அம்மாவின் பொய்கள்

அது ஒரு செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்றால் என் வீட்டு மாடியில் ஆன்மிக வகுப்பு நடக்கும். சுமார் முப்பது பேர். இந்த ஆன்மிக வகுப்புக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு விஷயம், நான் வளர்க்கும் ஸோரோ. க்ரேட் டேன் வகை நாய் என்பதால் மூன்று அடி உயரம், ஐந்தடி நீளம். முன்னங்காலைத் தூக்கி நின்றால் ஒன்பது அடி. இப்படி ஒரு பிராணி நடமாடும் வீட்டுக்கு வர யாருக்குத் துணிவு வரும்? ஆனாலும் ஆன்மிக வகுப்புக்கு வரும் யாரும் இதுவரை ஸோரோவைக் கண்டதில்லை. செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணியிலிருந்து பத்து மணி வரை ஸோரோவை, மற்றொரு லாப்ரடார் நாயான பப்புவுடன் சேர்த்து என்னுடைய அறையிலேயே அடைத்து வைத்துக் கொள்ள வேண்டியது அடியேனின் பொறுப்பு. ஆனால் அந்த செவ்வாய்க்கிழமை மாலை நான் வெளியே செல்ல வேண்டியிருந்தது. அதனால் பப்புவையும் ஸோரோவையும் அறையில் போட்டு, ஏசியையும் போட்டு விட்டால் அமைதியாக இருக்கும் என்று ஒரு மாற்று ஏற்பாடு சொன்னேன். ”அப்படி என்ன முக்கியமான வேலை?” என்றாள் என் மனைவி அவந்திகா. ”அசோகமித்திரன் பற்றி அம்ஷன் குமார் எடுத்துள்ள ஆவணப் படம் திரையிடுகிறார்கள். போயே ஆக வேண்டும்.” “அவ்வளவு முக்கியமா அசோகமித்திரன்?” “என் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே அசோகமித்திரன் தான்.” அதற்கு மேல் அவந்திகா பேசவில்லை.

இந்த சம்பவத்தை நான் இங்கே எழுதக் காரணம், அசோகமித்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதால் மட்டும் அல்ல. அவர் அளவுக்கு இலக்கியத்தில் உச்சங்களைத் தொட்டவர்கள் உலகிலேயே அதிகம் இல்லை என்பதால்தான். ஆனால் அப்பேர்ப்பட்ட அசோகமித்திரனை நமக்கு எந்த அளவுக்குத் தெரியும்? எந்த அளவுக்கு நாம் அவரை வாசித்திருக்கிறோம்? 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மேதை அவர். 1973 -இல் அவர் அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு ஏழு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து கலாச்சாரப் பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம். அதற்கான வசதிகளை அயோவா பல்கலைக்கழகம் செய்து கொடுக்கிறது.

அந்த ஏழு மாத அனுபவங்களை வைத்து அசோகமித்திரன் ஒற்றன் என்ற ஒரு நாவலை எழுதியிருக்கிறார். மற்ற நாவல்களுக்கும் ஒற்றனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இதில் வரும் பாத்திரங்கள் கற்பனை அல்ல; நிஜமானவர்கள். அதிலும் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய தேசத்தில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள். உதாரணமாக, எத்தியோப்பாவிலிருந்து வந்த அபே குபேக்னா அந்த நாட்டு மன்னரின் நண்பர். இப்படிப்பட்ட சர்வதேச எழுத்தாளர் கூட்டத்தில் அசோகமித்திரன் மட்டுமே அவர் எழுதும் மொழியிலேயே அதிகமாக யாருக்கும் அறிமுகம் இல்லாதவர்.

ஒவ்வொரு அத்தியாயமே ஒரு சிறுகதையைப் போல் அமைந்துள்ள இந்த நாவலில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சம்பவம் வருகிறது. அயோவா பல்கலைக்கழகத்தில் கூடிய எழுத்தாளர்களில் ஒருவர் விக்டோரியா ஹார்ட்மன் என்ற நாடகாசிரியர். அவர் ஒரு நாடகம் போடுகிறார். கவிதை நாடகம். அதுவும் எப்படியென்றால், அங்கே வந்துள்ள எழுத்தாளர்களின் கவிதைகளைக் கொண்டே இயற்றப்பட்ட நாடகம். அதில் ஒரு காட்சி: நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஐந்தாறு வீடு தள்ளி ஜன்னலில் தொற்றிக் கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் ”இப்படி பெண்களையே சுற்றிக் கொண்டிருந்தால் உன் காது அறுந்து விழுந்து விடும்” என்கிறாள். இதைக் கேட்டதும் அசோகமித்திரனுக்கு அதிர்ச்சி. இதை அவர் தமிழில் படித்திருக்கிறாரே? அந்தப் பெண் மேலும், “இப்படித் தப்புத் தண்டா செய்து கொண்டே இருந்தால் கடவுள் கண்ணைக் குத்திடுவான்” என்கிறாள். அசோகமித்திரனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. அடுத்த வரி அதை விட ஆச்சரியம். “ஓயாமல் தின்னக் கேட்டுக் கொண்டே இருந்தால் வயிற்றுக்கு ஆகாது.” பிறகு தனக்குள் கூறிக் கொள்வது போல் சொல்கிறாள்: “இங்கே வீட்டில் தின்ன என்ன இருக்கிறது?”

அசோகமித்திரன் நிலைகொள்ளாமல் தவிக்கிறார். அப்போது அடுத்த வீட்டுப் பெண்மணி வருகிறாள். அவளிடம் இவள், “பெற்ற பிள்ளையா இவன்? முறத் தவிட்டுக்கு வாங்கப்பட்டவன் அல்லவா?” என்கிறாள்.

அப்போது அந்த இளைஞன் பேச ஆரம்பிக்கிறான்.

பெண்ணுடன் சினேகம்
கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய்

அத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக்
கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா? எனக்கினி பொய்கள் தேவை இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத் தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டால் வேறெங்கு பெறுவான் பொய்கள்?

கவிதையை அவன் ஆங்கிலத்தில் சொல்லி முடித்த போது பார்வையாளர்கள் அனைவரும் நெகிழ்ந்து விடுகின்றனர். நாடகத்தை இயக்கிய விக்டோரியா ஹார்ட்மனைத் தேடுகிறார் அசோகமித்திரன். ஆனால் விக்டோரியா அங்கே இல்லை. சில தினங்கள் சென்று ஒருநாள் அசோகமித்திரன் ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக அமர்ந்திருக்கும் போது அங்கே வருகிறாள் விக்டோரியா. அவருடைய நாடகம் நன்றாக இருந்தது என்கிறார். ”நீயும் வந்திருந்தால் எல்லோரும் பாராட்டியிருப்போமே?” நிறைய ஒத்திகை பார்த்தும் நாடகம் எப்படி வருமோ என்று பயமாக இருந்ததால் வரவில்லை என்று சொல்கிறாள் விக்டோரியா. அது சரி, ஞானக்கூத்தனின் அந்தக் கவிதை அமெரிக்காவில் வசிக்கும் விக்டோரியா ஹார்ட்மன் என்ற நாடகாசிரியைக்கு எப்படிக் கிடைத்தது? அவளுக்கோ ஞானக்கூத்தன் என்ற பெயரை உச்சரிக்கவே முடியவில்லை. அவளுக்கு அந்தக் கவிதை எப்படிக் கிடைத்தது என்றால், முன்பு ஒருநாள் அசோகமித்திரனிடம் ஒரு சக அயோவாவாசி அவருக்குப் பிடித்த ஒரு தமிழ்க் கவிதையை மொழிபெயர்த்துத் தரச் சொல்லி வாங்கிப் போயிருக்கிறார். அந்தக் கவிதையைத்தான் நாடகமாக்கியிருக்கிறார் விக்டோரியா.

இருவரும் பிரியும் தருணத்தில் “ஒரு நிமிஷம் விக்டோரியா” என்று சொல்லும் அசோகமித்திரன், “அந்தக் கவிதை ஒரு இளைஞனின் மன ஏக்கம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன். நீ எப்படி அதை இருவர் நிகழ்ச்சியாக மாற்றினாய்?” என்று கேட்கிறார்.

அதற்கு விக்டோரியா சொல்கிறாள்: “அதைப் படித்த போது எனக்கு என் அம்மா நினைவு வந்தது.”

“சரி.”

“எனக்குப் பொய்கள் சொல்ல என் அம்மா ஒருத்திதான்.”

”அப்படியா?”

“என் அப்பா யாரென்று எனக்குத் தெரியாது.”

எப்பேர்ப்பட்ட சேதிகளை இந்த வரிகள் சொல்கின்றன என்று நினைத்து மலைத்துப் போனேன். மனிதனாகட்டும், மிருகமாகட்டும், எந்த ஜீவனுக்கும் உயிரையும் உணர்வையும் ஊட்டும் அம்மா என்ற அற்புதத்தை மகத்தான கலைப் படைப்பாக உருவாக்கியிருக்கிறார் ஒரு தமிழ்க் கவி. அதை வேறு ஏதோ ஒரு கண்டத்தில் வேறு ஏதோ ஒரு மொழியில் நாடகமாக நிகழ்த்துகிறாள் ஒரு பெண். அது மட்டுமல்ல; அந்தக் கவிதை அவளுக்கு அவளுடைய அம்மாவை நினைவுபடுத்துகிறது. அவளுக்குத் தந்தை இல்லை என்கிறாள். அப்படி தந்தையே இருந்தாலும் மனித/மிருக உயிர்களுக்கு தாய் என்ற கிரியா சக்தி அளிக்கும் உயிர்த் தாதுவை வேறு யாரும் கொடுத்து விட முடியுமா?

பாரதிக்குப் பின் அவன் கொடுத்த கவிதாக்கினியை ஏந்தித் தமிழ்க் கவிதைக்கு ஒளியூட்டிய நவீன கவிஞர்களில் ஞானக்கூத்தன் மிக முக்கியமானவர்; தலையாய இடத்தைப் பிடித்தவர் என்றே சொல்லலாம். அவருடைய கவிதைகள் கால, தேச வர்த்தமானங்களைக் கடந்தவை என்பதற்கு அம்மாவின் பொய்கள் என்ற இந்த ஒரு கவிதையே சாட்சி பகரும்.

நூல்வெளி

2015

***

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

***