புதிய எக்ஸைல் : அருண் ’தமிழ் ஸ்டுடியோ’ கருத்து

அன்பின் சாரு,
எனக்கு அனுப்பிய நாவலின் இந்தப் பகுதி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. சுவாரசியம் இல்லை என்று சிலர் சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை, சினிமாவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, சினிமாவை நேசிப்பவர்களுக்கு, இந்தப் பகுதி மிக சுவாரசியமாக இருக்கும். தவிர, சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றால் கூட, அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், இந்தி சினிமாக்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தெரிந்து கொள்ளவும் அவசியம் இதனைப் படித்தே ஆக வேண்டும். மிக நுட்பமான பல தகவல்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை சொல்கிறேன், கிதாரை சுதந்திரத்தின் குறியீடாக அன்றைய காலக்கட்ட இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக ஒரு வரி வரும். இன்றைக்கும் கூட கிதாரை அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் எனக்கு உண்டு.
தவிர ,தமிழ் இலக்கித்தில் புதிய படிமங்களை அதன் வாசகர்களால் கண்டு கொள்ளவே முடியாது. காரணம், தமிழ் இலக்கியம், ஒருவித தொய்வுத் தன்மையில் இருக்கிறது. நிகழ்காலத்தையும், வரலாற்றையும் அதன் வாசகர்களுக்கு எந்த வகையிலும் பதிவு செய்யமுடியாமல் தமிழ் இலக்கியம் திணறிக் கொண்டிருக்கிறது. புதிய படிமங்களை இந்த நாவலின் மூலம் உணரலாம் என்று நினைக்கிறேன். வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிக்கும் ஒரு கதாபாத்திரம், தலைவனுக்குப் பிறந்த நாள், அதனால் உன்னை சும்மா விடுகிறேன் என்கிற அவனது வாக்குமூலம், இதெல்லாம் நிகழ்காலத் தமிழ் சமூகத்தின் படிமங்கள். புதிய புதிய படிமங்களை உங்கள் நாவலில் பார்க்க முடிகிறது.
அப்போதெல்லாம் டைட்டிலில் ஷர்மிளா டாகூரின் பெயரைத்தான் முதலில் போடுவார்கள், தமிழில் இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து, ஒவ்வையாராக நடித்த, கே. பி. சுந்தராம்பாளின் பெயர் இப்படி போடப்படுவதாக நினைவிருக்கிறது. தவிர, அந்தக் காலத்தில் இவர்தான் முதலில் ஒருலட்சம் சம்பளம் பெற்ற ஒரே நடிகை.
அருண்
தமிழ் ஸ்டுடியோஸ்