நன்றி

எப்போதும் காலை நான்கு மணிக்கே எழுந்து விடும் எனக்கு அன்று காலை ஆறு மணிக்குத்தான் விழிப்பு வந்தது.  அதுவும் சாதாரணமாக அல்ல.  உடம்பு பூராவும் வேர்த்து ஊற்றியது.  தாடை இரண்டும் கடுமையாக வலித்தது.  கண்ணிமைக்கும் நேரத்தில் எனக்கு விஷயம் புரிந்து விட்டது.  பரபரப்போ பதற்றமோ அடையாமல் பக்கத்துத் தெருவில் இருக்கும் ராமசுப்ரமணியனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை ஒரே வரியில் விளக்கி, இன்னும் ஐந்து நிமிடங்களில் தயாராக இருக்கச் சொன்னேன். உடனே பல் துலக்கி விட்டு, கழிப்பறைக் கதவை உள்ளே தாளிடாமல் (இது மிக மிக முக்கியம்) மலஜலம் போய் விட்டு (எனக்கு bedpan என்றால் ரொம்ப அலர்ஜி) உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி மருத்துவமனை செல்கிறேன் என்று மட்டும் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.  அவளை அழைத்துச் செல்வது சாத்தியமே இல்லை.  பப்பு, ஸோரோ காலையில் எழுந்ததும் மலஜலம் போக தோட்டத்துக்குப் போக வேண்டும்.  இல்லாவிட்டால் வீட்டுக்குள்ளேயே போய் அதகளமாகி அவந்திகாவுக்குப் பிரச்சினை ஆகி விடும் என்பதால் ராமசுப்ரமணியனை அழைத்தேன்.

பொதுவாக அவ்வளவு காலை நேரத்தில் அரை கிலோமீட்டராவது நடந்தால்தான் ஆட்டோ கிடைக்கும்.  பெரும்பாலான சமயங்களில் நான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு நடந்தே போய் விடுவேன்.  ஆனால் அன்றைக்கு என்று பார்த்து வீட்டுக்கு வெளியே ஒரு ஆட்டோ போனது.  பொதுவாக ஆட்டோ கேட்டால் வர மாட்டேன் என்றுதான் பதில் வரும்.  ஆச்சரியகரமாக நான் அழைத்ததும் வந்தார்.  ராமசுப்ரமணியன் முதல் மாடியில் இருந்தார்.  நான் மாடி ஏறக் கூடாது.  தாடை வலியும், வியர்வையும் அப்படியே இருந்தது. சட்டை நனைந்து விட்டது.  தாகம் எடுத்தது.  ராமசுப்ரமணியனின் காரைத் துடைத்துக் கொண்டிருந்த வாட்ச்மேனிடம் சாரைக் கூப்பிட்டு வாருங்கள் என்றேன் மெதுவாக.  அவர் மேலே ஓடினார்.  உடனே கீழே இறங்கிய ராமிடம் குடிக்கத் தண்ணீர் என்று சைகை காட்டினேன்.  மீண்டும் மேலே போனார்.  அவ்வளவு தான்.  ஆளையே காணோம்.  மூன்று நிமிடமா ஐந்து நிமிடமா தெரியவில்லை.  ஆனால் எனக்கு அது மூன்று யுகமாக இருந்தது.  தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு ஆபத்து.  ஏன் தாமதம் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

தண்ணீரோடு வந்தார்.  காரில் மருத்துவமனை கிளம்பினோம்.  அவசரமாக முதலுதவி கொடுக்கப்பட்டது.   எடுத்த எடுப்பில் 15,000 ரூ. கட்டச் சொன்னார்களாம்.  ராம் கட்டியிருக்கிறார்.  எல்லாம் எனக்குப் பின்னால் தெரிந்தது.   மருந்துக்கு முதலில் 15,000 ரூ.  இரண்டு மணி நேரம் கழித்து 18,000 ரூ.  ஆக, அன்றைய தினமே அவர் கணக்கில் 50,000 ரூ ஆகி விட்டது.  என்னை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.  ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டது.  ஒரு மருத்துவர் மைல்ட் அட்டாக் என்றார்.  இன்னொருவர் massive attack என்றார்.  ஆனால் புகழ்பெற்ற அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனக்குத் தவறுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டது.  Angiogram செய்வதற்கு முன்னால் கொடுக்க வேண்டிய மருந்துகளுக்குப் பதிலாக Angioplasty செய்வதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் என் உடம்பெல்லாம் தடித்துப் போய் அரித்தது.  வாந்தி எடுத்தேன்.  உலகமே சுற்றுவது போல் மயக்கம் வந்தது.  மறுநாள் காலையே அந்த மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனைக்குக் கொண்டு வரப் பட்டேன்.  இப்படியாக என் உயிரைக் காப்பாற்றியவர்கள் டாக்டர் சிவகடாட்சம், ராமசுப்ரமணியன் இருவரும்.  டாக்டர் சிவகடாட்சத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று யோசனை கூறியவர் அராத்து.

ராமசுப்ரமணியன் என் எழுத்து ஒன்றைக் கூட படித்தவர் அல்ல.  பொதுவாக அவர் shiva trilogy (அமீஷ் எழுதியது), பாவ்லோ கோய்லோ போன்றவர்களைப் படிக்கக் கூடியவர்.  அவரைப் போன்ற ஒரு நல்லவரை இன்றைய உலகில் பார்ப்பது அரிது. (மகாத்மா என்றுதான் அவரை அழைப்பேன்.  நான் ஒரு சாதாரண ஆள் சார் என்று மறுப்பார்.  “நீங்கள் அப்படி சொல்லிக் கொள்ளலாம்.  ஆனால் என் கருத்து அதுதான்” என்பேன்.) எப்போதும் சிரித்த முகம்.  நகைச்சுவைப் பேச்சு.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்றே தெரியாதபடி அவ்வளவு அடக்கம்.  அவரால் யாரையும் வசீகரித்து விட முடியும்.  ஜெயமோகனிடம் அவர் பத்து நிமிடம் பேசினால் ஜெ. சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துக்கு வந்து விடுவார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த அளவுக்கு எதிராளியைத் தன் பேச்சால் வசியம் செய்து விடுவார்.  அவர் மட்டும் இலக்கிய ஆர்வம் உள்ளவராக இருந்திருந்தால் இந்நேரம் நான் இருக்கும் இடமே வேறு.

நேற்று அவரிடம் நான் தர வேண்டிய 50,000 ரூபாயில் 25000 ரூபாயைத் திருப்பிக் கொடுத்த போது வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.  எனக்குப் பணம் வேண்டாம்; பொருள்தான் வேண்டும் என்று சொல்லி வற்புறுத்திக் கொடுத்தேன்.  என்ன பொருள்?  இஸ்தம்பூலுக்கு ஒரு டிக்கட்.  ”உங்கள் பிறந்த நாள் பரிசாகத் தருகிறேன்” என்று சொல்லி விட்டுத்தான் பணத்தை வாங்கிக் கொண்டார்.  மீதி அப்புறம் தருகிறேன் என்றேன்.  முறைத்தார்.  அன்பின் மொத்த வடிவம் ராமசுப்ரமணியன்.

டாக்டர் சிவகடாட்சத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.  இதுவே வேறு மருத்துவர்களாக இருந்தால் நாலு ஸ்டெண்ட் வைக்க வேண்டும் என்று நாலு லட்சம் கறந்திருப்பார்கள்.  அது தவிர எக்ஸ்ட்ரா செலவு மூணு லட்சம்.  மொத்தம் ஏழு லட்சம் பழுத்திருக்கும்.  டாக்டர் சிவகடாட்சம் நோயாளிகளுக்கான மருத்துவர்.  அற்புதமான மனிதர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்றைய தினம் எனக்காக ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை மருந்து வாங்கவும் – ஒரு ஊசி 700 ரூ – ஓடவும் பணி புரியவும் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.  (பிறகு தெரிந்து கொண்டேன்.)  அராத்து, செல்வகுமார், கருப்புசாமி, கணேசன் அன்பு, சுப்ரமணியன், ப்ரவீண், ஸாம், கணேஷ் ராம் மற்றும் பல நண்பர்கள் வந்திருந்தார்கள்.  அராத்துவும் செல்வகுமாரும் மற்ற நண்பர்களும் மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு சர்விஸ் அபார்ட்மெண்ட் எடுத்து இரவு பகலாக என்னை கவனித்துக் கொண்டனர்.  முதல் நாள் நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் வெளியே என்ன நடக்கிறது என்று யோசனையே இல்லை.  மருந்தும் ஊசியும் ஏதோ மருத்துவமனையிலேயே போடுகிறார்கள் என்றே நினைத்தேன்.  பிறகுதான் தெரிந்தது, இதையெல்லாம் வெளியே அமர்ந்திருந்த நண்பர்கள் தான் ஓடி ஓடி வாங்கி வந்தார்கள் என்பது.  நாள் பூராவும் மருத்துவமனை வராந்தாவிலேயே காத்திருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.  இதை பத்துப் பதினைந்து நண்பர்கள் முறை வைத்து செய்திருக்கிறார்கள்.  பணம் வேறு தண்ணீராக செலவாகி இருக்கிறது.  ஒரு ஊசி 800 ரூ.  இப்படிப் பல ஊசி போட்டார்கள்.

பாரதிராஜாவுக்கு வந்த பிறகு என்னை இரவு பகலாக உடன் இருந்து கவனித்துக் கொண்டவர்கள் இருவர்.  ஸாம் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் சாமிநாதன், இம்மானுவல்.  இந்த இம்மானுவலை இப்போதுதான் முதல்முதலாகப் பார்க்கிறேன்.  முகநூலில் விஷயம் அறிந்து அலுவலகத்துக்கு மூன்று நாள் விடுப்பு எடுத்து விட்டு வந்து பகல் முழுவதும் என்னோடு இருந்தார்.  அப்போது நான் மிகவும் பலகீனமாக இருந்தேன்.  மூச்சு விடும் போது முனகியபடியே இருந்தேன்.  அரை மணிக்கு ஒருமுறை பசித்தது.  பழச்சாறு வேண்டும்.  மருந்து வாங்க ஓட வேண்டும்.  இளநீர் வாங்க ஓட வேண்டும்.  எல்லாம் இம்மானுவல்.  இரவிலும் அடிக்கடி பசித்தது.  ஸாம் நான் புரண்டு படுத்தாலே எழுந்து விடுவார்.  பசிக்கும் போதெல்லாம் – நள்ளிரவில் – பழச்சாறு பிழிந்து கொடுப்பார்.  மாதுளையை உரித்துக் கொடுப்பார்.

எழுதி என்ன சம்பாதித்தோம் என்று நான் அடிக்கடி விரக்தியில் இந்தப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  இத்தனை நண்பர்களை என் மகன்களாகப் பெற்றிருக்கிறேன்.  இது எத்தனை நோபல் பரிசுக்கும் ஈடாகாது.   இவ்வளவுக்கும் இம்மானுவல் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் என் எழுத்தைப் படிக்கிறாராம்.  ஒருநாள் ஒரு புத்தகச் சந்தையில் “எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது” என்ற வித்தியாசமான தலைப்பைப் பார்த்து அதை வாங்கியிருக்கிறார்.  ட்ராகுலா கடித்து விட்டது.  என்னோடு பழகியிராத, எனக்குக் கடிதம் கூட எழுதியிராத ஒரு இளைஞர் எனக்காக அலுவலகத்தில் மூன்று நாள் விடுப்பு எடுத்து விட்டு பகல் பூராவும் என் அருகிலேயே அமர்ந்து சேவை செய்ய வேண்டுமானால்…  எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.  என் எழுத்துக்காக உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.  இந்தத் தமிழுக்கு நன்றி.

பாரதிராஜாவில் மேலும் பல நண்பர்கள் என்னை வந்து சந்தித்தனர்.  உதவிகள் செய்தனர்.  நேரில் வந்து பார்த்த மாலனுக்கும் அந்திமழை அசோகனுக்கும் நன்றி.  லக்ஷ்மி சரவணகுமார், அருண், கார்த்திக் வெங்கட்ராமன், கிருஷ்ணமூர்த்தி, அரக்கோணம் கோபால், தர்மசேனன், மனோஜ், மனோஜின் மனைவி அனைவருக்கும் நன்றி.  இயக்குனர் வசந்த பாலனுக்கு விசேஷமான நன்றி.  அவர் படங்களை எவ்வளவோ விமர்சித்திருக்கிறேன்.  அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் வந்து பார்த்தார்.  பெருந்தன்மையால் அவர் என்னை வென்று விட்டார்.  அதேபோல் வீட்டுக்கு வந்து பார்த்து என்னை வென்று விட்ட குமரகுருபரன்.  அற்புதமான மனிதர்.   கோபமா என்றேன்.  ”அப்பா மீது பிள்ளை கோபம் கொள்ள முடியுமா சாரு?”  குமரகுருபரனின் பதில்.  (எங்கே வாங்கினீர்கள் அந்தப் பழங்களை, குமார்?  இவ்வளவு செழிப்பான, ருசியான பழங்களை நான் சென்னையில் பார்த்ததில்லை.  உங்கள் கவிதைகளைப் போலவே இனிமை.)   எழுத்தாளனுக்கு இணையாக வேறு யாரையுமே சொல்ல முடியாது. எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நேரில் வந்து என்னோடு பல மணி நேரம் உடனிருந்த விமலாதித்த மாமல்லனுக்கு நன்றி.  (கை கொடுத்ததும் முறைத்து விட்டுப் போன நடிகர் ஞாபகம் வருகிறார்.) ஜெயமோகனும் வெளியூரிலிருந்த பத்ரியும், ராவ் அவர்களும்  ஃபோனில் விசாரித்தார்கள். அவர்களுக்கும் நன்றி.  தோஹாவிலிருந்து நிர்மல், ஜெகா, வியட்நாமிலிருந்து கோபால், சவூதியிலிருந்து கார்ல் மாக்ஸ் ஆகியோருக்கும் நன்றி.   சிகாகோவிலிருந்து விடுமுறையில் வந்திருந்த அருள் வீடு தேடி வந்து பார்த்தார்.  அவரோடு வந்திருந்த விஷ்ணு.

திரும்பவும் ராமசுப்ரமணியனுக்கும் மருத்துவர் சிவகடாட்சம் அவர்களுக்கும் நன்றி.  உயிரை மீட்டுக் கொடுத்தவர்களுக்கு நன்றி என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது.  ஆனாலும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது?

இன்னும் பல நண்பர்களின் பெயர் விடுபட்டிருக்கும்.  மருந்து மாத்திரைகளால் ஒருவித அரை மயக்க நிலையிலேயே இருந்தேன்.  விடுபட்ட நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.  பூங்கொத்து அனுப்பிய கீதாவுக்கும் நன்றி.  அந்தப் பூங்கொத்தை மருத்துவமனையில் பணி புரிந்த அத்தனை நர்ஸ்களும் மற்ற பெண் ஊழியர்களும் வந்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.  பெண்களை இந்தப் பூ தான் எவ்வளவு கவர்கிறது என்று நினைத்து நினைத்து ஆச்சரியம் அடைந்தேன்.  அந்தப் பூங்கொத்தைப் பார்த்த பெண்கள் அனைவருமே அது பற்றி ஒரு நிமிடம் பேசாமல் போனதில்லை.

மொத்தம் இரண்டு லட்சம் ஆனது.  ஐந்தே நாள்.  மொத்த செலவையும் நண்பர்கள்தான் ஏற்றுக் கொண்டனர்.  யார் யார் எவ்வளவு கொடுத்தனர் என்ற கணக்கு கூட எனக்குத் தெரியவில்லை.  இனிமேல் நான் ஒவ்வொரு மாதமும் சாப்பிட வேண்டிய மாத்திரை 5000 ரூ. ஆகும்.  இதற்குத்தான் அலோபதியின் பக்கமே போகாமல் இருந்தேன்.  ஆனாலும் என்னுடைய ரத்தத்தின் தீவிர அடர்த்தி என்னை அதற்கு அனுமதிக்கவில்லை.   ஒரு வருடம் இப்படிச் சாப்பிட வேண்டும்.  மற்றபடி இந்த நிமிடமே இமயமலை ஏறலாம் என்ற அளவுக்கு உடல்நிலை குணமாகி விட்டது.

ஒரு நண்பர் கேட்டார், அப்படியானால் நீங்கள் சாப்பிட்ட கடுக்காய்க்கு எல்லாம் ஒரு பயனும் இல்லையா?  இருந்தது.  அந்தப் பயனால் எனக்குத்தான் எந்தப் பயனும் இல்லை.  கையில் மயக்க ஊசி போட்டு ஆஞ்ஜியோகிராம் செய்து வெளியே அனுப்பிய மறு கணம் உடம்புக்கு மத்தியில் நட்டுக் கொண்டு நின்றது.  சுஜாதா எழுதிய ஜோக் தான் நினைவுக்கு வந்தது.  அடச்சே, வாட் அ லைஃப் என்று நொந்து கொண்டேன்.  ஒருக்களித்துப் படுத்து மறைக்கப் பார்த்தால் கொஞ்ச நேரம் ஒருக்களித்துப் படுக்காதீர்கள் என்று தடுத்து விட்டது மலையாள தேவதை. மிகவும் லஜ்ஜையாகப் போய் விட்டது.

சீரியஸாக பதில் சொல்லுங்கள் என்றார் நண்பர்.  நான் எடுத்துக் கொண்ட மூலிகைகள் தான் என் உயிரைக் காப்பாற்றியது.  ஐந்தாம் நாள் மருத்துவமனையிலிருந்து வந்தேன்.  முற்பகல் பதினோரு மணி.  அவந்திகா எனக்கு அவசரமாக மருந்து வாங்கப் போய் விட்டாள்.  எங்கேயும் கிடைக்கவில்லை என்றும் தி.நகர் போய் வாங்கி வருகிறேன் என்றும் போன் செய்தாள்.  பனிரண்டுக்கே பசி உயிர் போயிற்று.  ஆனால் அதற்குள் நான் பாதி சமையலை முடித்து விட்டேன்.  ஆமாம், இப்படி ஆகும் என்று தெரிந்து பதினோரு மணிக்கே சமையலை ஆரம்பித்து விட்டேன்.  இந்தத் தெம்பை நான் சாப்பிட்டு வரும் மூலிகைகள் தான் கொடுத்தன.  இப்போது என் உடம்பு பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டேன்.  இனி ஒருமுறை இப்படி நடக்காது.  வெள்ளரி பழுத்த பிறகே பூ விழும்.

ஒரு சங்கடமான பின்குறிப்பு: இனி என் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டுமானால் பணம் வாங்குவேன் என்று எழுதினேன்.  பலரும் திட்டியிருக்கிறார்கள்.  எனக்கு அதைப் பற்றிக் கவலையே இல்லை.  நண்பர்கள் மட்டும் இல்லாவிட்டால் இத்தனை செலவையும் யார் பார்ப்பது?  பத்திரிகையில் எழுதினால் கிடைக்கும் ஆயிரத்தையும் ரெண்டாயிரத்தையும் வைத்துக் கொண்டு புல் புடுங்குவதா?  மாதாமாதம் மாத்திரை வாங்க 5000-க்கு எங்கே போவது?  சேட்டன் பகத்தின் குப்பை வெளிவந்த ரெண்டே வாரத்தில் இருபது லட்சம் விற்று விட்டது.  ராயல்டி கணக்குப் போட்டேன்.  நாலு கொடி ரூபாய்.  அப்படி சம்பாதிக்கும் ஆள் ஒரு கையெழுத்துக்கு 500 ரூ வாங்குகிறார்.  எனவே நான் ஒரு கையெழுத்துக்கு 5000 ரூ வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.  அட, பத்து பேர் தான் சாரு அப்படி வாங்குவாங்க என்றார் அராத்து.  சரி, அதுவே ஐம்பதாயிரம் ஆயிற்றே?

இதெல்லாம் ஏன் என்றால், எட்டு கோடி பேர் வாழும் தமிழகத்தில் ஒரு நாவல் ரெண்டாயிரம் மூவாயிரம் பிரதி விற்பதால்தான்.  குறைந்த பட்சம் 50,000 பிரதி போனால் நீங்கள் காண்பிக்கும் பஸ் டிக்கட்டின் பின் பக்கத்தில் கூட கையெழுத்துப் போடுவேன், இலவசமாக.  (இத்தனை காலமும் அப்படித்தான் போட்டுக் கொண்டிருந்தேன்.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.