ஜனவரி 5 விழாவுக்கு ஜெயமோகனை அழைத்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு ஜெயமோகன் எழுதிய கடிதமும் என் பதிலும். பொதுவாக நான் அந்தரங்கக் கடிதங்களை வெளியிடுவதில்லை என்றாலும் இது இலக்கியம் சார்ந்ததாக இருப்பதால் சற்றே எடிட் செய்து வெளியிடுகிறேன்; ஜெயமோகன் தவறாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன். ஜனவரி 5 விழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணனும், மனுஷ்ய புத்திரனும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் நால்வரையும் ஒருசேரப் புகைப்படம் எடுத்தால் அந்தப் புகைப்படம் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து பல லட்சங்கள் விலை போகலாம். இனி கடிதம்:
அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சாரு அவர்களுக்கு,
ஒரு தகவலுக்காகக் காத்திருந்தேன். அதுதான் தாமதம்
விழாவில் பர்வையாளனாகக் கலந்துகொள்வது எனக்கு உவப்பானதே. மேடையில் கலந்துகொள்வது இயலாது. காரணம் தெளிவு. நீங்களும் நானும் எப்படியோ இலக்கியத்தின் இரு பக்கங்களை நிரப்புகிறோம். யின் யாங் போல. அது இயல்பானது. உலகமெங்கும் அதுவே நிகழ்கிறது. இன்றைய சூழலில் இவை இரண்டில் ஒன்று இல்லாமல் இலக்கியம் இல்லை.
இன்றைய உலகச் சூழலில் எங்கும் நூல்களுக்கு பிரமோ தேவையாக உள்ளது. ஆகவே நாம் இந்த விழாக்களைச் செய்து வருகிறோம். [பிரமோ இல்லாமல் நூல் வெளியிடும் காலம் டிவி வந்ததும் முடிந்துவிட்டது’] அது பிரமோ என தெளிவு இருந்தால் சில பழைய சிற்றிதழ் விஷயங்களைச் செய்யமாட்டோம். அதாவது நூலை பாராட்டி வாங்க வைக்கும் நோக்கில் மட்டுமே அங்கே பேசப்படவேண்டும். .அது விமர்சனக் கூட்டமோ விவாதக் கூட்டமோ அல்ல. ஆகவே அழைப்பாளர்கள் அந்த நோக்கிலேயே இருக்க வேண்டும்
நான் பார்வையாளனாக கூடுமானவரை கலந்துகொள்ள முயல்கிறேன்.
விழா சிறப்பாக நிகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெ
21.11.2014.
dear j.,
தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். நான்கு தினங்கள் கோவையில் உள்ள டஸ்கர் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கியிருந்தேன். அங்கே இண்டெர்நெட் வேலை செய்யவில்லை. திரும்பி சென்னை வந்ததும் விழா வேலைகள்.
இதுவரை நீங்கள் எழுதிய கடிதங்களிலேயே இதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களை மேடையில் கலந்து கொள்ளச் சொல்லி தர்மசங்கடப்பட வைக்க மாட்டேன். விழாவில் கலந்து கொள்ளவே அழைத்தேன். மேடையில் கலந்து கொள்வது சாத்தியம் இல்லை என்பதை நானும் அறிவேன். ரஜினியும் கமலும் ஒரே படத்தில் நடிப்பது சாத்தியம் இல்லை என்பது போல அது. நாம் நண்பர்களாக இருந்தாலும் கடந்த 30 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் வாசித்தும் அறிந்தும் இருந்தாலும் நம் ரசனை துருவ வித்தியாசம் கொண்டது. வாசகர் வட்டத்தில் விளையாட்டாகப் பேசிக் கொள்வோம். ஒரு சினிமா எனக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கும். இவ்வளவுக்கும் நான் அது பற்றி எழுதியிருக்கவே மாட்டேன். உங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு எழுத்தாளரைச் சொல்லுங்கள் என்றால் நான் மரியோ பர்கஸ் யோசா என்பேன். நீங்களோ யோசா எனக்குப் பிடிக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். யின் யாங் தான். சந்தேகம் இல்லை.
ஆனாலும் ஒரு மூன்றாவது நபரின் விழாவில் நாம் இருவரும் மேடையில் சந்தித்துக் கொள்வது சாத்தியம்தான்.
ஐந்தாம் தேதி மதியம் சென்னையில் இருப்பது போல் பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
சரி, எப்படியும் உங்களை எதிர்பார்ப்பேன். உங்களை அழைத்திருப்பது பற்றி நான் யாரிடமும் சொல்லாமலேயே நீங்கள் புத்தகத்தை வெளியிடுவதாகவும் கமல் வாங்கிக் கொள்வதாகவும் வதந்தி பரவி இருக்கிறது. “கேள்விப்பட்டேன். உண்மையா?” என்று கேட்டார் மனுஷ்ய புத்திரன். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அன்புடன்,
சாரு.
27.11.2014.