தங்க பஸ்பம்

ஒரு வார காலம் ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தேன். அதன் விவரங்கள் யாவும் என்னுடைய உல்லாசம் நாவலில் விரிவாக இடம் பெறும். Ullāsa : An Erotic Novel என்ற தலைப்பில் அதை நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்திய ஆங்கில இலக்கிய உலகம் நூறு ஆண்டுகள் பழமையில் வாழ்வதால் அதை ஆங்கிலத்தில் வெளியிடுவார்களா என்று தெரியாது. பிரிட்டனிலோ அமெரிக்காவிலோ வெளியிடுவதற்கான தொடர்புகள் எனக்கு இல்லை. ஆனால் பெண்கள் எழுதினால் உடனடியாக இந்தியாவிலேயே வெளியாகும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. காரணத்தை விளக்க வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும்.

காலையில் ஐந்து மணிக்கே எழுந்து கொள்கிறேன். மாலை நான்கு மணி வரை தியாகராஜா நாவலையும் அதற்கு மேல் உல்லாசம் நாவலையும் எழுதுகிறேன். இரண்டும் இரண்டு துருவங்கள் என்று தோன்றும். ஆனால் பக்தியும் காமமும் ஒரே மாதிரியான உணர்வெழுச்சிகளைக் கொண்டவை என்பது என் பார்வை. தியாகராஜா பக்தியில் திளைக்கிறார். உல்லாசம் நாயகன் தன் காமக்கிழத்தியை ஒரு தேவதையாகவே நினைத்து வழிபட்டுத் துய்க்கிறான். ஒன்று, ஆன்ம வழிபாடு. இன்னொன்று, உடலை எரித்து அதன்வழி ஆன்மாவில் ஒன்றுவதற்கான எத்தனம்.

நாவல் எழுதுவதற்கு முதல் தேவை உடல் வலு. அதிலும் இப்போது இரண்டு நாவல்கள். தங்க பஸ்பம் சாப்பிட்டு அந்த வலுவைக் கூட்டிக் கொள்ளலாமா என்று தோன்றியது. ஆனால் இந்த வயதில் சாப்பிடலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவர் பாஸ்கரனை அழைத்து இது பற்றிக் கேட்டேன். தாராளமாக சாப்பிடலாம், தயாரித்துத் தருகிறேன் என்றார். தங்க பஸ்பத்தைப் போல் வெள்ளி பஸ்பம், முத்து பஸ்பம் போன்றவையும் இருக்கின்றன.

சென்ற மாதத்தில் ஒருநாள் என் நண்பர் ஒருவர் என்னிடம் தன் தந்தை பற்றிக் கூறினார். எண்பது வயதான அந்த முதியவரை அல்ஷீமர் நோய் முழுமையாகப் பீடித்திருந்தது. தன் மகனைக் கூட அடையாளம் தெரியவில்லை. என் பக்கத்து வீடுதான் என்பதால் அவரை நானும் பார்த்தேன். உடல் ரீதியாக மிகவும் ஆரோக்கியமாக இருந்த அவர் மன அளவில் ஒரு பிறந்த குழந்தையைப் போல் இருந்தார். எதுவுமே நினைவில் இல்லை. சித்த மருத்துவர் பாஸ்கரனைப் போய் சந்திக்கச் சொன்னேன். சந்தித்தார். ஒரு மாதம் மருந்து சாப்பிட்டார். இப்போது என் பக்கத்து வீட்டு நண்பர் தன் தந்தைக்குப் பெருமளவு குணமாகியிருப்பதாகவும், நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

நான் பாஸ்கரனைப் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுவதன் காரணம் இதுதான். இந்தியர்கள் – அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் – கடுமையான உடல் நோய்மையில் உழல்கிறார்கள் என்பதை மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறேன். இளைஞர்களுக்கு மன நோய்மை. அதற்கு எனக்குத் தெரிந்த மருந்து என் எழுத்துதான். உடல் நோய்மைக்கு பாஸ்கரன். அவரைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே என் விண்ணப்பம். பாஸ்கரனின் மற்றொரு சிறப்பு ஒன்று – இது பற்றிப் பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள் – பெரும்பாலும் அவர் கொடுக்கும் மருந்து ஓரிரு மாதங்களில் அல்லது ஒரே மாதத்தில் நோயை குணப்படுத்தி விடுகிறது. பாஸ்கரன் உடனடியாக அவர்களிடம் “இனிமேல் மருந்து தேவையில்லை” என்று சொல்லி விடுகிறார். ”இப்படி ஒரு மருத்துவரை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை” என்று பல நண்பர்கள் சொல்கிறார்கள்.

பாஸ்கரனின் நட்பு கிடைப்பதற்கு முன்னால் ஒரு முறை வயிற்று வலி என்று ஒரு பிரபலமான மருத்துவமனைக்குச் சென்றேன். இது இதயத்தோடு சம்பந்தப்பட்டது என்று சொல்லி, பல இதயப் பரிசோதனைகள் செய்து அறுபதாயிரம் ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு கடைசியில் வாய்வுக் கோளாறு என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தெரியாத்தனமாக இரவு நேரத்தில் உருளைக்கிழங்கு வறுவலைத் தின்று தொலைத்ததற்கு ஒரு லட்சம் தண்டம் அழுதேன். இப்படிப்பட்ட சமூகச் சூழலில்தான் பாஸ்கரன் போன்ற மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

தங்க பஸ்பம் என் ஒரு ஆளுக்காக செய்வதை விட இதில் ஆர்வமுள்ள நண்பர்களும் சேர்ந்தால் நலம் என்று நினைக்கிறேன். தங்கம் என் இளமைப்பருவத்தில் ஒரு பவுன் இருநூறு ரூபாய் இருந்தது. இப்போது எத்தனை என்று தெரியாது. ரெண்டாயிரம் ரூபாய் இருக்குமா? அதனால் தங்க பஸ்பத்தின் விலை கூடுதலாகத்தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாதவர்களும், உடலைப் பேணும் ஆர்வம் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சித்த மருத்துவர் பாஸ்கரனின் உதவியாளரின் தொலைபேசி எண்: 78260 57789