நெருப்புத் தேர்


பித்தனைப் போல் நானும்

நெருப்புத் தேரில்தான் பயணிக்கிறேன்

ஐம்பது ஆண்டுகளாக

என் விரல்களிலிருந்து சுடர்விட்ட 

எழுத்துக்களைப் பற்றியபடி

அதன் சக்கரங்கள் சுழல்கின்றன.

மதியத்துக்குள் ஒரு முக்கியக் கட்டுரை

அச்சுக்குப் போக வேண்டும்

அப்போது தந்தை இறந்த செய்தி வந்தது.

நான் போகவில்லை.

தம்பியிடம் சடங்குகளை ஒப்படைத்துவிட்டு

நான் தொடர்ந்து எழுதினேன்.

வார்த்தைகள் என்னை எரித்தன

நான் அவற்றை எரித்தேன்.

கட்டுரையை அனுப்பிய பின்

எடிட்டர் கேட்டார்,

“நீ மனிதனா?”

நான் சொன்னேன்:

“இல்லை.

நானொரு  நெருப்புத் தேர்.”

என் தந்தையின் சடலம்

பூமியில் கிடக்கும் போது

நான் சொர்க்கத்தை நோக்கி

எரிந்தபடி சென்று கொண்டிருந்தேன்.

எலிசா கேட்டான்:

“உங்கள் ஆவியில் இரண்டு மடங்கு எனக்கு வேண்டும்.”

ஆம்.

ஒருவன் தந்தையை இழக்கலாம்

புதல்வனை இழக்கலாம்

ஆனால் நெருப்புத் தேர்

நின்றுவிடக் கூடாது.

அது எரிய வேண்டும்.

அது பறக்க வேண்டும்.

சுழல்காற்றில்

என் எலும்புகளையும்

என் குருதியையும்

என் அன்பையும்

எல்லாவற்றையும் எரித்தபடி

மேலே மேலே

செல்ல வேண்டும்.