அற்புதர்கள்

ஏ.ஆர். ரஹ்மானைத் தொடர்பு கொள்வது மிகவும் சிரமம் என்பார்கள். ஆனால் நான் தொடர்பு கொண்டால் அரை மணி நேரத்துக்குள்ளாக பதில் வந்து விடும். ஒரு முறை கூட தவறியதில்லை. சமீபத்தில் அவர் வாழ்வில் ஒரு அசந்தர்ப்பமான சம்பவம் நடந்த அன்று கூட வேறோர் வேலையாகத் தொடர்பு கொண்டபோது அரை மணி நேரத்தில் பதில் வந்தது.

இறையன்புவும் அப்படித்தான். பொதுவாக உடனே எடுத்து விடுவார். அவசர வேலையில் இருந்தால் வேலை முடிந்ததும் அழைக்கிறேன் என்பார். அநேகமாக ஒரு மணி நேரத்தில் அழைப்பு வந்து விடும். பணியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி.

நானும் அப்படித்தான். இது வெறுமனே தகவல் தொடர்பைப் பேணுவதில் சேர்த்தி இல்லை. நுண்ணுணர்வும் வினயமும் சம்பந்தப்பட்ட விஷயம்.

இந்த வினயம் என்ற சமாச்சாரம் இன்றைய தலைமுறையில் காணாமல் போய் விட்டது. ஆயிரத்தில் ஒருவரிடம்தான் காண முடிகிறது. எழுத்தில் நான் அக்னியாக இருந்தாலும் நேர்ப்பழக்கத்தில் வினயம் மிகுந்தவனாக இருக்கிறேன் என்றே பலரும் சொல்கிறார்கள். ஐம்பது பேர் ஒருவர் பின் ஒருவராக என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால் கூட எனக்கு எத்தனை வேலை இருந்தாலும் அவர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்து விட்டுத்தான் நகர்வேன்.

இது எல்லாம் பின்வரும் கடிதத்தைப் படித்த போது ஞாபகம் வந்தது. இந்த வினயம் இன்று அழிந்து போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். முளைத்து மூணு இலை விடுவதற்குள்ளேயே எல்லாம் தலையை ஆகாயத்தை நோக்கி வைத்துக் கொள்கிறதுகள். கொஞ்ச நாளிலேயே தெரபிஸ்டிடம் போய் வரிசையில் நிற்கிறதுகள்.

தியாகராஜரின் பஞ்சரத்னா கீர்த்தனை என்று வேறு கீர்த்தனையைக் குறிப்பிட்டு விட்டேன். எப்பேர்ப்பட்ட பிழை? அதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டினார். அதை ப்ளாகில் எழுதியிருந்தேனா? அப்படி என் பிழையை சுட்டிக் காட்டியதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதுகிறார். வினயமாக இரு என்று இக்காலத்திய பொடிசுகளிடம் சொன்னால், என்ன, ஜால்ரா அடிக்கச் சொல்கிறீர்களா என்று திருப்பிக் கேட்கிறார்கள். கொடுமை. எந்த அளவுக்கு வினயமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வாழ்வில் இனிமை கூடும். காந்தி தன் ஒவ்வொரு கடிதத்திலும் தங்கள் உண்மையுள்ள வேலைக்காரன் என்றே எழுதிக் கையெழுத்திடுவார்.

இனி கடிதம்.

மதிப்பிற்குரிய அன்பார்ந்த சாரு அவர்களுக்கு,

அபிவாதயே, பார்கவ, ச்யவன, 

ஆப்ன்வான, ஒளருவ, ஜமதக்னய   பஞ்சார்ஷேய, ப்ரவரான்வித, ஸ்ரீவத்ஸ கோத்ராஹா, ஆபஸ்தம்ப ஸூத்ராஹா, யஜுஸ்சாஹ அத்யாயி, சுந்தரக்ருஷ்ண சர்மா நாமா அஸ்மேபோஹோ…

அடியேன்,

அடியேனையும், இந்த இழிபிறவியையும், பொருட்படுத்தாது, அடியேனுடைய மின்னஞ்சலைத்  தங்கள் வலைதலத்தில் அப்படியே பதிப்பித்த தங்களின் பெருந்தன்மையை எண்ணி, எண்ணி வியந்து போகிறேன்..

மிகப் பெரிய மனது தங்களுக்கு…

தவிர,  மேலும்,  தாங்கள், மேலதிகப் பிழையிருந்தால் அவற்றையும் தெரிவிக்கும்படி எழுதியது தங்கள் பெருந்தன்மையின் உச்சம்…

 தங்களைப் போன்ற மஹானுபாவர்களுக்கு, உலகின் தலை சிறந்த எழுத்தளருக்கு, ஒரு சிறிய பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு, இந்த இழிபிறவிக்கு எழேழு ஜென்மத்துக்கும் அந்தனக்கொலை (ப்ருஹ்மஹத்தி) செய்த பாபம் போகாது…

மிகவும் வருந்தி தங்கள் பாதங்களில் ஸாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்…

அடியேன்,

சுந்தரகிருஷ்ணன், மதுரை, 03—10—2025.