ?! அவை வண்டுகளுமல்ல, காகங்களுமல்ல. அவ்வாறுதானே நான் எண்ணியிருந்தேன்?!

பரதேசிகள்! புனித யாத்திரை செல்கையில் வழி தவறிய இரண்டு அப்பாவிகள் போலத் தோன்றி காமக் குற்றங்களை செய்திருக்கும் பரதேசிகள்! கடவுளே, இவை இரண்டுக்கும் எனது மூச்சு முட்டும் அளவுக்கு என்னை ஒரு செளந்தர்யத் தடாகத்தில் மூழ்கடித்து நான் கதறுவதைக் கேட்டு சுகம் அனுபவிப்பதுதான் தேவையாக இருந்திருக்கிறது. அது இன்று நிறைவேறியிருக்கிறது. இதனிடையே வெள்ளைக் காகமும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. இது இவற்றின் சதித் திட்டமோ?!

இதுவரை காலமும் நான் காதலிக்காத ஆனால் என்னையே காதலித்த எல்லாக் காதலர்களிடமும் இன்று நான் தோற்று விட்டிருந்தேன். இன்று எல்லைக் கோட்டில் சந்திக்க நேர்ந்த அனைத்து சின்னஞ் சிறு உயிரினங்கள் கூட என் தேகம் முழுவதும் மொய்த்திருந்தன. அவை எனது பரவசத்தைச் சுவைத்தன. இனியும் என்னால் அதை ஒளித்து வைக்க முடியாது. நான் வர்ண மேகங்களிடையே இருந்தேன். இப்போது எவருடையதும் அல்லது என்னுடையதேயான காமத்தை மறுதலிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது எனக்கு.

ஒரு கணத்தில் எனது தர்க்க அறிவு அப்படியே முழுமையாகக் காணாமல் போய் முரண்பாடான இடமொன்றின் முழுமையான விடுதலையில் கரைந்து போயிருந்தேன் நான். கடும் ஊதா நிற மேகத்தின் மீது அந்தப் பரதேசிகள் பறந்து வந்தது எனது எண்ண அலைகள் தந்த உத்வேகத்தால்தான் என்பதை கண்களை மூடியிருந்தபோது நான் உணர்ந்தேன்.

என்னுள்ளே காலத்தைக் குறித்த உணர்வு கூட காணாமல் போயிருந்தது. என்றாலும் ஏதோ ஒரு கணத்தில் அந்த இடையறாத பெருங்களிப்பின் மத்தியிலும் சடுதியாக எனக்கு அந்த சாந்தம் மிகுந்த கண்களிரண்டும் ஞாபகம் வந்தன. அவர் என்ன நினைத்திருப்பார்?! நான் அவருடையவள் என்று சுயமாகவே ஒரு பதவியை எனக்குள் உருவாக்கியிருந்தேன். அவரால்தானே இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் போகாமலிருந்தேன்?! என்றாலும், அவர் எனது கஷ்டத்தில் உதவி செய்வதை மாத்திரம்தானே செய்தார்?! எனது மனதின் ஆழத்தில் உதித்த உன்மத்த காதலுக்கு நான் இடமளிக்கவே இல்லையே! இன்று அதற்கு என்ன ஆனது?! நான் அவருக்கு துரோகமிழைத்து விட்டேன், அல்லவா?!

நான் தியானம் செய்யவில்லை. நான் ஏற்றுக் கொள்ளப்பட்டவைக்கும், விலக்கப்பட்டவைக்கும் இடையே சமநிலையில் இருக்கவில்லை. எனக்கு என்ன நடந்திருக்கிறது?!

அச்சமும், நாணமும் மீண்டும் என்னுள் பிறந்து கொண்டிருந்தன. அந்த இடையறாத பெருங்களிப்பின் ஏக்கத்தை நிரூபித்தவாறு எனது தர்க்கிக்கும் ஆற்றல் மிகவும் பாடுபட்டுத் தலையுயர்த்தியது. அந்த ஏக்கமும், சோகமும் ஆசுவாசித்திருக்கும் குருதியோடு கலந்து கசப்பைத் தோற்றுவித்து எனது உணர்ச்சி வெள்ளங்கள் நின்று போயிருக்கக் கூடும். என் மீது தேன் உறிஞ்சிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பதற்றமடைந்து என்னை விட்டு விலகிச் சென்றன. 

இவ்வாறான ஒரு வலிய உச்சத்துக்குப் பிறகும் சோகக் கண்ணீர்த்துளிகளை உகுக்க எனது விழிகளால் முடியுமா? ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கத்துவதே எனது தேவையாக இருந்த போதிலும் எனது வாயிலிருந்து எந்த ஓசையும் வெளிவரவில்லை. என்னிடம்தான் காப்பாற்றுவதற்கு என்று எதுவுமே எஞ்சவில்லையே! இருதயத்தை தவிர ஏனைய அனைத்தையும்தான் விலக்கப்பட்ட பக்கத்திலிருந்தவை உறிஞ்சிக் குடித்தாயிற்றே! இனிமேல் ஒருபோதும் அந்த சாந்தமான விழிகள் என்னை ஏறெடுத்தும் பார்க்காது.

“காப்பாற்ற ஒன்று இருக்கிறது. உனது இருதயம் இன்னும் மீதமிருக்கிறதே! ஆகவே உனது மனசாட்சியும் இன்னும் மீதமிருக்கிறது. பல வருட பயிற்சியும் மீதமிருக்கிறது. ஏன் இந்தச் சின்னப் பெண் பதற்றமடைந்திருக்கிறாள்?”

ஊதா நிற மேகத்தின் மீதிருந்து சாந்தமான விழிகள் என்னை நோக்கி நடந்து வந்தன. அவரது சால்வையால் என்னைப் போர்த்தியவாறே அவரது அமைதியான குரலை எழுப்பினார்.

கடவுளே! இவ்வளவு நேரமாக அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ?! இல்லாவிட்டால் நான் மனதினுள் ஓலமிட்டது அவருக்குக் கேட்டிருக்குமோ?!

எனது பாவ காரியங்கள், வெட்கங்கெட்ட சுபாவம் ஆகியவை அவரது சால்வைக்குள்ளிருந்தும் தெளிவாகத் தென்பட்டன. என்னால் எதுவும் பேச முடியாமலிருந்தது. அவரால் எனது மனதை பார்க்க முடிந்தது. நான் பேசினாலும், பேசாவிட்டாலும் அவர் எனது மனசாட்சியை ஊடுருவிக் கொண்டிருந்தார். எனது உடலை ஊடுருவதில் உண்மையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றாலும் எவரும் எனது மனதை ஊடுருவதை என்னால் தாங்க முடியாமலிருந்தது. எவரும் எனது மனதிலிருக்கும் காயங்கள், தழும்புகளைக் காண்பதுதான் உலகத்திலிருக்கும் ஆகவும் பெரிய அசெளகரியமான விடயம்.

“சிந்தனாகாலம் பலவற்றை உனது மனதுக்குள் நீ பல கோடி நொடிப்பொழுதுகளாக விஸ்தரித்திருக்கிறாய். நீ நினைத்திருந்ததிலும் பார்க்க குறைவான நேரமே அதற்கு எடுத்தது. அது ஒரு மிகச் சிறிய விடயம். ஒன்றை விதைத்து அறுவடை செய்வதில் நீ மிகவும் திறமையானவள். சில சமயங்களில் முளைக்காதவற்றைக் கூட நீ விதைப்பாய். என்றாலும் இன்னும் உனக்குள் தூய்மையான தடங்கள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது தெளிவானது. ஆகவேதான் உன்மத்தத்தின் முடிவிலாவது சுய நினைவுக்கு மீள்கிறாய். ஆனந்தக் கழிப்புக்குள் எதிர்பார்ப்புகளை இழந்து விடுகிறாய். இது இரண்டாவது தடவை. உனக்கு இன்னும் ஒரு வாய்ப்பே இருக்கிறது.”

நான் மீண்டும் மதிலின் மேல் எனக்குப் பிடித்த இருப்பில் வைக்கப்பட்டிருந்தேன்.

‘உண்மையிலேயே நிகழ்ந்தவை அனைத்தும் சின்ன விடயமா என்ன?!’

அதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை. அவ்வேளையில் மலர்த் தட்டுகள் பலவும் நிறைய நிறைய மின்மினிப் பூச்சிகள் எனது கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தன.

***

பூச்சி – 36 – Charu Nivedita (charuonline.com)

பூச்சி – 37 – Charu Nivedita (charuonline.com)