கிழக்கு பதிப்பகத்திலிருந்து இரண்டு நூல்கள் வெளிவந்து விட்டன. எங்கே உன் கடவுள்? துக்ளக்கில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அட்டை பிரமாதம். விலை 90 ரூ. நியூஸ் சைரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கடைசிப் பக்கங்கள் வந்து விட்டது. விலை 110. பின்னட்டை பிரமாதம். (இரண்டிலும்தான் அடியேனின் புகைப்படங்கள் உள்ளன!) இரண்டிலுமே புகைப்படம் எடுத்தவரின் பெயர் இல்லை; பதிப்பாளரின் மேல் பழி போட முடியாது; பிழை திருத்தம் செய்தவன் நான் என்று ஞாபகம் வந்ததும் வயிறு கலங்கியது. புகைப்படக் கலைஞர் பிரபு காளிதாஸ். ஜெயமோகன் பாணியில் ஒரு மன்னிப்பு எழுதி விடலாமா என்று நினைத்தேன். உடனே கார்ல் மார்க்ஸ் ஞாபகம் வந்தது. ஐயோ, பிரபுவிடமும் வாங்கி, கார்ல் மார்க்ஸிடமிருந்தும் வாங்கி… தாங்குமா என்று யோசித்து, பிரபுவுக்கு ஃபோனைப் போட்டு பேசினேன். அடப் போங்க சார், காலங்கார்த்தால விளையாடிக்கிட்டு என்றார். அப்பாடா என்று நிம்மதி அடைந்தேன்.
உலகப் புகழ் பெற்ற ஓவியர் சீனிவாசனை சென்ற ஆண்டு தான் இளங்கோவின் புத்தக வெளியீட்டில் சந்தித்தேன். கண்டதும் காதல் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எனக்காக பேனரும், மற்ற சில விஷயங்களும் செய்து கொடுத்தார். ஒரு மேஸ்ட்ரோவிடம் போய் இப்படிக் கேட்கலாமா என்று உள்ளம் அடித்துக் கொண்டது. ஆனாலும் ஆசை யாரை விட்டது. அவர் உருவாக்கிய படைப்புகளில் ஒவ்வொரு அணுவிலும் கலையின் வெளிப்பாடு. சீனிவாசனுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை சம்பிரதாயமாகி விடும். வரும் காலத்தில் என் புத்தகம் ஒன்றை அவருக்கு சமர்ப்பிப்பேன்.
சீனிவாசன் பற்றி பிரபு காளிதாஸ் எழுதியிருப்பது:
முதலில் என் அன்பும் மரியாதையும் ஓவியர் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாருவின் புத்தக வெளியீட்டுக்கு அவர் செய்த டிசைன் அற்புதத்தின் உச்சம். அவர் தேர்வு செய்திருக்கும் வண்ணங்கள் Retro ஸ்டைலில் அதகளம்.
ஸ்ரீநிவாசன் அவர்கள் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவர் பற்றி அதிகம் நான் சொல்லத் தேவையே இல்லை. தற்போது அவர் ஃபேஸ்புக்கில் இல்லை. பதினைந்து வருடங்கள் முன் நான் தஞ்சையில் வைத்த ஃபோட்டோகிராஃபி எக்ஸிபிஷன் சம்பந்தமாக நிறைய நுணுக்கங்கள் உதவிகள் செய்தவர். அவருடைய ஓவியங்களுக்கு நான் தீவிர ரசிகன்.
சாருவுக்கு இவர் செய்திருக்கும் டிசைன்கள் அனைத்துமே ரகளை. அதில் ஒன்று இதோ கீழே. மேலும், புகைப்படத்தை சிதைக்காமல், தலையை சுற்றி வெட்டி ஒட்டாமல், அப்படியே இறக்கி வண்ணம் குலையாமல் வைத்திருப்பார். ஏனென்றால், அவர் கலைஞர். அங்குதான் இருக்கிறது விஷயம். அவர் தளத்தில் கூட சேர்ந்து உழைப்பவர்கள் பெயர் ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் அவர் வைக்கும் ஆர்ட் ஷோ-க்களில் குறிப்பிடும் கண்ணியம் கொண்டவர். இந்த போஸ்டரில் கூட கீழே வலது மூலையில் என் பெயரைக் குறிப்பிட்டிருப்பார். அதற்குப் பெயர் தான் ATTITUDE.