என்றும் இல்லை இறுதிக் கோப்பை

மனையாள் சொன்னாள்:
”தவறாக நினைக்காதே
ஆயுள் முழுதும் அசைவம் தின்றாய்
இப்போது உன் உடல் அதை ஏற்கவில்லை”

சாகும் வரை சாப்பிடுவேன் என்றேன்.

மோகினிக்குட்டி சொன்னாள்:
”தவறாக நினைக்காதே,
காமத்தில் வாழ்ந்தாய்
மூழ்கினாய்
இப்போது உன் உடல் அதைத் தாங்கவில்லை,
கண்கூடாய்க் கண்டேன்
போதும்.”

“இந்தக் கதை கேள்:
முப்பத்தைந்தில் புகாவ்ஸ்கி
ரத்த வாந்தி எடுத்தான்,
ஆசனத்தில் குருதி கொட்டியது.
மருத்துவர் எச்சரித்தார்:
‘இன்னொரு கோப்பை மது அருந்தினால்,
அது உன் இறுதிக் கோப்பை.’
ஆனால், அவன்
தினம் மூன்று முதல் ஏழு போத்தல்
வைன் குடித்தபடி,
முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.
அதனால்
நான் சாகும் வரை காமம் தின்பேன்.”