பின்நவீனத்துவ போலி – 3

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதியது:

நான் நாற்பது வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவர் என வைத்துக்கொள்வோம். லண்டனிலும் அமெரிக்காவிலும் சிறப்புப் பயிற்சிகள் முடித்துள்ளேன். லட்சக்கணக்கான பிணியாளர்களை குணமாக்கியுள்ளேன். ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளேன்.

ஒருவர், என் அறுவைசிகிச்சை யுத்திகளை (surgical techniques) குறை சொல்லலாம். இந்த பிணியாளருக்கு இந்த மருந்து தரக்கூடாது என ஒருவர் வாதாடலாம். நான் அதிகமாகக் கட்டணம் வாங்குகிறேன் என குற்றம் சாட்டலாம். தேவையின்றி ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை பரிந்துரைக்கிறேன் என குற்றம் சாட்டலாம். இவை அனைத்தும் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள். அவற்றை நான் தாரளாமாக வரவேற்கிறேன்.

ஆனால், இவர் டாக்டரே இல்லை, இவர் போலி டாக்டர் என ஒருவர் சொன்னால், அது என் மீது வைக்கப்படும் விமர்சனம் இல்லை; அவதூறு. நான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

***

சாரு நிவேதிதா, ஜே ஜே சில குறிப்புகள் நாவலை போலி என்றாரே என நீங்கள் கேட்கலாம். சாரு நிவேதிதா தன் கருத்தை நிறுவ 1980களிலேயே அந்த விமர்சனத்தை தனி புத்தகமாகப் போட்டு, இலவசமாக விநியோகித்தார். எதற்கு? தமிழுக்காக. அந்தக் கட்டுரைகள் தற்போது, வரம்பு மீறிய பிரதிகள் புத்தகத்தில் உள்ளன. உயிர்மை வெளியீடு. நீங்கள் சாருவின் எழுத்தை போலி என்கிறீர்களா? உங்கள் கருத்தை நிறுவ ஐநூறு பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள். வேண்டாம், குறைந்தது ஐம்பது பக்கம்.