ஆங்கிலமா? தமிழா?

அன்புள்ள சாருவுக்கு,

முதலில் புதிய எக்ஸைல் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம்; விழாவுக்கு தருண் வருவதால் உங்கள் ஏற்புரை தமிழில் இருக்கமா அல்லது ஆங்கிலத்தில் இருக்குமா?  ஏன்யென்றால் உங்கள் எழுத்தை விட உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன். உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே வெகு தொலைவில் இருந்து வருகிறேன்.
நன்றி,
சத்தியமூர்த்தி.
அன்புள்ள சத்தியமூர்த்தி,
என் பேச்சு ஏற்புரை என்று இருக்காது.  ஏனென்றால் இது பாராட்டு விழா இல்லை.  புதிய எக்ஸைலின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகுதியை தருண் படித்து விட்டார்.  அடுத்து, Morgue Keeper கிண்டில் எடிஷன்.  ஸீரோ டிகிரியை ஆரம்பத்திலேயே படித்து விட்டார்.  இதுகள் பற்றிப் பேசலாம்.  என்ன பேசுவார் என்று தெரியாது.  ஆனால் இது தருணின் பிரஸ் மீட் அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
நெல்சன் சேவியரின் பேச்சை பல கூட்டங்களில் கேட்டிருக்கிறேன்.  அவரிடம் ஒரு நல்ல பகுப்பாய்வு முறை இருக்கிறது.  பேச்சும் பிரமாதமாக இருக்கிறது.  அராத்து புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் நெல்சனின் பேச்சு தான் சிறப்பாக இருந்தது.
நான் தமிழ் இலக்கியச் சூழல் குறித்து சில விஷயங்கள் பேசலாம் என்று இருக்கிறேன்.  அடுத்து, வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுவேன்.  தருண் பற்றிப் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் பேசுவேன்.  மற்றபடி தமிழ் தான்.
பொதுவாக என் கூட்டங்களில் யாராவது ஒருவர் குடித்து விட்டு மேடையில் வந்து உளறும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.  நான் குடிக்கும் பழக்கம் உள்ளவனாக இருந்தேன் என்பதால் ஒழுங்கீனன் என்று அர்த்தப்படுத்திக் கொண்டதால் வந்த வினை.  குடிக்காதவர்களை விடவும் நான் ஒழுங்கைப் பேணுபவன்.  இப்போது கேட்கவே வேண்டியதில்லை.  இனிமேல் என் சந்திப்புகளில் யாரும் குடிக்கக் கூடாது என்று சொல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.   ஏனென்றால், கோவை சந்திப்பில் ஒரு நண்பர் குடித்து விட்டு வந்த போது அவர் பேசிய சத்தத்தில் என் செவிகளிலிருந்து குருதி வழிந்தது.  பொதுவாக இந்தியர்களே கத்திப் பேசுபவர்கள்.  அதில் தமிழர்களும் மலையாளிகளும் படு பயங்கரம்.  இதில் குடிக்கவும் செய்து விட்டால் முடிந்தது கதை.  நான் ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்பவன் என்று வெட்டி பந்தாவுக்காகச் சொல்லவில்லை என்பதை என்னோடு நெருங்கிப் பழகுபவர்கள் அறிவார்கள்.  குடித்து விட்டுக் கூட என்னால் கத்திப் பேச முடியாது.  இனி குடிப்பதில்லை என்பதால் மற்றவர்களின் சத்தத்தை என் செவிகள் தாங்க மாட்டேன் என்கிறது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  மேடையில் ஏறும் இடத்தில் இரண்டு பௌன்ஸர்கள் இருப்பார்கள்.  பார்வையாளர்களில் யாரும் இஷ்டப்படி மேடை ஏறுவதை அவர்கள் தடுப்பார்கள்.  வாஸ்தவத்தில் பார்வையாளர்கள் யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.  என் நெருங்கிய நண்பர்களில் யாரேனும் ஒருவர் தான் செய்வார்கள்.  அதற்குப் பெயர் கொண்டாட்டமாம்.  என் எழுத்து கொண்டாட்டத்தைக் கோருவதுதான்.  கொண்டாட்ட மனநிலையைத் தூண்டுவதுதான்.  ஆனால் கொண்டாட்டத்துக்கும் ரவுடித்தனத்துக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா?  ஒரு மாபெரும் விழாவில் குடித்து விட்டு வந்து மைக்கை அத்துமீறிப் பிடித்து உளறுவதுதான் கொண்டாட்டம் என்றால் அந்தக் கொண்டாட்டத்தையும் நான் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.  ஆனால் அந்தக் கொண்டாட்டத்தை உங்கள் மகளின் திருமண வைபவத்தின் போது ஆரம்பியுங்கள்.  அப்படிச் செய்யும் துணிவு இருந்தால் என் விழாவிலும் செய்யலாம்.  அராத்து ஒரு ஸ்ரீவைஷ்ணவராக இருந்தும் தன் கல்யாணத்தின் போது சவ ஊர்வலத்தின் போது பறை அடிக்கும் தலித் கலைஞர்களை அழைத்து பறைக் கொட்டு கொட்ட வைத்தார்.  இது கலகம்.  ஆனால் அவரே கூட தன்னுடைய விஷயத்தில் தான் கலகம் செய்வாரே தவிர என் விழாவில் வந்து கலகம் கலாட்டா புரச்சி கொண்டாட்டம் புண்டாட்டம் எதுவும் செய்ய மாட்டார்.  ஏன் இவ்வளவு கோபமாக எழுதுகிறேன் என்றால்  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் நாவல் வெளியீட்டு விழாவில் ஒரு நண்பர் தள்ளாத (?) குடிபோதையில் மேடையேறி மைக்கைப் பிடிங்கி அவர் பாட்டுக்கு உளற ஆரம்பித்து விட்டார்.  இம்மாதிரி அசம்பாவிதங்களைத் தடுக்கவே இரண்டு பௌன்ஸர்கள்.
மற்றபடி ஸாமும் நானும் வாசலில்  இருந்து பிரமுகர்களையும் எழுத்தாளர்களையும் வரவேற்று முதல் வரிசையில் அமரச் செய்வோம்.  கவலை வேண்டாம்.  காமராஜ் அரங்கில் நடந்த கடந்த இரண்டு புத்தக வெளியீட்டு விழாக்களையும் போல் இந்த விழாவுக்கும் எல்லோரும் திரளாக வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஜனவரி 5, திங்கள் கிழமை, மாலை ஆறரை மணி.  பேசுவோர்: தருண் தேஜ்பால், நெல்சன் சேவியர், சாரு நிவேதிதா.  ஒருங்கிணைப்பாளர்கள்: கண்மணி & அராத்து.
சாரு