தியாகராஜா – ஒரு புதிய விவரம்

தியாகராஜா நாவல் வடிவமைப்பு நிலையில் உள்ளது. அது என் கைக்கு வந்ததும் ஒருமுறை பிழைதிருத்தம் பார்த்து விட்டு அச்சகத்துக்குக் கொடுக்க வேண்டியதுதான். அநேகமாக செவ்வாய்க்கிழமை அச்சுக்குப் போய் விடும்.

900 பக்கங்கள். அத்தனை பக்கமும் ஒரே நூலாக இருந்தால் எடுத்துப் படிப்பது கடினம். தடித்த அட்டை. தாள்களும் கெட்டி. அதனால் இரண்டு தொகுதிகளாகப் போடலாம் என்பது அச்சகத்தாரின் ஆலோசனை. அதன்படி இரண்டு தொகுதிகளாக ஒரு அட்டைப் பெட்டிக்குள் போட்டுக் கொடுக்கப்படும். இதற்குக் கொஞ்சம் அதிக செலவு எடுக்கும். முதலில் நான் 600 பக்கம் என்று சொல்லியிருந்தேன். இப்போது 900 பக்கம். இரண்டு புத்தகம். இரண்டுமே கெட்டி அட்டை. க்ளாத் பைண்டிங். அட்டைப் பெட்டி வேறு. இதற்கிடையில் தியாகராஜரின் மிக முக்கியமான காஞ்சீபுரம் அனுபவங்களைச் சேர்க்கவில்லை. சேர்த்திருந்தால் ஆயிரம் பக்கம் போயிருக்கும். நாகப்பட்டின அனுபவத்தைச் சேர்த்திருக்கிறேன். அது ஒரு அதகளமான பகுதி. கவி காளமேகத்தையே கதற அடித்த ஊர். தியாகராஜர் சாத்வீகி. மற்றதை நாவலில் பார்த்துக்கொள்ளுங்கள்.

விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழில் ஒரு முக்கியமான நாவல் வெளிவந்தது. ஒரு புரவலர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பிரதிகளை வாங்கி பலருக்கும் இலவசமாகக் கொடுத்தார். அவர் இன்று இல்லை. வேறு யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை.

அட்டைப் படம் இரண்டு இருந்தது அல்லவா? அதில் பாதிப் பேர் செவ்வியல்ரீதியாக வரையப்பட்டதை விரும்பினார்கள். மீதிப் பேர் நவீனமாக வரையப்பட்ட ஓவியத்தை சிலாகித்தார்கள். ஆனால் ஜஸ்பீர் கௌர் வரைந்ததைப் போட்டால் அதில் embossing செய்ய இயலாது என்றார் அச்சக நண்பர். அதனால் இரண்டு தொகுதிக்குமே முதலில் வந்த ஓவியத்தையே பயன்படுத்த முடிவு செய்தேன். ஆனால் அதில் இருந்த ராமர் சீதா ஹனுமன் படங்களை நீக்க வேண்டியதாயிற்று. இரண்டு காரணங்கள். புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள் இதை ஒரு இலக்கிய நூலாக அன்றி, ஒரு பக்தி நூலாகக் கருத இடமிருக்கிறது. அது அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். இன்னொரு காரணம்தான் மிக முக்கியமானது. தியாகராஜரின் வாழ்வும், கீர்த்தனைகளும் ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை அல்ல. நாகப்பட்டின அனுபவத்தையும், ராமனிடம் அவர் மேற்கொள்ளும் சில உரையாடல்களையும் பார்த்தாலே தெரியும். அந்த உரையாடலில் ஒன்றைத்தான் பின்னட்டையில் என் கையெழுத்தில் கொடுத்திருக்கிறேன். அந்தக் கீர்த்தனை கிட்டத்தட்ட நிகாராகுவா கவிஞன் ரிகபர்த்தோ லோபஸ் பெரஸ் எழுதிய கவிதை போல் இருக்கும். அத்தனை பரிமாணங்கள் கொண்ட தியாகராஜரின் வாழ்வை ஒற்றைப் பரிமாணத்தில் அடைக்கக் கூடாது என்பதால் அந்த ஓவியத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

சுமாராக இன்னும் பதினைந்து தினங்களில் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும். இந்த நாவலை இதுவரை வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக் கூட படித்திராதவர்கள் கூடப் படிக்கலாம். ஒரே பிரச்சினை. பக்கங்கள். நான் முந்நூறு பக்கத்தில்தான் எழுதத் திட்டமிட்டேன். தியாகராஜர் 900 பக்கங்களுக்கு இழுத்துக்கொண்டு போய் விட்டார். நீளத்துக்கு நான் காரணம் அல்ல.

நாவலில் விவரப் பிழைகள் இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன். நாவலின் கடைசிப் பக்கத்தில் உள்ள Bibliographyயைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். அதையும் மீறி பிழைகள் தென்பட்டால் சுட்டிக்காட்டுங்கள். அடுத்த பதிப்பில் திருத்தி விடலாம். ஆனால் ஒன்று. நன்கு ஆய்வு செய்து விட்டுச் சொல்லுங்கள்.

அடுத்த நாவலை எழுத ஆரம்பித்து விட்டேன் என்ற நற்செய்தியையும் இங்கே பதிவு செய்கிறேன்.

தியாகராஜாவுக்கு உங்கள் முழு ஆதரவையும் கோருகிறேன். 500 பிரதி போடலாமா என்று கேட்டார் வர்ஷா. 1000 என்று சொல்லி விட்டேன். உங்கள் மீதான நம்பிக்கையில்.

நாவலின் புதிய அட்டை.