சிம்பு, அநிருத் விஷயமாக நான் எழுதியிருந்த பதிவை ’தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்றைய தினம் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்துவுக்கு நன்றி. அதில் சிம்புவின் பதில் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கடவுள் இருக்கிறார். அவ்வளவுதான் சொல்ல முடியும். சினிமாத் துறையில் உள்ள சீனியர் நண்பர் ஒருவர் ஃபோன் செய்து, “காவாலித்தனம் என்றே தலைப்பு வைத்திருக்கலாம்” என்று சொன்னார். இவ்வளவு தூரம் சமூகத்தை சீரழிக்கும் நிலையிலும் யாரையும் புண்படுத்த மனம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது.
கார்ல் மேக்ஸ் பற்றி பல முறை நம் தளத்தில் எழுதியிருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் ஆதவனின் தொடர்ச்சி. முகநூலில் அவர் எழுதி வரும் பதிவுகள் அந்தக் காலத்து நிறப்பிரிகை கட்டுரைகளை எனக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஜெ. பற்றி அவர் முகநூலில் எழுதியிருந்த பதிவை விகடனில் பார்த்தேன். அப்படியே கருணாநிதி பற்றி அவர் எழுதியிருந்ததையும் சேர்த்துப் போட்டிருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும். இப்போது சிம்பு விவகாரம் பற்றி கார்ல் மேக்ஸ் பிரமாதமாக எழுதியிருக்கிறார். இதெல்லாம் தொகுக்கப்பட வேண்டும் கார்ல். இப்போதே இதையெல்லாம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேடுவது சிரமம். இனி வருவது கார்ல் மேக்ஸ் முகநூலில் எழுதியிருப்பது:
”என்னா **டைக்கு லவ் பண்றோம்”
ஆங்கிலத்திலும் மற்றைய மொழிகளிலும் இதை விட ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு நிர்ப்பபப்டுகிற பாடல்களை எளிதாகக் கடந்துவிடும் நாம், தமிழில் அத்தகைய ஒரு பாடலைக் கேட்கிறபோது ஏன் துணுக்குறுகிறோம்? ஒரு பாடலைப் பாடலாக மட்டுமேக் கடக்க முடியாமல் ஏன் அச்சமடைகிறோம்?
ஏனெனில் நம்மிடம் சினிமா என்பது நமது ரத்தத்தில் கலந்த ஒன்று. நமது சிந்தனை முறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அதன் வீச்சு உண்டு. நமது உடலின் ஒரு உறுப்பைப்போல சினிமா நம் வாழ்வின் முக்கியமான பகுதி.
ஆனால் நமது சினிமாக்கள் என்னவா இருக்கின்றன?? காதலையும், ஆண் பெண் உறவையும் அவை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்ற கேள்வியிலிருந்துதான், இத்தகைய பாடல்கள் ஏன் உருவாகின்றன என்ற இடத்துக்குப் போக முடியும்.
நம்முடைய சினிமாக்கள், காதலுக்கு வரும் புற எதிர்ப்புகளைப் பதிவு செய்த அளவுக்கு காதல் மனம் தனக்குள்ளே கொள்ளும் தத்தளிப்பை, அது கொள்ளும் அவ நம்பிக்கையை, தனக்குள்ளே செலுத்திக்கொள்ளும் வன்முறையை ஆராயும் திரைப்படங்களை உருவாக்கவே இல்லை.
ஏனெனில் இங்கு காதல் என்பது சமூகத்தோடு ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கிறது. சமூகம் என்றால் சாதியையும் கடுமையாக உள்ளடக்கிய சமூகம். ஆகவே நமது காதல் திரைப்படங்கள் கதைக்குத் தேவையான முரண்களை சமூகத்திலிருந்து அதாவது காதலுக்கு வெளியேயிருந்து மட்டுமே பெற்றுக்கொள்கின்றன.
அதனால் காதல்வயப்படும் ஆணும் பெண்ணும் நமது சினிமாக்களில் இருந்து உணர்வு ரீதியாக பெற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை. இந்த கருத்தியல் வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஒரே மீடியம் இலக்கியம் மட்டுமே. முரணாக நமது பெரும்பான்மைச் சமூகத்துக்கு அதில் பரிச்சயமே இல்லை.
முதலில் இந்த பாடல் ஒரு பகுதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும் என்ற எதார்த்தத்துக்கு முகம் கொடுப்போம்.
தொண்ணூறுகளுக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம் அடைந்த புற உலகத்தொடர்பு மற்றும் பொருளீட்டும் வாய்ப்பு என்பது, அது வரை மிதமாக நடந்து கொண்டிருந்த மாற்றங்களை ஒப்பு நோக்கையில் மிகப்பெரியது. அது இங்கு காலம் காலமாக நிலவி வந்த மென் வர்க்க சமன்பாட்டை கலைத்துப் போட்டிருக்கிறது.
உண்மையில் நிறைய சம்பாதிக்கிற, சமூக அழுத்தங்களை மீற நினைக்கிற ஒரு பெண்ணை எதிர்கொள்ளும் திராணியற்ற இளைஞர் கூட்டம் உருவாகி வருகிறது. அவளுடன் ஒத்துப்போவது என்பது ஏதோ சமரசம் போல உள்ளுக்குள் புழுங்குகிற, எதிர்ப்பை நேரடியாக முன்வைக்க முடியாமல் உள்ளுக்குள் அமிழ்ந்து போகிற ஒரு கூட்டமாக அவர்கள் மாறுகிறார்கள்.ஆனால் ஒரு பகுதி இளைஞர்கள் அதை தங்களது லும்பன் தன்மை மூலம் எதிர்கொள்கிறார்கள். அதுவொரு விரிசலடைந்த மனநிலை.
சிம்புவும், அநிருத்தும் அந்த இளைஞர் திரலைத்தான் தங்களது பாட்டில் பிரதிநிதுத்துவப்படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் சமூக அழுத்தம் இல்லாத ஒரு கட்டற்ற பெண்ணின் எல்லைகளைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பவர்கள். ஆனால் அவர்களாலும் அதை எதிர்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அதற்கான அடிப்படைக் கல்வி முறையோ, அத்தகைய சமூக அமைப்போ இங்கில்லை. எல்லா முறிவுகளிலும் எப்போதும் ஆணை மற்றுமே குற்றம் சொல்லும் ஒரு பொதுபுத்தி வேறு அவர்களை அழுத்துகிறது.
தோல்விக்குப் பின்னால் தனக்குள்ளே புலம்பும் தேவதாஸ் ஆண் மனநிலையை விடுத்து அது பெண்ணைத் தூற்றத் தொடங்குகிறது. பெரும்பான்மை பெண்கள் அடிமைத்தனத்துக்குள் இப்போதும் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற சூழலில் இத்தகைய பாடல்கள் சீரழிவை மேலும் கூட்டுகின்றன.
ஆனால் மேற்கிலிருந்து ஒரு அலையைப் போல வந்து மோதும் கருத்துகள் மிகத் தீவிரமான மாற்றத்தை சமூகத்துக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. அதை எதிர் கொள்ளும் கருவிகள் இல்லாமல் தங்களது சிதைந்த மனதை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் சமூகத்தின் மிகச் சிறிய பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்ற போதும், பெரும்பான்மை சமூகத்தின் மதிப்பீடுகளைக் கொண்டு இதை அளக்க முடியாது.
சிம்புவும் அனிருத்தும் நீங்கள் விழுமியங்களை உருவாக்கும் சமூகத்திற்குள் இல்லை. அதற்கு வெளியே அவர்கள் இயங்குகிறார்கள். இந்த மழையோ,வெயிலோ, நிலவும் அரசியல் கொந்தளிப்போ அவர்களுக்கு தெரியாது. இதே மனநிலையில் இயங்கும் பெரும் மக்கள் திரள் ஒன்றும் இங்கு உண்டு என்பது ஒரு சமூக எதார்த்தம். அதையும் நாம் கவனிக்காது கடந்துவிட முடியாது.