9. மரணமிலாப் பெருவாழ்வு

9. மரணமிலாப் பெருவாழ்வு

என் பெயர் குறிப்பிடாமல் என்னை அவதூறு செய்யும் ஒரு ஃபேஸ்புக் குறிப்பைக் கண்டேன்.  அதில் ஒரு வாக்கியம் வருகிறது.  “நிஜமான கலை என்பது அடுத்தவர் கண்ணியத்தை சிதைப்பதல்ல, மாறாக, நம்முள்ளே இருக்கும் சிறுமைகளைச் சிதைப்பதாகும்.”

பெல்ஜியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  லியோபோல்ட் II (King Leopold II of Belgium).என்று ஒரு மன்னன் இருந்தான்.  இவன், “மனிதாபிமானம், நாகரீகம், கண்ணியம்” என்ற பெயரில் ஆஃப்ரிக்காவில் காங்கோ நாட்டை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக்கினான். உலக சமூகத்திடம் “அடிமைத்தனத்தை ஒழிப்போம், மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை கொடுப்போம், நாகரீகத்தைப் பரப்புவோம்” என்று பெரிய பேச்சு பேசினான். பிரபலமான “International African Association” என்ற அமைப்பை உருவாக்கி, அது மனிதாபிமான அமைப்பு என்று சொல்லி பணம் வசூலித்தான்.

ஆனால் உண்மையில் காங்கோ மக்களை அடிமைப்படுத்தி, கைகால்களை வெட்டி, பயங்கரமான கொடுமைகளைச் செய்தான். ஏறக்குறைய ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பட்டினியால் இறந்தனர். அவனுக்கு கண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாது – ஆனால் அதைப் பற்றி உலகத்துக்கே “பாடம்” எடுத்தான்.

கண்ணியத்தைப் பற்றி எனக்குப் பாடம் எடுக்கும் அம்மணியின் குறிப்பை வாசித்ததும் எனக்கு இரண்டாம் லியோபோல்ட் தான் ஞாபகம் வந்தான்.  ஏன் அம்மணி, எக்ஸைல் நாவலில் அஞ்சலி என்ற பெண்ணின் கணவனை கிழிகிழி என்று கிழித்துத் தொங்கப் போட்டேனே, அந்த நாவலை அணு அணுவாக வாசித்து, ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உதவியர்தானே நீங்கள்?  அப்போது, அஞ்சலியின் கணவனின் கண்ணியத்தை ஏன் இப்படிச் சிதைக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லையே, ஏன்?  அன்பு நாவலில் வைதேகியின் கண்ணியத்தை ஏன் இப்படிச் சிதைக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கவில்லையே, ஏன்?  

எனக்கு உதவி செய்வதற்காக வரும் பெண்களையெல்லாம் toxic என்றும், அவர்கள் என்னை மீட்டூவில் மாட்டி விட்டு விடுவார்கள் என்றும் சொல்லும் போதெல்லாம் ஏன் அவர்களின் கண்ணியத்தைச் சிதைத்தீர்கள்?

1956இல் பதிப்பிக்கப்பட்ட சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற நூல் சிலப்பதிகாரத்தில் வரும் இசை, பண், யாழ், குழல் போன்ற இசை நுணுக்கங்களை விரிவாக ஆராய்ந்து விளக்கும் முக்கியமான ஆய்வு நூல்.

இதை எழுதிய வீணை எஸ். ராமநாதன் ஒரு புகழ்பெற்ற வீணை வித்வான், இசை ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர். சிலப்பதிகார இசையைப் பற்றி ஆழமான ஆய்வு செய்து PhD பெற்றவர் (Wesleyan University, USA).

இந்த நூல் தமிழ் இசை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சிலப்பதிகாரத்தில் உள்ள இசைக்கோட்பாடுகளை கர்நாடக இசையுடன் ஒப்பிட்டு விளக்கிய முதல் விரிவான முயற்சிகளில் ஒன்று.

இந்த நூலுக்கு நான் எண்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்த மீட்சி என்ற சிற்றிதழில் விரிவான ஒரு மதிப்புரை எழுதினேன்.  எண்பதுகளின் முற்பகுதி என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆனால் உங்களது கண்ணியமான நண்பரான இசை விமர்சகர் அம்பி என்னைக் குறிப்பிட்டு ‘விக்கிபீடியா எழுத்தாளர்’ என்கிறார்.  இந்த அம்பி சமூகத்தில் மிகவும் கண்ணியமான நபர் எனப் பெயர் எடுத்தவர்.  ஆனால் சீண்டப்பட்டால் சேற்றில் உழலும் பன்றியைப் போல் சிலுப்பும் தன்மை கொண்டவர்கள்தான் எல்லா கண்ணியவான்களும் என்பதை நீங்கள் உங்கள் அம்பியை வைத்தே புரிந்து கொள்ளலாம்?  எண்பதுகளின் முற்பகுதியில் உங்கள் அம்பி பிறந்திருப்பாரா, அண்ணாக்கயிறோடு திரிந்தாரா என்று தெரியவில்லை.  அவர் சொல்கிறார் சாரு விக்கிபீடியா எழுத்தாளர் என்று.  

நீங்களும் உங்கள் அம்பிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல.  சீண்டப்பட்டதும் எப்படி சீறுகிறீர்கள் பார்த்தீர்களா?  சொல்லிக் கொடுத்தவனையே பித்தலாட்டக்காரன் என்கிறீர்கள்.  அந்த வார்த்தையை எழுத உங்களுக்குக் கை கூசவில்லை. என்னைப் பித்தலாட்டக்காரன் என்று எழுதும்போது உங்கள் கண்ணியம் அப்போது எங்கே போயிற்று?

நான் ஒருபோதும் வினை புரிந்ததில்லை.  எதிர்வினை மட்டுமே புரிகிறேன்.  வினை புரிந்தேன் என்று யாராலும் ஒரு சம்பவத்தைக் கூட சொல்ல முடியாது.  பிசாசின் வாலில் வெடியைக் கட்டிப் பற்ற வைக்கிறீர்கள்.  பிசாசு எதிர்வினை ஆற்றுகிறது.  உடனே கண்ணியத்தைச் சிதைப்பவன் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் தூஷணை செய்கிறீர்கள்.  

கண்ணியமற்று நடந்து கொள்ளுபவர்களை நான் விமர்சனம் பண்ணுகிறேன்.  அப்படிப்பட்ட என்னைப் பார்த்து கண்ணியமாக நடந்து கொள் என்றால் என்ன அர்த்தம்?

உங்கள் கடிதமும் ஃபேஸ்புக் பதிவும் சிறுவர் மலர் நீதி போதனை போல் இருக்கின்றன.  நீங்கள் சுமார் பத்தாண்டுகளாக எனக்கு மாரல் சயன்ஸ் டீச்சரின் பணியைச் செய்து வருகிறீர்கள்.  இன்றைய உங்கள் கடிதமே அதற்கு ஒரு உதாரணம்.  அதிலும் போத்ரியார் பற்றி உங்களுக்குப் பாடம் எடுத்த ஆசானுக்கே போத்ரியார் பற்றிப் பாடம் எடுக்கிறீர்கள்!  இந்த நகைச்சுவையை எங்கே சொல்லி அழுவது?  ஆசிரியனுக்கே பாடம் எடுக்கும் சிறுபிள்ளைத்தனத்தைக் கொண்டிருப்பதற்கு வெட்கமாக இல்லையா?  யாரிடம் பேசுகிறோம் என்ற உணர்வு கூடவா இல்லாமல் போய் விட்டது?  அந்த அளவுக்கா மரத்து விட்டது சுரணையுணர்வு?

உங்கள் ஃபேஸ்புக் பக்கங்கள் எனக்குப் பெண்கள் பற்றிய பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பலகணியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டேன்.  உண்மைதான்.

சமீபத்திய உதாரணம்.  ஏற்காட்டில் நடந்த என் வாசகர் வட்டச் சந்திப்புக்கு வரும் ஆண் பெண் அனைவரும் ஒரே வண்ணத்திலான ஆடை அணிந்து வர வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  உள்ளாடை எந்த வண்ணத்திலும் இருக்கலாம்.  அது ஒன்றும் தெரியப் போவதில்லை என்பதால்.  யாரும் நான் சொன்னபடி வரவில்லை.  கேட்ட போது அடிக்க வந்து விட்டார்கள்.  நான் இன்னாரின் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், அங்கேதான் இப்படிப் பார்த்தேன் என்றேன்.  அடி இன்னும் பலமாக விழுந்தது.  

இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள்.  மக்கள் கண்ணியமற்று இருக்கிறார்கள்.  பெண்கள் சந்திப்பில்தான் கற்றேன் என்றாலும் கேட்க மறுக்கிறார்கள்.  என்ன செய்ய?

இதை வாசிக்கும் நண்பர்களே! நீங்கள் நூறாண்டு வாழ நான் இந்த ஒன்பது அத்தியாயங்களிலும் வழி சொல்லியிருக்கிறேன்.  

வாழ்வைக் கொண்டாடுங்கள்.  அடுத்தவரை ஒருபோதும் நோண்டாதீர்கள்.  பரிகசிக்காதீர்கள்.  பரிகசிப்பவன் திருப்பித் தாக்கினால் கண்ணியம் அற்றவன் என்றும், பித்தலாட்டக்காரன் என்று தூஷணை செய்யாதீர்கள்.  

இந்தியாவில் மட்டுமே பெரும்பாலானவர்கள் ஐம்பதை நெருங்குவதற்குள்ளாகவே ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தீர்களா?  ஐரோப்பாவில் ஏன் எல்லோரும் தொண்ணூறையும் தாண்டி வாழ்கிறார்கள்?  உடனே ஐரோப்பாவின் செல்வச் செழிப்பு, சுத்தம், ஆரோக்கியம் என்று காரணம் கூறுவீர்கள்.  

சீலேவை எடுத்துக் கொள்வோம்.  ஸீரோ டிகிரி குளிரில் குளிப்பதற்கு வீடுகளில் வெந்நீர் கிடையாது.  குழாயிலிருந்து தண்ணீர் குடித்தால் உடனடி மரணம்.  அத்தனை விஷம்.  கொடூரமான ஏழ்மை.  ஆனாலும் அங்கே மக்கள் தொண்ணூறைத் தாண்டி வாழ்கிறார்கள்.

ஏன், எப்படி?

இந்தத் தொடரை கவனமாகப் படியுங்கள், விடை கிடைக்கும்.

என் நண்பர் ஒருவர்.  வளைகுடா நாடு ஒன்றில் வசிக்கிறார்.  விடுமுறையில் ஊருக்கு வந்தார்.  வந்த இடத்தில் தம்பி ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டான்.  சாகிற வயதா?  நாற்பது கூட ஆகவில்லை.  மனைவி குழந்தை குட்டி எல்லாம் உண்டு.  இவர் வசிக்கும் நாட்டில் போர் தீவிரமாக இருக்கிறது.  விடுப்பை நீட்டிக்கிறார்.  ஆனால் இடையிலேயே விடுப்பை ரத்து செய்து விட்டு பணிபுரியும் நாட்டுக்குத் திரும்பி விட்டார்.

ஏன் என்றேன் ஆச்சரியத்துடன்.

என்னையும் கொன்று விடும் போலிருக்கிறது என்றார் வேதனையுடன்.

எது என்று நான் கேட்கவில்லை.  ஏனென்றால் எனக்கே தெரியும்.  ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

என் நெருங்கிய உறவினர்.  அறுபது வயதில் மூளையில் ரத்தக்கசிவு.  பிழைத்ததே மறு பிழைப்பு.  எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.  அவர் தேறி வந்ததும் எப்படி வந்தது உங்களுக்கு என்றேன்.

ஃபேமிலி என்றார் ஒற்றை வார்த்தையில்.  இங்கே சமூகம் என்றும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதை மீறி மரணமிலாப் பெருவாழ்வு எப்படி சாத்தியம்? 

இந்தத் தொடரை ஆரம்பத்திலிருந்து நிதானமாக மீண்டும் ஒருமுறை படியுங்கள்.