நெருப்புத் தேர் – கடலூர் சீனுவின் கடிதம்

Dear charu

பெரும்பாலும் காலைகளை ஏதேனும் கவிதையோடுதான் துவங்குவேன். இன்றைய காலை உங்களின் நெருப்புத் தேர் கவிதையோடு துவங்கியது.

கடலூர் பாடலீஸ்வரர் கோயில் சைவ பண்பாட்டில் முக்கியமானதொரு கோயில். நாவுக்கரசர் உழவாரப்பணி செய்த களம். அந்தக் கோயிலில் நூறு வருடம் முன்னர் பிரும்மாண்டமான தேர் ஒன்று இருந்ததாகவும், ஒரு தேரோட்ட விழாவின்போது சித்தன் ஒருவன் அதை எரித்து விட்டதாகவும், பக்தர்கள் அந்த சித்தனை தூக்கி அதே எரியும் தேர் தீயில் வீசி கொன்று விட்டதாகவும், அதன் பிறகு இங்கே தேர் கிடையாது, தேர் திருவிழாவும் கிடையாது என்று என் சிறு வயதில் அப்பா கதையாக சொன்னார்.

அன்று என் பால்ய மனதில் அது ஒரு துன்புறுத்தும் படிமமாக விழுந்தது. எரியும் பெரும் தேர், அதில் கருகி அடங்கும் ஒரு மனிதன். இது எப்படி சாத்தியம்? மனிதர்கள் இப்படி செய்வார்களா?

செய்வார்கள் என்று மிக மிக பின்னர் தெரிந்து கொண்டேன். நான் ஆண் நீ பெண் அது போதும் மனிதர்களுக்கு பெண்ணை தூக்கி நெருப்பில் ஏறிய, என் சாதி வேறு உன் சாதி வேறு, என் தேசம் வேறு உன் தேசம் வேறு, என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு, இப்படி எத்தனையோ காரணங்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தொக்கி நெருப்பில் வீச…

ஆனால் அந்த சித்தன்? அவன் நிச்சயம் சார்வாகனாகவே இருக்க வேண்டும் என்று பின்னர் யூகித்தேன். ஊரே கூடி ஒரு உண்மையை தேராக்கி வடம் பிடிக்க, அதை வேறொரு உண்மையின் நெருப்பால் எரித்த ஒற்றை மனிதன். ஞானி.

அவன் ஞானம் ஊர் கொண்ட மாயையை எரித்தது. அவன் ஞானத்துக்கு இறுதியில் அவனே ஆகுதி ஆனான்.

//நானொரு நெருப்புத் தேர்.

என் தந்தையின் சடலம்

பூமியில் கிடக்கும் போது

நான் சொர்க்கத்தை நோக்கி

எரிந்தபடி சென்று கொண்டிருந்தேன்//

இதே வரிகளை ஆபிரகாமிய மத பண்பாட்டில் வைத்தால், தண்டிக்கும் காக்கும் படைக்கும் தந்தை வடிவம் அங்கே உண்டு, அங்கே நரகம் ஊழி நெருப்பால் ஆனது. இந்த வரிகள் வேறொரு சாரமான ஒன்றின் வலிமையான விமர்சனமாக எழுகிறது.

சொர்க்கம் நோக்கி எரிந்தபடி செல்லும் தேர்.

என்ன ஒரு வலிமையான படிமம்.

இந்த கவிதையின் முதல் வரியின் பித்தனை சார்வாகன் என்றும் கொள்ளலாம்.
உங்களை போலவே ஒரு ஆசாமி. ஊரே கூடி ஒரு உண்மையை தேராக்கி வடம் பிடிக்க, அதை எரிக்க வந்த ஆசாமி. அதிலேயே கிடந்து எரியவும் சித்தமான ஆசாமி.

மிக முன்னர் நானும் சிந்தனை தூக்கி எறியும் நெருப்பில் வீசும் பக்தர்களில் ஒருவனாகவே இருந்தேன். இலக்கியமும் பயணமுமே என்னை மீட்டது. ஆம் இப்போது என்னால் அந்த பக்தர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது, சித்தனையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய நாளை உத்வேகம் கொள்ள வைக்கும் வலிமையான படிமம் சாரு.

இறுதியாக இதை சொல்லி விடுகிறேன். சில வருடங்கள் முன்னால், கடலூர் big shot கள், பக்தர்கள் கூடி கோயிலுக்கு புதிய தேர் செய்தார்கள். விழா வருடா வருடம் இனிதே நடக்கிறது. ஜக்கி வாசுதேவ் அவர்கள்தான் முதல் தேரோட்டத்தை வடம் பிடித்து துவங்கி வைத்தார்கள் 🙂

கடலூர் சீனு