ராஸலீலா பதிப்பகத்தினால் மிக விரைவில் வெளிவர இருக்கும் கோடம்பாக்கம் என்ற என்னுடைய கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குறிப்பு. எழுதிய தேதியை கவனியுங்கள்.
***
மலையாளத்தின் ஓ.என்.வி. விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் வேறு கவிஞர்கள் இல்லையா? வைரமுத்துவை யார் கவிஞர் என்று சொன்னது? அவர் பாடலாசிரியர். இப்போதைய பாடலாசிரியர்களிலேயே அதிகத் திறமையானவர். அதற்குத்தான் அவர் இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வருடா வருடம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே? அது போதாதா?
தமிழில் இப்போது தேவதேவன், தேவதச்சன் போன்று உலகத் தரத்தில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே? அவர்களையெல்லாம் மலையாளிகள் அறியவில்லையா? திரும்பத் திரும்ப சினிமாதானா?
எந்த விருதை எடுத்தாலும் தமிழ் என்று வந்தால் சராசரிகளுக்கும், விருதுக்குத் தகுதியில்லாதவர்களுக்கும்தான் போவது என்று வழக்கமாக உள்ளது. அப்படித்தான் ஞானபீடப் பரிசு அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் போயிற்று. இப்போது வைரமுத்து. அப்படியே ஞானபீடத்தையும் வைரமுத்துவுக்கே கொடுங்கள். தமிழ் இலக்கியம் உருப்பட்டு விடும்…
***