சேவையும் ஆலோசனையும்…(சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!)

அவந்திகாவை அடிப்பீர்களா சாரு என்று கேட்டார் இல்லையா என் மஹாத்மா நண்பர்? அந்தக் கேள்விக்கு இணையான கேள்வி எது என்று நான் சென்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளாக நான் அவந்திகாவை புதுமைப்பித்தன் எழுதிய செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை எப்படித் தன் மனைவி செல்லம்மாளை கவனித்துக்கொள்கிறாரோ அப்படித்தான் நானும் அவந்திகாவை முப்பது ஆண்டுகளாக கவனித்து அவளுக்கு சேவை செய்து வருகிறேன்.

சிங்கப்பூருக்கு மூன்று மாத வீசாவில் சென்றிருந்தேன். இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். அவந்திகாவுக்கு டைஃபாய்ட் என்று ஃபோன் வந்தது. போய் பதினைந்து நாட்களே இருக்கும். திரும்பி வந்து விட்டேன்.

பூனை வளர்க்க வேண்டும் என்றாள். ஒரு பூனை இருந்தது. கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என்றேன். இயற்கையின் வழியில் குறுக்கிடக் கூடாது என்றாள். ஐந்து பூனை ஆயிற்று. மீண்டும் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என்றேன். மீண்டும் முன்பு சொன்னதையே சொன்னாள். ஐந்து பத்து ஆயிற்று. பிறகு வேறு வழியில்லாமல் பத்துக்கும் கர்ப்பத்தடை. ஒரு பூனைக்கு பத்தாயிரம் என்று ஒரு லட்சம் ரூபாய் ஆயிற்று. பத்து பூனைகளுக்கும் மாதம் அறுபதாயிரம் ரூபாய் பூனை உணவுக்கு வாசகர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னால், ஒரு நாய் இருந்தது. அது இறந்ததும் என் மகனும் அவந்திகாவும் சேர்ந்து இரண்டு நாய்கள் வாங்கினார்கள். ஒன்று, க்ரேட் டேன். ஒன்று, லாப்ரடார். இருபது ஆண்டுகளுக்கு முன் இரண்டு நாய்களுக்கும் மாதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஆயிற்று. மரீன் எஞ்ஜினியர் வேலை பார்க்கும் என் மகன் எனக்கு ஒரு பைசா தரவில்லை. இரண்டு நாய்களுக்காகவும் என் வாசகர்களிடம் பிச்சை எடுத்து அவைகளுக்கு உணவிட்டேன். என் நண்பர் ஒருவர் உலகமெல்லாம் சுற்றி வாருங்கள் என்று மாதம் பதினைந்தாயிரம் தந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு. அந்தப் பதினைந்தாயிரமும் நாய்களுக்கே செலவானது.

நாய்களுக்குப் பிறகாவது நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். பூனைகளுக்கு மாதம் அறுபதாயிரம். இவைகளுக்கு பெரிய வீடு வேண்டும் என்று மாதம் எழுபத்து மூன்றாயிரம் வாடகை கொடுத்து பெரிய வீடு. எல்லாமே நான் எடுக்கும் பிச்சைப் பணம்தான். இப்போதும் என் மகன் எனக்கு ஒரு பைசா தருவதில்லை.

இந்த மாதம் கொச்சியில் நடந்த இலக்கிய விழாவுக்கு எனக்கு அழைப்பு இருந்தும் செல்லவில்லை. அவந்திகா துபய் சென்றிருந்தாள். நான் பூனைகளுக்குக் காவல் இருந்தேன்.

இப்படி என் வாழ்க்கையையே அவந்திகாவுக்காக தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து என் நெருங்கிய நண்பர் கேட்கிறார், அவந்திகாவை நீங்கள் அடிப்பீர்களா என்று.

எனக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இரண்டாவது, சீனி என் நெருங்கிய நண்பர். அவரிடம் ஒரு ஆலோசனை சொல்லலாம் என்று மூன்று ஆண்டுகளாகத் தயங்கிக்கொண்டு இருக்கிறேன். இன்னமும் சொல்லவில்லை. என்னதான் நண்பராக இருந்தாலும் அவர்களின் ஸ்பேஸுக்குள் சென்று ஆலோசனை சொல்வது அவர்களின் வாழ்வில் அத்துமீறுவதாகத் தோன்றும். காதலி என்றால் உரிமை எடுத்துக்கொள்ளலாம். நண்பரிடம் முடியாது. அதனால் மூன்று ஆண்டுகளாகத் தயங்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என் நண்பர்களோ நான் குடிப்பதற்கெல்லாம் அப்படியே சொடக்கு போடுவது போல் ஆலோசனைப் ———- சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.