ஜெய்ப்பூர் இலக்கிய விழா – 1

பல நண்பர்களும் தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை அவர் கூகுளிலிருந்து தரவுகளை எடுத்துப் போட்டு பக்கங்களை நிரப்பி விடுகிறார் என்று சொல்வதை செவிமடுத்திருக்கிறேன்.  தற்கால எழுத்தாளர்களைப் பற்றி ஒரு ‘பழைய’ எழுத்தாளர் அப்படிச் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.  இந்தப் பிரச்சினையில் நான் சிக்கவில்லை என்றாலும் இது பற்றி எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் உண்டு.  இந்தியில் கூகுளை கூகுள் பாபா என்கிறார்கள்.  என்ன விபரம் கேட்டாலும் கொடுப்பார் கூகுள் பாபா.  ஆனால் வெறும் விபரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதி விட முடியுமா?

கூகுள் மூலம் நான் பல புத்தகங்களைப் படிக்கிறேன்.  செகாவின் அத்தனை கதைகளும் கூகுள் தேடலில் எனக்குக் கிடைக்கிறது.  இதேபோல் ஏகப்பட்ட திரைப்படங்கள், இசை என்று பல விஷயங்கள்.  எனவே எனக்கு கூகுள் என்பது ஒரு நூலகத்தைப் போலவே பயன்படுகிறது.  ஆனால் கூகுளைப் பயன்படுத்துவதற்கு நமக்கு ஒரு அடிப்படை அறிவு வேண்டும் இல்லையா?  உதாரணமாக, சமீபத்தில் 21 ஜனவரியிலிருந்து 25 ஜனவரி வரை நடந்து முடிந்த ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு நான் செல்லாமல் இருந்திருந்தால் மிக முக்கியமான ஒரு டஜன் எழுத்தாளர்களை இந்த ஆயுள் பரியந்தம் என்னால் தெரிந்து கொண்டிருக்க முடியாது.  Mona Eltahawy என்ற எழுத்தாளரின் பெயரை இங்கே நான் உச்சரித்து விட்டேன்.  இப்போது நானோ நீங்களோ அவரைப் பற்றி 500 பக்கத்துக்கு ஒரு புத்தகம் எழுதி விட முடியும்.  கூகுள் பாபா இருக்கிறார்.  ஆனால் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு நான் சென்றிருக்காவிட்டால் மோனாவை எனக்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை.

மோனா எல்த்தஹாவி பற்றி இந்த நிமிடம் வரை எனக்குத் தெரிந்த விபரம் இதுதான்:  நான் அவர் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  அவர் நூலை வாங்கியிருக்கிறேன்.  ஆனால் அது எத்தனை பணம் கொடுத்தாலும் ஈடாகாத விஷயம்.  அவர் பேச்சு அப்படியிருந்தது.  அவ்வளவு புரட்சிகரமான பேச்சை அப்போதுதான் நான் நேரில் கேட்கிறேன்.  Kathy Acker எழுதிய Pussy, the King of Pirates என்ற நாவலைப் படித்திருக்கிறேன்.  கேத்தியின் எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமானது.  அதேபோல் Germaine Greer என்ற ஆஸ்திரேலியப் பெண்ணியவாதி எழுதிய முக்கியமான நூலான The Madwoman’s Undergarments என்ற தொகுப்பைப் பலமுறை படித்திருக்கிறேன்.  CUNT என்ற பெயரில் பத்திரிகை நடத்தியவர் ஜெர்மெய்ன் க்ரேர்.  இதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பு.  அதற்குப் பிறகு பெண்ணியவாதிகளின் எழுத்தோடு எனக்குத் தொடர்பு விட்டுப் போயிற்று.  இப்போதுதான் மோனா எல்த்தஹாவி பற்றி அறிகிறேன்.  அதுவும் நேரில்.  அவர் அரை மணி நேரம் பேசினார்.  1000 பேர் அமர்ந்திருந்தோம்.  கிட்டத்தட்ட 1000 பேர் அரங்கத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.  மழை பொழிவது போல் பொழிந்தார் மோனா.  ஆங்கிலத்தில்.  அந்த அரை மணி நேரமும் Ruckus என்பார்களே அதுதான் நடந்தது.  ரகளை.  ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.  அவர் பேசி முடித்ததும் பத்து நிமிடம் கேள்வி நேரம்.  ஒரு வாசகர் கேட்டார்.  ”சில மதங்களில் பலதார மணம் (Polygamy) அனுமதிக்கப்பட்டுள்ளதே, இது பற்றி ஒரு தீவிரமான பெண்ணியவாதி என்ற முறையில் உங்கள் கருத்து?” கேள்வி கேட்டவரின் தொனி மோனாவிடமிருந்து பலதார மணத்துக்குக் கடுமையான எதிர்வினையும் தாக்குதலும்.  ஆனால் மோனா என்ன சொன்னார் தெரியுமா?  “பலதார மணத்தை நான் அனுமதிக்கிறேன்.  ஒரே பெண்ணோடு வாழ்வது செம போர்.  ஆனால் ஆண்களைப் போல் பெண்களுக்கும் பலதார மணம் அனுமதிக்கப்பட வேண்டும்.”  சிரிப்பு அலை அடங்கவே இரண்டு நிமிடம் பிடித்தது.

இப்படி ஜெய்ப்பூர் இலக்கிய விழா பற்றிச் சொல்ல 500 பக்கங்கள் உள்ளன.  எதைச் சொல்ல?  எதை விட?

எனக்கு Francophone இலக்கியத்தில் பெருவிருப்பம் உண்டு.  என்னுடைய எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.  உலகமெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை விட இன்று அரபி இலக்கியம்தான் உச்சபட்ச அளவில் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது.  அதில் ஒரு பிரிவுதான் மக்ரிப் இலக்கியம்.   Maghrib என்றால் அரபியில் மாலை.  மாலைத் தொழுகை மக்ரிப் தொழுகை என்று சொல்லப்படும்.  வடகிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளே மக்ரிப் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.   அல்ஜீரியா, லிபியா, மொராக்கோ, துனீஷியா ஆகியவை மக்ரிப் நாடுகள்.  இந்த நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஃப்ரான்ஸில் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர்.  இதில் லிபியாவைத் தவிர மற்ற மூன்றும் ஃப்ரெஞ்ச் காலனியாதிக்கத்தில் இருந்ததால் ஃப்ரெஞ்ச் இங்கே இரண்டாவது மொழி.  அதனால் ஃப்ரான்ஸில் அடைக்கலம் புகுந்த மெக்ரிப் நாடுகளைச் சேர்ந்த பலரும் அரபியிலும் ஃப்ரெஞ்சிலும் எழுதி ஃப்ரான்ஸ் தேசத்து எழுத்தாளர்களை விட சர்வதேசப் புகழை அடைந்து விட்டனர்.  அல்ஜீரியாவைச் சேர்ந்த Assia Djebar (1936 – 2015) அவர்களில் முக்கியமானவர்.  2005-இல் ஃப்ரெஞ்ச் அகாதமியின் தலைவராக இருந்தார்.  ஃப்ரான்ஸைச் சேராத ஒரு அந்நியர் ஃப்ரெஞ்ச் அகாதமியின் தலைவராக ஆனது அதுவே முதல் முறையாக அமைந்தது.  இன்னொரு பிரபலம், மொராக்கோவைச் சேர்ந்த தாஹர் பென் ஜெலோன்.  இவரது The Blinding Absence of Light பற்றிப் பலமுறை எழுதியும் பேசியும் இருக்கிறேன்.  இவருக்கு விரைவில் நோபல் பரிசு கிடைக்கலாம்.  அர்ஷியாவின் மொழிபெயர்ப்பில் அந்த நாவல் தமிழிலும் வந்துள்ளது.  இன்னொருவர், Abdellatif Laabi.  இவரது Rue du Retour என்ற நினைவுக் குறிப்புகள் ஃப்ரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இதை நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன்.  லாபியின் கருத்துக்களுக்காக மொராக்கோவில் எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.  அது பற்றிய குறிப்புகளே Rue du Retour.  பிறகு அவர் ஃப்ரான்ஸ் வந்து விட்டார்.  பாரிஸ் சென்ற போது அவரைச் சந்திக்க முயன்றேன்.  முடியவில்லை.  இப்படிப் பல ஃப்ராங்கஃபோன் இலக்கியவாதிகள் ஃப்ரான்ஸில் வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களில் ஒருவர் அப்துர்ரஹ்மான் வபேரி (Abdourahman Waberi).  அவரை ஜெய்ப்பூரில் சந்தித்துப் பேசியது ஒரு முக்கியமான நிகழ்வு.

புகைப்படத்தில் அப்துர்ரஹ்மான் வபேரியுடன்

 

photo