அடியேனைப் பற்றி என் நண்பரின் மகள் சொல்லும் காட்சி…

என் பால்யத்தை வண்ணமயமாக்கிய புத்தகங்கள் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் (அதுவும் சிறப்பிதழ் குண்டு புக் போட்டால் மீ செம ஹாப்பி) சம்பக், டிவிங்கிள், அமர் சித்ர கதா. படித்துவிட்டு கதைப் பற்றி நண்பர்களிடம் விவாதம் வேறு நடக்கும். அப்போது என் தோழர்களிடம் சொல்லுவேன் ஒரு நாள்….நிச்சயம் ஒரு நாள் நான் ரைட்டரா ஆவேன். நிறைய கதை எழுதுவேன்னு. எல்லாரும் செம ஜோக் கேட்ட மாதிரி சிரிப்பாங்க. நான் சோகமா என் ஆச்சிகிட்ட போய் சொல்வேன். என் ஆச்சி அவங்க கிடக்கறாங்க, நீ இப்பவே பெரிய ரைட்டர் தான் முகத்தை வழித்து திருஷ்டி சுற்றுவாள். எழுத்தாளராகவேண்டும் என்ற கனவை விதைத்தது புத்தகம் தான். அது ஓரளவுக்கு நடந்துவிட்டது ஆனாலும் ஒரு ரைட்டரை என் வாழ்க்கையில் முதன் முதலாக சந்தித்தது என்றால் அது சாரு நிவேதிதாவைத் தான்.

அப்போதெல்லாம் அண்ணாநகரில் இருக்கும் அத்தை வீட்டுக்கு அப்பா அடிக்கடி அழைத்துச் செல்வார். அப்பாவுடன் பைக்கில் செல்வது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பா என்னுடைய கசின் இயக்குநர் கே ராஜேஷ்வருடன் பேசிக் கொண்டிருப்பார் (அப்போது அவருடைய பெயர் சோம சுந்தரேஸ்வர்) ஒரு முறை அங்கு போனபோது ஒருவர் கசினுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்பா அவர் தான் ரைட்டர் சாரு நிவேதிதா என்றார் என்னிடம். நான் அப்போது சாருவின் எழுத்தை படித்ததில்லை. ஆனால் ஒரு ரைட்டர் எப்படி இருப்பார் என்ற என் கற்பனைக்கு கரடுமுரடாக ஒரு உயிர் கொடுத்தவர் தான் சாரு. ரைட்டர் என்றால் மிகவும் ஏழையாக, ஒரு வேட்டி சட்டை போட்டிருப்பார் என்று எங்கோ மனத்தில் பதிந்த ஒரு சித்திரம் வேகமாக அழிந்து வாட்டசாட்டமாக ஒரு காட்டான் கணக்கில் ஒருவர் உட்கார்ந்து காரசாரமாக ஏதோ விவாதிக்கொண்டிருந்தார். அவருடைய தோற்றம் வேறு மாடர்னாக இருக்கவே இவர் ரைட்டராக இருக்க முடியாது. ஏதோ ஒரு ஆக்டர் என்று நானே முடிவு செய்துவிட்டேன். அதன் பின் பல வருடங்கள் கழித்து மெட்ராஸ் டாக்கீஸில் வேலை செய்த போது சாருவை சந்தித்த போது இந்த நிகழ்ச்சியையும் அவரைப் பற்றிய என் மனப்பதிவையும் சொன்னேன். மென்மையாக சிரித்தார்.

சாருவைப் பற்றி எதிர்மறையாக நிறைய படித்திருக்கிறேன்.ஆனால் அவரைப் போய் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று புரிவதில்லை. அவரை சந்தித்த ஒரு சில தடவை அவ்வளவு அன்புடனும் மரியாதையுடனும் தான் பேசுவார். வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போலத் தான் இருக்கும் அவர் உச்சரிப்பு. அடிக்கடி பெயரைச் சொல்லி பேசும் பழக்கம் சாருவுக்கு உண்டு. அதுக்கில்லை உமா, அப்படியா நினைக்கறீங்க உமா என்று அழகாகப் பேசுவார். நீங்க ரொம்பவே தவறா புரிஞ்சுக்கப்பட்டிருக்கீங்க சாரு என்பேன் ஆதங்கத்துடன். அதைப் பற்றியெல்லாம் அவர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. எழுதுவதை ஒரு தவமாகத் தான் செய்கிறேன் என்பார். எங்களுக்காக தினமணி டாட் காமில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் பழுப்பு நிறப் பக்கங்கள் மூலம் அவருடைய அர்ப்பணிப்பையும் குழந்தை போல உற்சாகத்துடன் படிச்சிங்களா உமா, நிசமா பிடிச்சுதா என்ற குரலையும் மறக்க முடியாது.

பழுப்பு நிற புகைப்படம் இப்போது புத்தகமாக உருக் கொண்டு நாளை வெளிவர இருக்கிறது என்பது எனக்கு பர்சனலாக மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

இத்தருணத்தில் பிரியமான எழுத்தாளர் சாருவை மனதார வாழ்த்துக்கிறேன்.

விழாவிற்கு நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி வரவேற்கிறேன்.

உமா ஷக்தி

படித்து விட்டு மனம் கசிந்து விட்டது உமா.  நன்றி.  நாளை சந்திப்போம்…

சாரு