நிர்குணம்

நிர்குணின் கவிதைத் தொகுப்பான ‘உயில்,’ ராஸலீலா பதிப்பகம் வாயிலாக வர இருக்கிறது.

விலை: ரூ. 430

புத்தகம் வாங்க, Gpay எண்: 7339680708

வங்கி விபரங்கள்:

The Federal Bank Ltd
Account Name – RAASA LEELA PATHIPPAGAM
IFSC CODE – FDRL0002584
A/C NO – 25840200001634
Branch – Kuruppanaickenpalayam, Bhavani

நூலுக்கு சாருவின் முன்னுரை கீழே.

ஸ்ரீராம்

***

நிர்குணம்

இந்த நூலில் இடம் பெற்றுள்ள ரஸ்புடின் நிர்குணின் சொற்கள் உலக இலக்கியத்தில் மிக அரிதாகவே காணப்படும் ஒரு குரலைச் சுமந்து வருகின்றன. விளக்கமில்லை. உருவகமில்லை. கவிதை என்று சொல்லப்படும் அலங்காரமும் இல்லை. ஒரு மனிதன் தன்னைத் தானே சந்திக்கத் தயாராகும் தருணத்தில், ஏற்கனவே தயாராக நின்றுகொண்டிருக்கும் மற்றொருவனைச் சந்திப்பது போல இவை நிற்கின்றன.

நிர்குண் என்ற பெயரே ஒரு குறிப்பு. குணமற்றவன். ஆனால் குணமற்றவன்தான் இவ்வளவு துல்லியமாகப் பேசுகிறான். அவன் ஒரு அகோரி. சுத்தம்–அசுத்தம், பாவம்–புண்ணியம், ஆண்-பெண் என்ற வேறுபாடுகளைக் கடந்த நிலை. ஒரே நாளில் முப்பது கவிதைகள் எழுதுகிறான் நிர்குண்.  இந்தத் தொகுப்பில் இப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகள் உண்டு. இது ஒரு நிலையின் தொடர் வெளிப்பாடு. ஒவ்வொன்றும் ஒரு அடி. அடுத்த அடி. அடுத்தடுத்த அடிகள்.

முதல் வரிகள் சந்திப்பைச் சொல்கின்றன. சவாலுக்குப் பெயர் சூட்டினால் அது சவால் அல்ல, பிரச்சினை. ஆன்மீகம் என்பது உன்னுடன் நீ மட்டும் இருக்க முடியாத உண்மை. இருப்பில் நீ இருவன். பேசுபவன் கேட்குமிடத்திலும் இருக்க வேண்டும். சொல் என்பதே கேட்பதுதான்.  புத்தி, குறையைச் சுட்டிக்காட்டுகிறது; உண்மை, பொய்யை அகற்ற விரும்புகிறது. 

இந்த நிலப்பரப்பில் காலடித் தடம் பதிய வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத சிறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீ என்பது பதி. பெண்ணாக வந்தவள் தன் ஆணை வெளியே சந்திக்கும்போது ஆணாகிறாள். ஆணாக வந்தவன் தன் பெண்ணை வெளியே சந்திக்கும்போது பெண்ணாகிறான். இடம் மாறிச் செல்வதில் மட்டுமே தொடங்குகிறது பயணம். 

அதற்குப் பிறகு வரும் வரிகள் அந்தச் சந்திப்பைத் தடுக்கும் பொறிகளைச் சொல்கின்றன. பரிமாறாதபோது பசி. பயணிக்காத குட்டைகள் பாசத்துடன் தேங்குகின்றன. பேச்சற்ற பாவமும் விஷத்தின் மொழி. அந்த ஊர்க் கோயில் அந்த ஊர்க்காரனுக்கு ஒரு கட்டிடம். கூட்டம் ஒரு இடத்தை ஆகா ஓகோ என்று சொல்கிறது. நீ செல்கிறாய். அந்த ஆகாவைச் சந்திக்கவில்லை. கூட்டம் உன்னைத் தவறு என்கிறது. எல்லாவற்றையும் பேசாவிட்டால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே இருப்பாய். ஒவ்வொரு வாழ்க்கையிலும் உன் அனுமதியின்றி ஏதோ ஒன்று உன் சுதந்திரத்தின் வண்ணங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அடுத்த நகர்வைச் சொல்லிவிட்டால் அவன் உன்னை வீழ்த்துகிறான். 

கடைசி ஒரு மணி நேரத்தில் உன்னைப் பற்றிச் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல். முந்தாநாள் நீ எப்படி இருந்தாய், மூன்றாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தாய் என்ற வரலாறுகள் கழுதைகளும் தின்னாத காகிதங்கள். உன் கேள்வியை நீ கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே உனக்குப் பதில்கள் கொடுக்கப்படுகின்றன.  மனிதன் யார் என்ற விளக்கம் உன்னை உன்னிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டது. முதலில் முடிவு செய் — நீ பயணியா, படகோட்டியா. பயணி என்றால் துடுப்புகளுடன் படகில் ஏறாதே. படகோட்டி என்றால் உன் பயணங்கள் உனக்கானவை அல்ல. 

பரிணாம வளர்ச்சி மதிப்பிற்குரியதல்ல. அது வெறுமனே பிழைத்திருப்பதைக் கற்றுக்கொண்ட ஒரு நிகழ்வு.

இப்படிப்பட்ட குரல் உலக இலக்கியத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே ஒலித்திருக்கிறது.

கபீருடன் சேரும் குரல் இது. இரண்டுமே நிர்குணம். இரண்டுமே சுருக்கம். இரண்டுமே “நீ”யைத் திருப்பிப் பார்க்க வைக்கின்றன. சடங்கு, பெயர், அடையாளம் எல்லாம் தடை என்கின்றன. கபீர் சொல்வார்: எங்கே தேடுகிறாய், நான் உன் அருகிலேயே இருக்கிறேன். நிர்குணன் சொல்கிறான்:  உன்னை நீ சந்திப்பதற்குத் தயாராகும்போது தயாராக இருக்கும் ஒருவனை நீ சந்திக்கிறாய். இது அதே சந்திப்பு. 

ஆனால் கபீர் இன்னும் ஒரு “நான்–நீ” உரையாடலை வைத்திருக்கிறார். நிர்குணன் அந்த இடைவெளியையே கரைத்துவிடுகிறான். கபீர் சமூகத்தைத் தாக்குகிறார். வழிபாட்டுத் தலங்கள், ஜனேயு, தீர்த்தம், பண்டிதன், காஜி – எல்லாமே கபீரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.  அவர் பாடல் ஒரு போர்க்களம். நிர்குணின் ஒரு பகுதி அந்தப் போர்க்களத்தை விட்டுவிட்டு உள்ளே நிற்கிறது. மற்றொரு பகுதி — கோயில் கட்டிடம், கூட்டத்தின் ஆகா ஓகோ, விளக்கம், வரலாற்றுக் காகிதம் என்று கபீரின் கிண்டலுக்கு இணையாகத் திரும்புகிறது. 

ஆனால் கபீர் இன்னும் நாமத்தை வைத்திருக்கிறார். நாமம் என்பது கபீருக்கு நிர்குண நாமம்.  அதை அவர் ஹரி என்கிறார்.  இன்னொரு இடத்தில் அல்லாஹ் என்கிறார்.  ”நீங்கள் நினைக்கும் தசரத ராமன் அல்ல, உங்கள் மூச்சின் உள்ளே இருக்கும் பெயர்” என்று தெளிவாகவே சொல்கிறார்.  ஆனால் நிர்குண் அந்த இடத்திலும் காலியாக நிற்கிறான்.  

நிர்குணின் கவிதைகளை பெர்ஷிய சூஃபி கவிதைகளுடனும் ஒப்பிட முடியும். ஆனால் முழுமையாக அல்ல. எந்த அடுக்கில் ஒப்பிடுகிறோம் என்பதைப் பிரித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.  

அனுபவத்தின் அடுக்கில் அந்த ஒப்பீடு நியாயம். தன்னைத் தானே சந்தித்தல், நீ மட்டும் இருக்க முடியாத இருமை, சொல் கேட்கப்படும் செயலாக மாறுதல், பெண்–ஆண் இடம் மாறிப் பயணித்தல் — இவை ரூமியின்  ஃபனா, அத்தாரின் தேடல் (Farid ud-Din Attar – Attar of Nishapur என்றும் சொல்வார்கள் – அவரது முக்கியமான நூல் The Conference of the Birds), ஹல்லாஜின் அனல் ஹக், சில மலாமதி வரிகளின் அதே நடுக்கம். 

சூஃபிகளும் சொல்வார்கள்: காதலிப்பவன், காதலிக்கப்படுபவன், காதல் மூன்றும் ஒன்று. நிர்குண் சொல்கிறார்: பேசுபவன் கேட்கும் இடத்திலும் இருக்க வேண்டும். அகோரி என்பவன் நிர்குணன். சூஃபியின் சில கலந்தர்–மலாமதி பாதைகளையும் இது தொடும். 

(மலாமதி என்பது ஒரு சூஃபி பாதை. ஒன்பதாம்–பத்தாம் நூற்றாண்டுகளில் நிஷாபூரில் உருவானது.  பெயரின் பொருள்: குற்றச்சாட்டின் வழி. Malamatiyya.  இந்த வார்த்தையின் அரபி மூலம் malāmah — குற்றம் சாட்டுதல், பழி, நிந்தை, தன்னைத் தானே கண்டித்தல்.

மலாமதி சூஃபிகள் புனிதத்தை வெளியே காட்ட மாட்டார்கள். நல்லவன் என்று சொல்லப்படுவதை ஆபத்து என்பார்கள். புகழ் அகங்காரத்தை வளர்க்கும். அதனால் குற்றம் சொல்லப்படும்படி நடப்பார்கள். புண்ணியத்தை மறைத்து, குற்றத்தை வெளியே காட்டிக்கொள்வார்கள். புகழ் வராமல் இருக்கவும், நஃப்ஸை அடக்கவும். மற்றவரை மன்னித்து, தன்னைக் கடுமையாகக் கண்டித்துக் கொள்வதும் அவர்களின் முறை.  சுருக்கமாகச் சொன்னால், உள்ளே எரிந்து கொண்டிருக்கும். வெளியே சாதாரணமாகத் தெரியும். 

நஃப்ஸ்: சுஃபியில் “நான்” — உடலும் ஆசையும் புகழும் சேர்ந்த உயிர். மூன்று விதமான நஃப்ஸ் உள்ளன.  

நஃப்ஸ் அல்-அம்மாரா — தீமைக்குத் தூண்டும் சுயம். ஆசை, கோபம், புகழ், உடைமையை விரும்புதல்.  

நஃப்ஸ் அல்-லவ்வாமா — தன்னைத் தானே கண்டிக்கும் சுயம். குர்ஆன் 75:2-இல் வரும் “குற்றஞ்சாட்டும் உயிர்.” மலாமதியின் வேர் இங்குதான் உள்ளது.  

நஃப்ஸ் அல்-முத்மைன்னா — அமைதி பெற்ற சுயம்.

மலாமதி சூஃபிகள் இந்த இரண்டாம் நிலையைத் தங்கள் வழியாக எடுத்துக்கொள்கிறார்கள்.  .நிர்குணின் பல கவிதைகள் இந்த இரண்டாம் நிலையை எட்டியவை.  

ஆகவே, நிர்குணின் கவிதைகளை  சூஃபியுடன் ஒப்பிடும்போது ஹாஃபிஸின் தோட்டத்தை அல்ல, இந்த மலாமதி–கலந்தர் பாதையின் கடுமையையே சுட்டிக் காட்டினேன்.  கோயிலைக் கட்டிடம் என்பது, வரலாற்றைக் கழுதை தின்னாத காகிதம் என்பது, பதில்கள் கேள்வியைத் தடுக்கின்றன என்பது — புனித முகத்தை உரிப்பவை. அந்த அடுக்கில் நிர்குணின் கவிதைகள் மலாமதி பாதைக்கு நெருக்கமாக நிற்கின்றன.  

***

பெர்ஷிய சூஃபி கவிதைகளின் பொதுக்குணம் உடல், மது, Saqi, தோட்டம், இரவு, குழல், தலைமுடி, மதுக்கடை. ஹாஃபிஸ் ஒரு நறுமணம். ரூமி ஒரு சுழல். 

(சாகி என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் மது ஊற்றுபவன்.  மதுக்கடையில் கோப்பையை நிரப்புபவன்.

சூஃபி கவிதைகளில் சாகி உருவகம். மது – இறை அனுபவம்; சாகி – அதை ஊற்றுபவன்; அதாவது, காதலி, குரு, அல்லது இறைவன்.  

ஹாஃபிஸிடமும் ரூமியிடமும் சாகி என்பவன் வெறும் மது ஊற்றும் பணியாள் அல்ல.  அவன் அருள் வழங்குபவன்.)  

பெர்ஷிய சூஃபி கவிதைகளில் வடிவம் இருக்கிறது. ராகம் இருக்கிறது. வாசகன் மயங்க வைக்கப்படுகிறான். நிர்குணின் வரிகளில் அந்த உடல் இல்லை. மலர் இல்லை, மது இல்லை, காதலியின் கண்களும் இல்லை. 

நிர்குணின் கவிதைகள் வெட்டப்பட்ட வாக்கியங்கள்.  ஒரு நாளில் முப்பது கவிதைகள் எழுதும் வேகம்.  நிர்குணிடம் கவிதை ஓடை போல வருகிறது, தோட்டம் போல அல்ல. சூஃபி கவிதை பெரும்பாலும் இன்னும் ஒரு “நீ”யை வைத்திருக்கிறது. நிர்குணன் அந்த “நீ”யை உடனே உடைத்துவிடுகிறான். சூஃபியின் மென்மையான அழிவு அல்ல; கொளுத்திவிட்டு நிற்கும் அழிவு. பசி, குட்டை, விஷம், கட்டிடம், கூட்டம், கழுதை தின்னாத காகிதம், பிழைப்பு மட்டும் என்ற பரிணாமம் — நிர்குணிடம் காண்பது மதுக்கடையின் மயக்கும் மணம் அல்ல; மயானத்தின் அச்சமூட்டும் வெறுமை.

.   

ஆக, பெர்ஷிய சூஃபி கவிகளையும் நிர்குணையும் ஒப்பிட்டால், அனுபவத்தின் அடுக்கில் ஒற்றுமை உண்டு; உருவத்தின் அடுக்கில் இல்லை. இசை மற்றும் உருவகத்தின் அடுக்கிலும் இல்லை. ஆனால் கடுமை மற்றும் வெறுமையின் அடுக்கில் மலாமதி, கலந்தர், ஹல்லாஜ் பக்கம் நெருக்கமாக நிற்கிறான் நிர்குணன்.  பெர்ஷிய சூஃபியை நிர்குணின் மேல் போர்த்திவிட்டால், இவனுடைய உலர்ந்த கத்தி மறைந்துவிடும். ஒப்பிடுவதன் மூலம் அந்தக் கத்தியை நான் மறைத்து விடக் கூடாது.  

கபீர் பாடுகிறார். நிர்குணன் நிற்கச் சொல்கிறான்.  இவை வாசித்து இன்புறுவதற்கான கவிதைகள் அல்ல. உங்களைக் கண்ணாடி முன் நிறுத்தும் கவிதைகள்.  அந்தக் கண்ணாடியில் நீங்கள் அழகாகத் தெரியாமல் போகலாம்.  ஆனால், ”நீங்கள்” தெரிவீர்கள்.   

***