இலக்கியமும் ஜனரஞ்சக எழுத்தும்

சமீபத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். ”சாகித்ய அகாதமி விருதை ஏன் ராஜேஷ்குமாருக்குக் கொடுக்கக் கூடாது?” அதற்கு ராஜேஷ்குமார் பிரபாகர் இப்படிச் சொன்னதே எனக்கு அந்த விருது கிடைத்து விட்டது போல் இருக்கிறது என்று நன்றி கூறியிருக்கிறார்.

உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கேலிக்கூத்து நடக்கும். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் வித்தியாசமே தெரியாமல் இருப்பார்கள் மக்களும் ஜனரஞ்சக எழுத்து உற்பத்தியாளர்களும்.

வித்தியாசமே தெரியவில்லை. சாகித்ய அகாதமி விருது இலக்கியத்துக்கு அளிக்கப்படுவது, வணிக/ஜனரஞ்சக எழுத்துக்கு அல்ல. ஆனால் இங்கேதான் இரண்டுக்கும் வித்தியாசமே தெரியாதே? இங்கே சாருவும் எழுத்தாளன், பட்டுக்கோட்டை பிரபாகரும் எழுத்தாளர்.

ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கா நோபல் விருது அளிக்கப்படுகிறது?

எந்த மாதிரியான ஒரு மொழியில், எந்த மாதிரியான ஒரு கலாச்சாரத்தில் நான் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கவே வெட்கமாக இருக்கிறது.

இந்த நிலைமை கல்கியிடமிருந்தே தொடங்கி விட்டது. புதுமைப்பித்தனைக் குழி தோண்டிப் புதைத்தார்கள். பிறகு ஆரம்பித்தது குழி தோண்டும் படலம். இப்போது எல்லா இலக்கியவாதியையும் குழியில் தள்ளு என்கிறார் ஜனரஞ்சக எழுத்தாளர்.

(இனிமேல் நான் யாருக்கும் பயம் கொள்ளாமல் எழுதலாம். அதனால்தான் இந்த விஷயத்தைப் பெயர் போட்டே எழுதியிருக்கிறேன். இல்லாவிட்டால் கிசுகிசு பாணியில் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்று எழுதியிருக்க வேண்டும். அதற்கே ’கட்டுரையைத் தூக்குங்கள், சம்பந்தப்பட்ட நண்பர் கோபித்துக் கொள்வார்’ என்று தாக்கீது வரும்! என் எழுத்துக்கு இப்போது விடுதலை கிடைத்து விட்டது!)