ஜோடிப்புறா நாவல் குறித்து ரத்தக் கண்ணீர் எம்மார் ராதாவைப் போல் கதறிக் கதறி எழுதியிருந்தேன் இல்லையா? மூன்று பேர் வாங்கி விட்டார்கள். அதைக் கேட்டு ஆன்மா இன்புற்றது.
ராஸ லீலா பதிப்பகம். புதிய பதிப்பகம். மிகச் சிறப்பான முறையில், ஈடு இணை இல்லாத வகையில் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஸ லீலா பதிப்பகத்தில் பணிகள் நடக்கின்றன. ஆனால் கொள்வார் இல்லை.
என்ன செய்யலாம் என யோசித்தேன். என் அத்யந்த நண்பர் ஒருமுறை சொன்னார், எக்காரணம் கொண்டும் ஸீரோ டிகிரி பதிப்பகத்தை விட்டு விலகாதீர்கள் என்று. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் முக்கியமானது. அவர்களின் விநியோகத்தை அடித்துக் கொள்ள தமிழ்நாட்டில் ஆள் இல்லை என்றார் நண்பர். பேசாமல் ஸீரோ டிகிரி நண்பரையே தொடர்பு கொண்டு கேட்கலாமா என்று நினைத்தேன். ஈகோ இடம் கொடுக்கவில்லை. என்ன ஆனாலும் மதியாதார் வாசலை மிதியாதே என்பது முதுமொழி. எங்களுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஃபேஸ்புக்கிலேயே ஸீரோ டிகிரி பதிப்பாளர் எழுதிய பிறகு, அது குறித்து என் புகார்களை அவர்கள் இருவரும் எதிர்கொண்ட விதம் என்னை மேலும் மேலும் அவமதிப்பதாகவே இருந்தது. கடைசியில் ”பித்தலாட்டம்” என்ற என் மீதான அவதூறில் முடிந்தது அந்தப் பஞ்சாயத்து. சம்பந்தம் இல்லை என்று எழுதியதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள், அது எந்த சூழலில் எழுதப்பட்டது என்று விளக்கி மன்னிப்பும் கேட்டாயிற்றே என்றார் ஸீரோ டிகிரி பதிப்பாளர்களில் ஒருவர்.
எந்தச் சூழலிலிலும், எந்த நிர்ப்பந்தத்திலும் அவன் என் அப்பன் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. அப்படித்தான் நாம் ஏறி வந்த ஏணியும், ஆசிரியரும். என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் அசோகமித்திரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என் உணர்வில் ஓடுவது அசோகமித்திரனின் குருதி.
இந்தப் பின்னணியில்தான் புத்தக விநியோகம் குறித்து அதில் ஜாம்பவனாக இருக்கும் நண்பரைத் தவிர்த்து விட்டு என் தளத்திலேயே ஜோடிப்புறாவுக்கான அறிமுக வேலைகளைச் செய்து வருகிறேன்.
சுய பரிசோதனை செய்து கொள்வது என்ற பண்பையே பலரிடமும் காண முடியவில்லை. உங்களிடம் இருக்கிறதா என்று என்னை நீங்கள் கேட்டால் ஜோடிப்புறா நாவலைப் படித்துப் பாருங்கள் என்றுதான் சொல்வேன். அந்த நாவலைப் படித்த என் தோழி நந்தினி “இது self-interrogation இல்லை, Self-flagellation” என்று சொன்னாள். சில மதச் சடங்குகளில் தன்னையே கத்தியால் சீவிக் கொள்வார்கள் இல்லையா, அது போல் தன்னையே சவுக்கால் அடித்துக் கொள்வதே Self-flagellation. இதை நீங்கள் ஒரு உருவகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஜோடிப்புறா அளவுக்கு ஒரு எழுத்தாளன் தன்னையே சுய பரிசோதனை செய்து கொண்டதை நான் இதுவரை வாசித்தது இல்லை. சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கியை மட்டுமே விதிவிலக்காகச் சொல்லலாம்.
ஜோடிப்புறா நாவல் பற்றி இன்று நண்பர் வேலு மலையன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“உலகில் நிலையான ஒழுங்கு என்று எதுவுமே இல்லை. .இங்கு காலம் காலமாக கடைப்பிடித்து கட்டி வைத்திருக்கும் ஒழுங்கமைப்பின் மீது கால் வைத்துக் கடந்து போகும் கலகமும்,கலையும் கொண்ட பிரதிகளாக சாருவின் படைப்புகளை பார்க்கலாம்.பல்வேறு சம்பவங்களின் பல்வேறு உணர்ச்சிகளின் cocktail கலைப்பிரதி ஜோடிப் புறாவை எங்கே காணோம் நாவல். கண்ணாயிரம் பெருமாள் என்பது ஒரு பெயர் அல்ல. அது ஒரு அறத்தின் குரல். ஜோடிப் புறாவை எங்கே காணோம் ஒரு தன் வரலாற்றுத் தன்மை கொண்ட நாவல்.

ஒரு விதத்தில் தன்னைச் சூழ்ந்த மனிதர்களால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான எதிர் உரையாடலாகவும் இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம். தன் பக்கம் இருக்கும் பலம்,பலவீனம் இரண்டையும் நிர்வாணப்படுத்தி நிமிர்ந்து நிற்கும் எழுத்து வகை சாருவினுடையது. கண்ணாயிரம் பெருமாள் என்பது இந்த நாவலில் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு பாத்திரம் அல்ல.அது ஒரு அற உணர்ச்சியின் அடையாளம். பூனை, நாய் போன்ற வாயில்லா பிராணிகளின் மீதான சாருவின் பற்றும்,பரிவும் எழுபத்து மூன்று வயதுக்குள் இருக்கும் ஒரு குழந்தைமையின் குணத்தைக் காட்டுகிறது.(குழந்தைகள் எனக்குப் பிடிக்காது என்ற நூலை அவர் எழுதியிருந்தாலும்).இந்த நாவல் முழுக்க ஒரு நேர்மையின் அங்கதம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். தன்னுடன் நட்பாக இருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் தன்னுடன் நாதஸ்வர உறவில் இருந்த பெண்களுடன் கொண்ட முரணில் அவர்களைப் பற்றிய புகார் சுட்டல் மற்றும் வரம்பு மீறிய வசைகளின் தொகுப்பு என மேலோட்டமாகத் தெரியும் இந்த நாவல் அவ்வளவு வசைகளுக்கு அடியிலும் வைத்திருப்பது சக மனிதர்கள் மீதான கரிசனத்தையே.
இந்தப் பாசாங்கான வாழ்வு கொண்டுள்ள உறவுகள் அதன் சிக்கல்கள்,காமம், கயமை, இன்பம்,இழிவு என நிறைய விஷயங்களை நிர்வாணப்படுத்தி விசாரிக்கிறது இந்த நாவல்.
Velu malayan
நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் ராஸலீலா பதிப்பகத்தின் whatsapp number (7339680708) – இல் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்..
G- Pay (7339680708)
அல்லது
வங்கிக் கணக்கு எண் :
A/c No: 25840200001634
IFSC CODE: FDRL0002584
ACCOUNT NAME:
RAASA LEELA PATHIPPAGAM
.