சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஸீரோ டிகிரி பார்ட்னர் காயத்ரி “சாரு நிவேதிதாவுக்கும் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று எழுதியிருந்தார். அந்த வாக்கியமே ராஸ லீலா பதிப்பகம் தொடங்கக் காரணமாக அமைந்தது.
தமிழ்நாட்டில் எத்தனையோ பதிப்பகங்கள் உள்ளன. ஆனால் முளைத்த ரெண்டே நாளில் தமிழ்நாடு முழுவதும், சில தினங்களில் இந்திய அளவிலும் பிரபலம் ஆன பதிப்பகம் ஸீரோ டிகிரி பதிப்பகம். காரணம் யார் என்பதை ஊரே அறியும். அந்தப் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகத்துக்கே போட்டியாக வளர்வதற்கு யார் காரணமாக இருந்தார் என்பதையும் ஊரே அறியும்.
இப்போது வளர்ந்து உச்சத்தில் வந்து நின்ற பிறகு சாரு நிவேதிதாவுக்கும் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதலாம். ஏன், பெயரைக் கூட மாற்றிக் கொள்ளலாம். அதனால் எந்த பாதகமும் இல்லை. வளர்ந்தாயிற்று. ஏணியில் ஏறியாயிற்று. இனி ஏணி தேவையில்லை.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக ஒரு எழுத்தாளரின் அகால மரணம் எனக்குள் சில ஞாபகங்களைத் தூண்டி விட்டு அது பற்றி எழுதத் தூண்டியது. எழுதினேன். அந்த நீண்ட தொடர் ஒருவரை மரணமிலாப் பெருவாழ்வு வாழ வழி காட்டும் தொடர். அதில் சௌம்யா என்று ஒரு பாத்திரம்.
நேற்று இதே நேரம் ஸீரோ டிகிரி பதிப்பகம் பார்ட்னர் காயத்ரியிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல். அது கீழே:
சார்
வணக்கம்.
விட மாட்டீர்கள் போலிருக்கிறது. ‘சாணி மிதிப்பது’ என்று சொன்னதற்கு பல முறை மன்னிப்பு கேட்டாயிற்று. ஃப்ரான்பர்டிலும் நீங்கள் அனுப்பிய வாய்ஸ் நோட்டிற்கு பதில் சொல்லி மாய்ந்து போனேன். சரி! இனி இது நிற்காது. பழகிக் கொள்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
“சுரணையுணர்வு பற்றி நீட்டி முழக்கியிருக்கிறீர்களே, ஆனால் பொதுவெளியில் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பும் முன், அந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்ற அடிப்படை உண்மையை சரி பார்க்கும் ‘சுரணை’ ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டாமா?
அரவிந்தன் காணொளியை எடுத்தது நான் இல்லை. அதை எடுத்தது ஒரு இளைஞன். மட்டுமல்ல, பலரும் எடுத்தார்கள். பலரும் பகிர்ந்திருக்கிறார்கள். அந்தப் பையன் வீடியோவையே நான் பகிர்ந்தேன் என்பதே உண்மை. ஆனால், நீங்கள் ‘பெண்கள் என்ன செய்தாலும் ஈ என்று இளித்துக்கொண்டு’ என்று அவரை இழிவு செய்கிறீர். அவரைக் காப்பாற்றவில்லை. அதாவது உங்களைத் தவிர அனைவரும் பெண்களிடத்தில் ஈ என்று இளிப்பவர்கள்.
‘கழுதைக் குரல்’ என்று ஒரு படைப்பாளியை இழிவுபடுத்திவிட்டு, இப்போது அவருக்காக ‘வழக்காடுகிறேன்’ என்று சொல்வதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை.
நிஜமான வன்மம் என்பது வீடியோ எடுத்தவரிடமோ, அதைப் பகிர்ந்தவரிடமோ இல்லை. குரலை ‘கழுதை’ என்று முத்திரை குத்தி, அவர் பெண்களிடம் இளிப்பவர் என்று கொச்சைப்படுத்தும் உங்கள் எழுத்தில்தான் இருக்கிறது.
உண்மை தெரியாமல் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சிறுமைத்தனம். அதைத் தத்துவார்த்த நியாயங்கள் சொல்லித் தக்க வைக்க முயல்வது ‘அறிஜீவித்தனமான பித்தலாட்டம்.”
‘பிசாசைச் சீண்டிவிட்டு அலற வேண்டாம்’ என்று எனக்கு எச்சரிக்கை விடுத்தீர்கள். ‘உண்மையைச் சீண்டிவிட்டுவிட்டு, கற்பனை உலகுக்குள் உட்கார வேண்டாம்’ என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
சௌம்யா
சௌம்யா என்று பெயர் போட்டிருந்தாலும் காயத்ரியின் மின்னஞ்சலிலிருந்து வந்திருந்ததால் அது காயத்ரியின் கடிதமே எனக் கொள்ள வேண்டும்.
அதோடு, ஃபேஸ்புக்கிலும் காயத்ரியின் கீழ்க்காணும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை போதிக்கும் வசனம் வெளியானது.
”தத்துவம் என்பது நம் பார்வையை விசாலப்படுத்த வேண்டுமே தவிர, நம் வன்மத்தைக் கூர்மைப்படுத்த பயன்படக் கூடாது. புனைவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாமல், தன் கற்பனையில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதைத் தாக்கும் எவரும் போத்ரியார் (Baudrillard) சொன்ன ‘நிஜத்தின் பாலைவனத்தில்’ (Desert of the real) தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிஜமான கலை என்பது அடுத்தவர் கண்ணியத்தை சிதைப்பதல்ல, மாறாக, நம்முள்ளே இருக்கும் சிறுமைகளைச் சிதைப்பதாகும்.”
இது என் பெயரைக் குறிப்பிடாமல் என்னை அவதூறு செய்யும் வரிகள். ஆனாலும் என் கட்டுரைத் தொடரைப் படித்த நண்பர்களும், படிக்காத நண்பர்களும் இதற்கு இஷ்டத்துக்கு விருப்பக்குறி போட்டிருந்தார்கள். அய்யப்ப மாதவன் ஒரு படி மேலே போய் well said என்றே சொல்லியிருந்தார். அவர் என் கட்டுரைத் தொடரை வாசித்திருக்க மாட்டார். இது என் மீதான அவதூறு என்றும் அவருக்குத் தெரிந்திராது.
சிறுமையும், பித்தலாட்டமும் ஒரு மனிதனின் எழுபத்து மூன்று வயதில் போய் அவனிடம் உட்கார்ந்து கொள்ளாது. பல ஆண்டுகளாகவே அவனிடம் இருந்து கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். ஏன், பத்து ஆண்டுகளுக்கு முன் ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடங்கும்போது என் சிறுமையும், பித்தலாட்டமும் காயத்ரிக்குத் தெரியவில்லையா? தெரிந்தும் ‘காரியம் ஆனால் போதும்’ என்று நினைத்தாரா? அது எப்படி திடீரென்று நான் பித்தலாட்டக்காரன் என்று தெரிந்தது? நண்பர் சொன்னாரா? தோழிகள் சொன்னார்களா?
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் வலதுகரமாக விளங்கிய ஒருவர் அராத்துவுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று சொல்லி என்னை விட்டு விலகினார். அது பிரச்சினை அல்ல. மறுநாளே என்னை அவதூறு செய்து ஒரு பெரிய கட்டுரை எழுதினார். ”சாருவுக்கு உண்மையே பேசத் தெரியாது. பொய்யேதான் பேசுவார்.”
ஜனவரி மாதம் ஒரு நண்பர் பிரிந்தார். சாருவின் செயல்பாடுகள் கயமை என்று அவதூறு செய்தார்.
இப்போது காயத்ரி என்னை பித்தலாட்டக்காரன் என்கிறார்.
என்னைப் பிரிந்து செல்பவர்களின் அவதூறு எனக்குப் புதிதல்ல என்பதால் இதையும் கடந்து செல்கிறேன். ஆனால்,
இறைசக்தி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறது.