மக்கள் வாக்கு அளித்த வேகத்தை வைத்தே இது ஒரு வித்தியாசமான தேர்தல் என்பதை கணித்திருக்கலாம். தேர்தலுக்கு ஒரு நாள் முன்னர்தான் நான் என் யூட்யூப் செய்தியை வெளியிட்டேன். அதில் மக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்கினேன். சினிமாவும் அரசியலும் கலப்பது விரும்பத் தக்கது அல்ல என்பதே என் நிலைப்பாடு. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது வேறு வழியே இல்லை என்று சொல்லியிருந்தேன். காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரவுடிகளின் கையே ஓங்கியிருந்தது. முன்பெல்லாம் கொலை வெட்டுக் குத்து என்றால் தனக்குப் பிடிக்காதவனை ஒரு ரவுடி போட்டுத் தள்ளுவான். உடனே அந்த ரவுடியை செத்துப் போன ரவுடியின் அடியாள் போடுவான். இப்படியே போகும் கதை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்கள் கஞ்ஜாவைப் போட்டு விட்டு கைகளில் வீச்சரிவாளுடன் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் வெட்டித் தள்ளினார்கள்.
காவல்துறைக்கு ஐந்து ஆண்டு விடுமுறை விடப்பட்டது போல் இருந்தது. அடுத்து, திமுகவினரின் கொள்ளை. அதிமுக ஒன்றும் சளைத்தது அல்ல என்றாலும் திமுக அதை வெளிப்படையாக – கிட்டத்தட்ட ரசீது கொடுத்து செய்வது போல் செய்தது.
உதயநிதி அடுத்த முதல்வராக விரும்பியிருந்தால் இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் என்னென்ன செய்தாரோ அதற்கு எதிராகச் செய்திருக்க வேண்டும். அதாவது, இன்னும் பத்து ஆண்டுகளுக்குத் தொண்டனாகவே பணி செய்திருக்க வேண்டும். ஸ்டாலின் அதைத்தான் செய்தார்.
இந்திரா காந்தியின் எமெர்ஜென்ஸிக்கு எதிராக மக்கள் எத்தனை கோபமாக வாக்களித்தார்களோ அத்தனை கோபமாகவே இப்போது வாக்களித்திருக்கிறார்கள். அதனால்தான் வாக்களிப்பு விகிதம் அத்தனை உயர்ந்தது. பாட்டாளி மக்களெல்லாம் ஊர்ப் பயணம் செய்து சொந்த ஊருக்குப் போய் வாக்களித்தார்கள். இப்படி தமிழ்நாட்டில் மிக மிக அரிதாகவே நடந்திருக்கிறது.
ஜனநாயகத்தின் மேலும், மக்களின் வாக்குரிமை மேலும் மீண்டும் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது.