கவிஞர்களின் காரியங்களைப்
புரிந்துகொள்ள முடிந்ததே இல்லை
ஒரு இளம்கவி நண்பன்
தினமும்
காலையிலிருந்து நள்ளிரவு வரை
குடித்துக் கடித்தே
செத்தான்
இன்னொரு கவிக்கு
தூக்க மாத்திரை உதவியது
ஒருத்தன் கயிறில்
தொங்கினான்
சொல்லிக்கொண்டே போகலாம்
சலிப்புற வைக்கும் கதைகள்
ஒரு கவிஞன்தான் யாரும்
எதிர்பார்க்காததைச் செய்தான்
உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு
ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டு
யகூஸாக்களோடு சேர்ந்தான்
ஜப்பானியர்களுக்கு இந்தியர்களைப்
பிடிக்காது
அதிகம் கத்துகிறார்களென்று புகார்
சமையலின் மசாலா வாசனையும்
கொடுமை என்கிறார்கள்
ஆனால் மதுரை பிரியாணி
ஜப்பானியருக்கு உயிர்
மதுரைக்கு வந்து கற்றுக்கொண்டு
போகிறார்கள்
அதைப் பார்த்துத்தான் உந்துதல்
பெற்றானோ என்னவோ கவிஞன்
யகூஸாவில் சேர்ந்து விட்டான்
யகூஸா என்றால் சும்மாவா
கைகாலை எடுக்க வேண்டும்
சமயத்தில் தலையையும்
எப்படித்தான் சமாளிக்கிறானோ
தெரியவில்லை
ஆனால் மூட்டை மூட்டையாகக்
கவிதை எழுதிக் குவிக்கிறான்
மூட்டை என்றதும் தப்பாக
நினைக்காதீர் கவிதையெல்லாம்
சூப்பர்
இன்னொரு கவிஞன்
கல்யாணம் பண்ணிக்கொண்டு
கவிதையை நிறுத்திவிட்டான்
ஒன்றுமில்லை
நேற்று மோகினிக்குட்டி
நீ ஒரு பைத்தியம் என்றாள்
அப்போதுதான்
இத்தனை நாள்
குழப்பமும் தீர்ந்தது