ஜெயமோகனை என் உடன்பிறந்த சகோதரனை விட அதிகம் நேசிக்கிறேன். பெருமாளைத் துதிப்போரையெல்லாம் துதிப்பேன் என்று சொன்ன ஆழ்வானைப் போன்றதுதான் என் நிலையும். இலக்கியம் யாருக்கு தவமாக இருக்கிறதோ அவர் என் போற்றுதலுக்குரியவர். அந்த வகையில் நான் ஜெயமோகனை நேசிக்கிறேன். என் காலத்தில், என் வயதில் ஜெ. அளவுக்கு இலக்கியத்தையும் தன் மொழியையும் நேசிக்கும் ஒருவரை நான் கண்டதில்லை. அதனால்தான் அவரை நான் நேசிக்கிறேன் – எங்களுக்கு இடையிலான ஆயிரத்தெட்டு முரண்பாடுகளுடன். அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது ஜெய்ப்பூரிலிருந்து அவருக்கு ஃபோன் செய்து பேசவில்லை; கண்டித்தேன். தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி வற்புறுத்தினேன்.
ஆனால் அவர் பத்மஸ்ரீ விருதை மறுத்து எழுதிய கடிதம் அவர் வாழ்நாளில் அவர் எழுதியதிலேயே ஆக மோசமானது. அதிலும் அவரது வாழ்வின் ஓர் அற்புதத் தருணத்தில் அவர் அப்படி எழுதினார். தன்னை விமர்சிப்பவர்களை தேசத் துரோகி என்றும் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் எழுதியிருந்தார். இன்னும் என்னென்னவோ வசைகள். இந்த வசைகள் அனைத்துமே பிஜேபிகாரர்கள் தங்களை விமர்சிப்பவர்களைக் குறிப்பிடும் சொல்லாடல்கள். அப்படியே அட்சரம் பிசகாமல் ஜெயமோகன் அதைச் சொன்னார். என்னை விமர்சிப்பவர்கள் எல்லாம் தேசத் துரோகிகளா? காட்டிக் கொடுப்பவர்களா? நான் கை கொடுத்தும் கையை உதறி விட்டுப் போனாரே ஜெயமோகனின் நண்பர் உலக நாயகர், அவர் தேசத் துரோகியா? அது வெறும் கோபம். அப்படித்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஜெயமோகனை விமர்சிப்பவர்களிடம் ஜெ. மீது கோபம் இல்லை; விமர்சனம் இருக்கிறது. ஒன்று, அந்த விமர்சனங்களுக்கு ஜெ. பதில் சொல்லலாம். அல்லது, அதைத் தூக்கிக் கடாசி விட்டுத் தன் போக்கில் போகலாம். மாறாக வசைபாடுவதில் இறங்கக் கூடாது, அதிலும் பிஜேபி தன்னுடைய விமர்சகர்களை வசை பாடும் மொழியில் இறங்குவது ஒரு கலைஞனுக்கு அழகல்ல.
எனக்கு மிக நன்றாகத் தெரியும், ஜெயமோகனை விமர்சிப்பவர்கள் யாருமே அரசாங்கத்தை அண்டிப் பிழைத்து ஆதாயம் அடைபவர்கள் அல்ல என்று. அவர்கள் அனைவரும் அரசாங்கத்தால் வேட்டையாடப் படுபவர்கள். அதிகாரத்தால் துரத்தி அடிக்கப்படுபவர்கள். அவர்களோடு எனக்கு ஒரு சிறிதும் கருத்து உடன்பாடு கிடையாது என்றாலும் அவர்கள் அரசாங்கத்தால் வேட்டையாடப் படுபவர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். பகத் சிங் கூட வெள்ளை அரசால் தேசத் துரோகி என்று சொல்லப்பட்டவன் தானே? ஜெ.வை விமர்சிப்பவர்கள் யாவரும் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களை ஜெ. தேசத்துரோகி என்றால் ஜெ. ஒரு போலீஸ் கமிஷனர் என்றோ அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி என்றோதான் சொல்ல முடியும். அப்படியெனில் யார் அரசாங்கத்தை, அதிகாரத்தை அண்டிப் பிழைத்து ஆதாயம் பெறுவது என்று திருப்பிக் கேட்கலாம் அல்லவா?
பத்மஸ்ரீ விருதை மறுத்து ஜெ. எழுதிய அனைத்தையும் நான் என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆங்கிலத்தில் எழுதும் ஒரு ஆசாமி நேற்று நான் கார்ல் மார்க்ஸின் வரப் போகும் புத்தகத்தைப் பாராட்டி எழுதியதும் “இந்தப் பிழைப்பு சாருவுக்கு எதற்கு? இப்படி கார்ல் மார்க்ஸுக்கு ஜால்ரா போடுவதற்குப் பதில் கமலுக்கு சொம்பு அடிக்கலாமே?” என்று எழுதியிருந்தாராம். படித்தவன் தான் கீழ்மையில் உழல்கிறான் என்று ஒருமுறை ஜெயமோகன் எழுதியிருந்தார். ஒருவேளை ஜெ. தன் நண்பரான இவரைப் பார்த்துத்தான் அப்படி எழுதியிருந்தாரோ என இப்போது சந்தேகிக்கிறேன். இவ்வளவு கீழ்மையிலா ஒரு படித்தவன் யோசிப்பான்? கமலோடு ஜெ. சிநேகமாக இருக்கிறாரே, அதற்குப் பெயர் சொம்பு அடிப்பதா? இதை நான் அந்த ஜெ. ரசிகரிடம் கேட்கிறேன்.
கமல் ஒரு நடிகர். நல்ல நடிகர். அவரைப் போல் நல்ல நடிகர்கள் நூறு பேர் இருக்கிறார்கள். ஒருவர் எழுதியதை ஒரு நடிகர் நடித்துக் காண்பிக்கிறார். ஆனால் நானோ நானே எழுதுகிறேன். நானே சிருஷ்ட்டிகிறேன். நான் கடவுள். நான் சிருஷ்டி. யாருடைய குரலையோ நான் ஒலிக்கவில்லை. என் குரலே என் எழுத்தில் ஒலிக்கிறது. நடிகர்கள் மறைவார்கள். எழுத்தாளன் மறைவதில்லை. கணியன் பூங்குன்றன் மறையவில்லை. கபிலன் மறையவில்லை. சங்க கால அரசன் முன்னே யாழ் இசைத்தவரும் நடித்தவரும் மறைந்து விட்டார்கள். சங்க காலத்துக்கு ஏன் போக வேண்டும்? சென்ற தலைமுறை எம்.கே. தியாகராஜ பாகவதரையே காணோம். சிவாஜியின் நடிப்பைக் கண்டு இன்றைய இளைஞன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். ஆனால் எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்கள் யாரும் மறையவில்லை. தமிழ் உள்ளளவும் இருப்பார்கள்.
எனவே ஆங்கிலத்தில் எழுதும் அந்தக் குஞ்சுவுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் எந்த நடிகருக்கு சொம்பு அடிக்கும் தேவையில்லை. நடிகர்கள்தான் எனக்கு சொம்பு அடிக்க வேண்டும். நடிகர்கள்தான் என் வீடு தேடி வர வேண்டும். வராவிட்டாலும் நட்டம் எனக்கில்லை. நான் காட்டில் பொழியும் அருவி. வானில் பறக்கும் பறவை. எனக்கு நானே போதும். என் இருப்பு என் சுவாசத்தில் இருக்கிறது. என் சுவாசம் என் எழுத்து.
மேலும், ஜி. கார்ல் மார்க்ஸ் என் மகனைப் போன்றவர். அவருக்கு நான் ஏன் ஜால்ரா அடிக்க வேண்டும்? அவர் என்ன ரஜினி காந்தா? ரஜினியையே நான் விமர்சித்தேன், வெள்ளத்துக்காக 10 லட்சம் கொடுத்தது பற்றி. எனக்கு யார் தயவும் தேவையில்லை. நான் இறைவனின் தயவில் வாழ்கிறேன். ஒவ்வொரு இரவும் உறங்கும் முன் நாளை எனக்கு உண்டெனில் இன்னும் கொஞ்சம் எழுதுவேன் என்று மட்டுமே பிரார்த்தனை செய்யும் ஓர் எளிய மனிதன் நான்.
பின் வருவது ஜி. கார்ல் மார்க்ஸ் தன் முகநூலில் எழுதியிருப்பது. அதற்கு முன்னே உள்ள குறிப்பில் கார்ல் இப்படி எழுதியிருக்கிறார்:
”இந்த விருது மறுப்புக்குப் பின்னால் கலைஞனின் குரலே இல்லை என்பது தான் துயரம். இது ஜெயமோகனின் வாழ்நாள் அபத்தம். ஆமாம். ஜெயமோகன் இந்த விருதைப் பெற்றிருக்க வேண்டும். அதில் ”நான் இந்த தேசத்தின் பண்பாட்டை நம்புகிறேன். அதன் பன்மைத்துவத்தை மதிக்கிறேன். அதை மூர்க்கமாக நிராகரிக்கும் அறிவு ஜீவிகளை எதிர்க்கிறேன். அதே சமயம், இந்த பண்பாட்டை ஒற்றைப்படையான பண்பாடாக சுருக்கி எதிர்களைக் கட்டமைக்கும் மத வெறியையும் எதிர்க்கிறேன்” என்று சொல்லியிருக்க வேண்டும்”.
கார்ல் மார்க்ஸ்:
ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை மறுத்தவுடன், எனது நண்பர்கள் சிலர் கண்ணீருடன் நெகிழ்ந்திருந்தனர். ஜெமோவின் மாமனாருக்கும் மாமியாருக்கும் கூட விருதை மறுத்ததில் வருத்தம்தான் என்று அவரே பதிவு செய்திருந்ததால், அந்த ஈரத்தில் நானும் நனைந்து போனேன். விருதுக்காக முயற்சி செய்த நண்பர்களுக்கு கூட ஜெமோ வருத்தம் தெரிவித்திருந்த பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. நான் இந்த அரசு தரும் எந்த விருதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் முன்பே அறிவித்திருந்தார். பிறகு ஏன் அவரது நண்பர்கள் அது தெரியாமல் விருதுக்கு முயன்றார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.
விருதுகளை கலைஞர்களோ, எழுத்தாளர்களோ மறுப்பது வரலாற்றில் புதிதொன்றும் இல்லை. விருது மறுப்பு என்பது அதிகார எதிர்ப்பாகவும், ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் செயல்பாடாகவும் பயன்படுத்தப்படும் காத்திரமான கருவி.
ஆனால் ஜெமோ என்ன சொல்கிறார்?
“அரசை அண்டி வாழும், அரசை மிரட்டிசுயலாபங்களை அடைந்து திரியும்ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக் கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப் போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே” என்கிறார்.
மேலே சொல்லியிருக்கும் காரணமென்பது முழுக்க முழுக்க ஒரு வலதுசாரி அமைப்பைக் காப்பாற்றும் முயற்சி தான். ஒற்றைப்படையான பண்பாட்டு வெறிக்கும், அவர் சொல்லும் பன்மைத்துவப் பண்பாட்டுக்கும் நடுவில் நின்று கொண்டு ஜெமோ ஆடும் நடனம் அது. ஆனால் இந்த தந்திர நடனத்துக்கு இப்போது வந்திருப்பது ஒரு சோதனை. இந்த விருதை ஜெயமோகன் பெற்றுக்கொள்வது அவரை அம்பலப்படுத்திவிடும் என்பது ஒரு புறம் இருக்க, மாற்றுக் கருத்துடையவர்கள் மீது, அவர் சுமத்தும் அவதூறுகளுக்கு ஒரு தடையை ஏற்படுத்தும். இந்த விருதை விட அந்த வெளி அவருக்கு முக்கியம். அது தான் அவரது அரசியல்.
ஜெயமோகனின் அரசியலை, மிக எளிமையான வாக்கியங்களில் புரிந்து கொள்ள முயன்றால், ”இந்த தேசத்தின் பண்பாட்டின் மீதும் கலாசாரத்தின் மீதும் நம்பிக்கையுள்ள எழுத்தாளன். அந்த பண்பாட்டை அதன் மீதுள்ள புரிதல்கள் இல்லாமல் நிராகரிக்கிற இடதுசாரிகள், பெரியாரிஸ்ட்கள் மற்றும் வேறு இயக்கங்கள் மீது கடும் விமர்சனத்தை வைக்கிற ஒரு எழுத்தாளன். இந்து பண்பாடு என்பது ஒற்றைப்படையானது அல்ல, அது பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என நம்பும் எழுத்தாளன்.” இது தான் அவர் தன்னைக்குறித்து கட்டமைக்க விரும்பும் பிம்பம். இப்போது இந்த அடிப்படையில் அவரது விருது மறுப்புக்கான காரணங்களை ஆராய்வோம்.
”தேசவிரோதக் கருத்துகளுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப் போன்றவனே என்பார்கள், அதனால் தான் விருதை மறுக்கிறேன்” என்று பதட்டமாக எதற்கு கையை உதறுகிறார் ஜெயமோகன்??
“நான் கலைஞன், கலைஞன் மட்டுமே” என்று சொல்கிறார் இல்லையா? அது நிஜமென்றால்அவர் இவ்வாறு சுட்டுவது யாரை என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டும். யார் அவர்கள்? கம்யூனிஸ்ட்களா?? பெரியாரிஸ்ட்களா? தலித்தியவாதிகளா? என்ஜிவோக்களா? இதை ஏன் வெளிப்படையாக அவரால் சொல்ல முடியவில்லை?
காரணம் இதுதான்:
அதை வெளிப்படையாகச் சொன்னால், அவர் நம்பும் இந்த ”தேசத்தின் பன்மைத்துவத்தை” சிதைப்பவர்கள் யார் என்பதையும் அவர் சொல்ல வேண்டியிருக்கும். எம்.எஃப் ஹுசைனை இந்த நாட்டை விட்டுத் துரத்திய ”கலாச்சார தலிபான்கள்” யார் என்று சொல்ல வேண்டும். கல்புர்கியைக் கொன்ற ஒற்றைப்படையான மதவாதம் எது, அதை முன்னெடுப்பவர்கள் யார் என்றும் சொல்ல வேண்டும். இஸ்லாமியர்களை எதிராகக் கட்டமைத்து, ஒற்றைப் பண்பாட்டை அவர்கள் மீது வன்முறையாகத் திணிப்பவர்கள் யார் என்றும் சொல்லவேண்டும். இதை அவரால் சொல்ல முடியாது. ஒரு அரசியலாளன் ஜெயமோகன் எழுத்தாளன் ஜெயமோகனிடம் தோற்றுத் தலைகுனியும் இடம் அது.
ஆனால் அந்தக் கசப்பை மிகவும் தந்திரமாக, மற்றவர்கள் மீது சுமத்துகிறார். ‘எளிய எழுத்தாளன்’ என்பது முதல் ‘குடும்பத்தின் கண்ணீர்’ என்பது வரைப் பயன்படுத்துகிறார். இதில் என் நண்பர்களின் கண்ணீரும் இருக்கிறது என்பது தான் என்னை எழுதத் தூண்டுகிறது.
இந்த விருது மறுப்புக்குப் பின்னால் கலைஞனின் குரலே இல்லை என்பதுதான் துயரம். இது ஜெயமோகனின் வாழ்நாள் அபத்தம். ஆமாம். ஜெயமோகன் இந்த விருதைப் பெற்றிருக்க வேண்டும். அந்த மேடையில் தனது அரசியல் என்ன என்பதை மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியிருக்க முடியும். ”நான் இந்த தேசத்தின் பண்பாட்டை நம்புகிறேன். அதன் பன்மைத்துவத்தை மதிக்கிறேன். அதை மூர்க்கமாக நிராகரிக்கும் அறிவு ஜீவிகளை எதிர்க்கிறேன். அதே சமயம், இந்த பண்பாட்டை ஒற்றைப்படையான பண்பாடாக சுருக்கி எதிர்களைக் கட்டமைக்கும் மத வெறியையும் எதிர்க்கிறேன்” என்று சொல்லியிருக்கவேண்டும்”.
அதை அவரால் சொல்ல முடியவில்லையே ஏன்??
இங்கு தான் அவர் கலைஞனைக் கைவிட்டு ஒற்றைப்படையான கலாச்சார தேசியத்தைக் கட்டமைக்க முயலும் வலதுசாரி அமைப்பைக் காப்பாற்றும் அவலம் நேர்கிறது. இது ஒரு விவாதமாக மாறுகிறபோது “நான் கலைஞன் அல்லவா” என்ற சொல்லாடலை முன்னிறுத்தி, கண்ணீர்த் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இங்கு அவர் செய்வது, “தேசத்தை காட்டிக்கொடுப்பவர்கள்” என்ற சொல்லாடலை உருவாக்குவதன் மூலம், தன்னை நம்பி வாசிக்கும் எளிய வாசகனை ஹிந்துத்துவத்திற்குள் பிணைப்பதுதான். அதற்காகத் தான் இந்த விருது வழகப்படுகிறது என்று அவருக்குத் தெரியும். அதுதான் அவரை தத்தளிப்புக்கு உள்ளாக்குகிறது. அதே நேரத்தில் நான் அரசை எதிர்க்கவில்லை என்றும் அரற்ற வைக்கிறது. இது இந்த தேசம் எனக்களிக்கும் விருது என்று பசப்ப வைக்கிறது.
எல்லாக் கலாச்சார மையங்களிலும் இடது சாரிகள் ஆக்கிரமித்திருந்தார்கள், இப்போது அது மாறத் தொடங்குகிறது என்று சொன்ன ஜெயமோகன், அந்த இடம் இப்போது காவிகளால் நிரம்பத் தொடங்குகிறது என்பதை மறைக்க விரும்புகிறார்.
அதனால்தான் விருதுகள் குறித்து, தான் இதுவரை எழுதியதன் முன்னே அவர் சரணடைய நேர்கிறது. தானே வெட்டிய குழிக்குள் ஜெயமோகன் வீழ்ந்த இடமது. விருது மறுப்புக்கான செண்டிமெண்ட் காரணங்கள் முளைக்கும் இடமும் அதுதான்.
குழப்பமான சொல்லாடல்களால் தனது அரசியலை மறைத்துக் கொள்வது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ”பெரியாரிய மூர்க்கம்” என்று சொல்லிக்கொண்டே அவரைக் கண்டால் விழுந்து வணங்குவேன் என்று சொல்வது, பிராமணர்களால் எதையும் உருவாக்க முடியாது, ஆனால் அவர்கள் நல்ல தொகுப்பாளர்கள் என்று “இனவாதம்” பேசிக்கொண்டே, அவர்கள் மீதான விமர்சனங்களை ”இனவெறி” என்று வரையறுப்பது, கம்யூனிஸ்ட்கள் தான் இந்த தேசத்தின் பண்பாட்டை அழித்தவர்கள் என்று கூறிக்கொண்டே அவர்கள் தான் ”மனசாட்சியின் குரல்” என்று மருகுவது என நிறைய உண்டு.
இந்த விருது மறுப்பிலும் அது தான் நடந்திருக்கிறது. தான் நம்புவது ”பன்மைத்துவப் பண்பாடு” என்று சொல்லிக்கொண்டே, ஒற்றைப்படையான பண்பாட்டை வலியுறுத்தும் ஒரு வலதுசாரி அமைப்புக்கு முட்டுக்கொடுத்தபடி, விருதை மறுத்து ஜெமோ புரிந்திருப்பது ஒரு சாகசம். அவரைப்போலவே நமக்கும் வெற்று சாகசத்தில் ஆர்வம் இல்லையென்பது தான் இதில் முரண். அவர் இப்போது மறுத்த இந்த விருதுக்காகவும், வரும்காலங்களில் மறுக்கப்போகும் விருதுகளுக்காகவும் வாழ்த்துக்கள் !!