நேற்று எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை விட்டு விட்டேன். வட இந்தியர்களைப் பொறுத்தவரை கேரல்காரர்கள் முரடர்கள். ஆனால் முரடர்களைச் சமாளித்து விடலாம். ஆனால் தமிழர்கள் அத்தனை பேரும் பிரச்சினைக்குரியவர்கள். காஷ்மீரிகளைப் போல. தமிழர்கள் அத்தனை பேருமே பிரபாகரன்கள்தான். அப்படித்தான் வட இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது.
இது இலக்கியச் சூழலிலும் பிரதிபலிப்பதை அவர்கள் அவ்வப்போது பார்க்கிறார்கள். உதாரணமாக, பாரதீய ஞான பீடம் யாருக்குக் கொடுக்கலாம் என்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்து அறிஞர்கள், எழுத்தாளர்கள் தில்லியில் கூடியிருப்பர். தமிழின் முறை வரும். ஒரு எழுத்தாளர் அசோகமித்திரனின் பெயரை முன் மொழிவார். உடனே அடுத்த எழுத்தாளர் எழுந்து நின்று அசோகமித்திரன் எழுத்தாளரே இல்லை; வைரமுத்து தான் உண்மையான எழுத்தாளர் என்று சொல்வார். இன்னொருவர் எழுந்து இருவருமே போலிகள்; உண்மையான எழுத்தாளர் மு. வரதராசனார் தான். அவர் இறந்து போனாலும் posthumous ஆக அவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்வார். அதைத் தொடர்ந்து எழும் வாதப் பிரதிவாதங்கள் அடிதடி அளவுக்குப் போய் காவலாளிகளை அழைக்கும் நிலைமை வரும் என்று அதில் கலந்து கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் சொன்னார்.
ஒவ்வொரு ஆண்டுமே இப்படித்தான் நடக்குமாம். மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் இப்படி நடக்கவே நடக்காது. ஒருவர் சச்சிதானந்தனின் பெயரை முன்மொழிந்தால் எல்லோரும் அவர் பெயரையே சொல்வார்கள். இந்தக் காரணத்தால் யாரும் தமிழ் என்ற பெயரை எடுக்கவே அச்சமடைகிறார்கள்.
ஆக, ஜெயமோகனின் மறுப்பையும் வட இந்தியர்கள் மேலே கூறிய பின்னணியில்தான் பார்த்திருப்பார்கள். இந்த ஆள் இலக்கியப் பிரபாகரன் போல என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால் தமிழின் இலக்கிய அந்தஸ்து பற்றி வட இந்தியர்களின் அங்கீகாரம் நமக்குத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவிலேயே தமிழ் அளவுக்கு இலக்கிய சாதனைகள் வேறு எந்த மொழியிலும் நடந்திருக்கவில்லை. இன்று உலகமே கொண்டாடும் முராகாமியை விட நன்றாக எழுதும் பத்து எழுத்தாளர்கள் தமிழில் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய தேவை, தமிழ் இலக்கியம் ஆங்கிலத்துக்குப் போக வேண்டும். அவ்வளவுதான்.