அன்புள்ள சாரு,
வணக்கம். தங்களின் தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை” புத்தக அட்டையில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி ஆழ்ந்த தவநிலையில் ஸ்ரீ இராமபிரானைக் காண்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்லது. அந்த க்ஷணத்தில் ஸ்வாமிகாரு பாடிய கீர்த்தனைகள் மூன்று.
கனுகொண்டினி ஸ்ரீராமுலு – பிலஹரி
நன்னு விடச்சி – ரீதி கௌளை
வினயமு நானு – சௌராஷ்ட்ரம்
இம்மூன்று கீர்த்தனைகளிலுமே ஸ்ரீஸ்வாமிகாரு ஸ்ரீஸீதா, லக்ஷ்மன, பரத சத்ருகன, ஹனுமத ஸமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தர்ஸித்ததாகவே பதிவிடுகிறார். ஆனால் தங்களின் அட்டைப் படத்தில் தாயாரான ஸ்ரீஸீதாதேவியையே காணவில்லையே? ஒருவேளை அடியேனுக்குத்தான் தெலியலேதுவா?
அடியேன்,
சுந்தர கிருஷ்ணன்
அன்புள்ள திரு சுந்தர கிருஷ்ணன் அவர்களுக்கு,
தியாகராஜரின் கதையை நாவலாக எழுதுவதற்கு எனக்கு ஒரே ஒரு தகுதிதான் உண்டு. சங்கீதம் முறையாக அறிந்த வேறு யாரேனும் தியாகராஜரின் கதையை நாவலாக எழுதியிருந்தால் நான் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டேன். ஸ்வாமிநாத ஆத்ரேயன் தியாகராஜரின் வாழ்விலிருந்து சில சம்பவங்களை எடுத்து சில சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். சாமுவல் ஜாக்ஸன் தியாகராஜரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். ஜாக்ஸனின் நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. என் நாவலை முடித்து விட்டுத்தான் படிப்பதாக இருக்கிறேன். மேலும், என்னுடைய நாவலுக்கும் ஜாக்ஸனின் நாவலுக்கும் அதிக ஒற்றுமை இருக்காது என்றே நம்புகிறேன். ஏனென்றால், என்னுடைய தளமே வேறு. அதை நாவலை வாசிக்கும் யாவரும் உணர முடியும்.
இந்த நாவலை எழுத எனக்கு இருக்கும் ஒரே தகுதி, தியாகராஜர் ராமபிரானை நேரடியாகச் சந்தித்தார் என்று நான் நம்புகிறேன். அது ஒன்றும் கற்பனைக் காட்சி அல்ல. Hallucination அல்ல. இதை நான் சொல்லவில்லை. தியாகராஜர் தனது கீர்த்தனைகளில் சொல்கிறார். அதை ஒருவர் நம்பவில்லையானால் அவர் என்னுடைய நாவலைப் படிக்கும் தகுதியை இழக்கிறார் என்றே கூறுவேன். எழுதி முடித்த பிறகு அந்தப் பிரதி எழுத்தாளருக்குச் சொந்தமில்லை என்றாலும், மேற்கண்ட கூற்றை நான் திண்ணமாகச் சொல்லியே தீருவேன். நான் சந்தித்த, உரையாடிய சங்கீதக்காரர்கள், விமர்சகர்கள், நண்பர்கள் யாவரும் தியாகராஜரின் ராம தரிசனம் அவரது ஹலூஸினேஷன் என்றே நம்புகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள். இது தவிர, எனது நெருங்கிய நண்பர்கள் ஐந்தாறு பேர் பச்சை நாத்திகர்கள். இந்தக் காரணத்தில்தான் இந்த நாவலை நான் எழுதத் துணிந்தேன். என் நாவலின் அடிநாதம் சங்கீதம் அல்ல. பக்தி. இருந்தாலும் நான் ஒரு perfectionist என்பதால் நாவலில் கடுகத்தனை பிழை கூட இல்லாமல் வெளி வரும் என்று உறுதியளிக்கிறேன்.
இந்தப் பணியை முடிப்பதற்கு மஹா பெரியவரின் ஆசியும், ஒரு மகத்தான autofiction கவியும், என் ஆசானுமாகிய தியாகராஜரின் துணையும் எனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன். தினமும் 2000 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதி வருகிறேன். நாவல் ஒரு லட்சம் வார்த்தைகள் வரலாம். இப்போதைக்கு 20000 வார்த்தைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய பாணி என்னவென்றால், எழுதி முடித்து விட்டு அதை ஐம்பது தடவையாவது சீரமைத்துக்கொண்டிருப்பேன்.
பார்ப்போம். தாங்கள் சுட்டிக் காட்டிய பிழையை நிர்குண் சரி செய்திருக்கிறார்.
சாரு


