கணேச குமாரனின் மிஷன் காம்பவுண்ட் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நேற்று காலை பதினோரு மணி அளவில் நடந்தது. நானும் கார்ல் மார்க்ஸும் சரவணனும் சென்றிருந்தோம். பத்து மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லியிருந்ததால் பப்புவுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு, ஸோரோவுக்கு உணவு கொடுக்க நேரமில்லாமல் ஒன்பதரை மணிக்கே கிளம்பி விட்டேன். ஸோரோவுக்கு உணவு கொடுப்பது எளிதல்ல. பத்துப் பதினைந்து நிமிடம் பிடிக்கும். ஒன்பதரைக்குக் கிளம்பினால் பத்து மணிக்கு கே.கே. நகர் (என்ன ஒரு ’அழகான’ பெயர்!) போய் விடலாம் என்பது என் கணக்கு. ஞாயிறு என்பதால் வாகன நெரிசல் இராது. என்னை நண்பர்கள் பங்க்சுவல் பரமசிவம் என்று கிண்டலடிப்பதற்கு ஏற்றவாறு சரியாகப் பத்து மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் வாசலில் நின்றேன். சரவணனைத் தவிர வேறு யாரையுமே காணோம். மிகச் சரியாக பத்து மணிக்கு அங்கே நிற்பேன் என்று எட்டு மணி அளவில் சொல்லியிருந்த கார்ல் மார்க்ஸையும் காணோம். கிளம்பிய அவசரத்தில் காஃபி கூட குடிக்காமல் வந்திருந்ததால் சரவணனை அழைத்துக் கொண்டு எதிரே இருக்கும் ஏதோ ஒரு பவனில் காஃபி குடிக்கப் போனேன். அங்கே கணேச குமாரன் மற்றும் நண்பர்கள் இருந்தார்கள்.
கூட்டம் சரியாக பதினோரு மணிக்கு ஆரம்பித்த தருணத்தில் கார்ல் மார்க்ஸ் வந்தார். உங்க கிட்ட திட்டு வாங்கக் கூடாதுன்னு ஓடி ஓடி வந்தேன்… ராத்திரி படுக்கப் போகும் போது ரெண்டரை மணி என்றார். என் தம்பியைப் பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள் என்றேன். அடப்பாவி, ஏங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி ஒரு வளரும் எழுத்தாளனைக் கொல்றீங்க என்றார். என்ன விஷயம் என்றேன். குமரகுருபரன் கவிதை வெளியீட்டு விழாவில் ஜெயமோகனை சந்தித்துக் கை கொடுத்த போது, வாங்க, நீங்கதான் தமிழ்நாட்டு லோசாவான்னு கேட்கிறார் என்றார். எனக்கே எழுதியது மறந்து விட்டது. தம்பியின் ஞாபக சக்தி வியப்பூட்டியது.
மதியம் ஒரு மணிக்கு பால குமாரனை சந்திக்க வேண்டியிருந்ததால் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே பனிரண்டரை மணிக்குக் கிளம்பி விட்டேன். பாலா வீடு என் வீட்டிலிருந்து ரொம்பப் பக்கம். நடந்தே போய் விடலாம். முன்பெல்லாம் தினந்தோறும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பார்ப்பேன். அவருக்கு என் மீதும் என் எழுத்தின் மீதும் மிகுந்த பிரியமும் மரியாதையும் உண்டு. என்னை ஒருமையில் அழைக்கும் ஒன்றிரண்டு பேரில் அவரும் ஒருவர். அன்று பாலா வீட்டில் பூஜை போல. பத்து இருபது பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பாலா சாப்பிட்டு விட்டதால் எனக்குத் தனியாக சாப்பிடக் கூச்சம். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். ”ஏன், ஞாயிறு என்பதால் வீட்டில் விசேஷ சாப்பாடா?” என்றார் பாலாவின் விசிறி. அதெல்லாம் இல்லை என்று மேலும் கூச்சத்துடன் சொன்னேன். பாலா புரிந்து கொண்டார். ஒரு தட்டில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பால் பாயாசம் எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள். பிரமாதமான ருசி. ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பாலா என்ன பேசினார் என்று சொன்னால் அவர் வீட்டு வாசலில் பக்தர்களின் கூட்டம் கூடி விடும். அதனால் அது வேண்டாம்.
வீட்டுக்குத் திரும்பிய போது இரண்டரை. அவந்திகாவுக்கு நான் வீட்டில் இல்லையென்றால் வேலை இரட்டிப்பாகி விடும். ஸோரோவுக்கு இன்னும் உணவு கொடுக்கப்படவில்லை. உடனடியாகக் கொடுத்தேன். என் மேல்தான் தவறு. கணேச குமாரனிடம் ஃபோன் செய்து கேட்டுக் கொண்டு சாவகாசமாகக் கிளம்பியிருக்கலாம்.
நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலை என் வாழ்நாள் உள்ளளவும் மறக்க முடியாது. பனிரண்டரை மணிக்குக் கிளம்பிய போது கார்ல் மார்க்ஸும் சரவணனும் என்னோடு கொஞ்சம் வெளியே வந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொடுக்க என்று நினைக்கிறேன். மதியம் அவர்களோடு லஞ்ச் சாப்பிட முடியாத ஏமாற்றம் எனக்கு. மாலை ஐந்து மணிக்கு மகா முத்ரா வாருங்களேன், கொழுக்கட்டை, பணியாரம் எல்லாம் சாப்பிடலாம் என்று மார்க்ஸிடம் சொன்னேன். எனக்குக் கொழுக்கட்டை சாப்பிட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று கூட கிடைக்கவில்லை. மகா முத்ராவில் தினமும் மாலை ஐந்து மணிக்குக் கொழுக்கட்டை கிடைக்கும். அதற்காக வீட்டிலிருந்து கிளம்ப எனக்கு அலுப்பு. இதையெல்லாம் மனதுக்குள் வைத்துக் கொண்டு மார்க்ஸிடம் கேட்டேன். ஐந்து மணிக்கு வாருங்களேன், மகா முத்ரா பக்கம்?
”கொஞ்சம் தூங்கிக்கிறேன் சாரு. காலங்கார்த்தால எழுப்பி விட்டிட்டீங்க, அதனால ’கேரா’ இருக்கு. கொஞ்சம் தூங்கிக்கிறேனே. நாளை பார்ப்போம்.”
என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு டயலாகைக் கேட்டதில்லை. காலங்கார்த்தால என்று அவர் குறிப்பிட்டது எட்டரை மணியை. நல்ல வேளை, இந்தத் தம்பி என் மகனாக வந்து பிறக்கவில்லை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு ஆட்டோவில் ஏறினேன். கார்ல் மார்க்ஸின் தந்தை இந்த தவப்புதல்வனை எப்படி எதிர்கொண்டார் என்று அவர் முகநூலில் எழுதியிருந்தார். அது பற்றி ஃபெப்ருவரி 27 அன்று மேடையில் சொல்கிறேன்.
நேற்று பேசியதன் காணொளி இணைப்பு கீழே: